தமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்!

- in அறிக்கைகள்​

தமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்!

தமிழ்நாடு இத்தனை ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து வந்த அணை பாதுகாப்பு மசோதாவினை ஜூன் 13, 2018 அன்று இந்திய பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த மசோதா கடந்த ஆண்டு ஒப்புதலுக்கு அளிக்கப்பட்ட போது மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார். அப்போது சிறையிலிருந்தே தனது கண்டனத்தை பதிவு செய்து அறிக்கையாக எழுதி அளித்திருந்தார். மே பதினேழு இயக்கம் இந்த மசோதாவினை ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வருகிறது.

 

அணை பாதுகாப்பு மசோதாவின்படி, அணைகள், நீர்த்தேக்கங்கள் மீதான மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெல்லப்பட இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுதும் இருக்கும் 5300 நீர்த்தேக்கங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்பட இருக்கின்றன. இதன்படி முல்லைப் பெரியாறு உள்ளிட்ட அணைகளின் மீதான தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டு உரிமை நீக்கப்பட்டு மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படும். மேலும் பரம்பிகுளம், பெருவாரிப்பள்ளம், துணைக்கடவு உள்ளிட்ட அணைகளின் மீதான நிர்வாக உரிமைகளையும் தமிழ்நாடு இழக்க இருக்கிறது. மேட்டூர் அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான உரிமையும் தமிழ்நாட்டிற்கு இல்லாமல் கேள்விக்குறியாகப் போகும்.

காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் படியான காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்காமல் அதனை மிகவும் நீர்த்துப் போகச் செய்து ஒரு செயலற்ற காவிரி ஆணையத்தினை உருவாக்கிய மத்திய அரசிடம் நாம் என்ன நேர்மையை எதிர்பார்த்துவிட முடியும்.

தண்ணீர் தனியார்மய மசோதாவினை நிறைவேற்றுவதும் இந்த மசோதாவின் நோக்கமாக இருக்கிறது. நீர் ஆதாரங்களை வணிகப் பொருளாக மாற்றி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒப்படைப்பதே தண்ணீர் தனியார்மய மசோதாவின் அடிப்படை.
அணை பாதுகாப்பு மசோதாவின் மூலம் நீர் ஆதாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதால், எளிமையாக மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவின் நீர் ஆதாரங்களையும் வணிகப் பொருளாக மாற்றி விட முடியும். தண்ணீர் என்பது உரிமையல்ல, அது பண்டம் என சொல்லும் WTO ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே அணை பாதுகாப்பு மசோதாவும் கொண்டு வரப்படுகிறது.

மாநிலப் பட்டியலிலிருந்து பிடுங்கி மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்படும் துறைகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் லாப நோக்கிலேயே செய்யப்படுகிறது. அணை பாதுகாப்பு மசோதாவின் மூலம் தமிழ்நாட்டின் விவசாய மற்றும் குடிநீர் பாதுகாப்பு அழிக்கப்பட இருக்கிறது. இந்த மசோதாவினை எதிர்த்து முறியடிக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவிற்கு எதிரான வலிமையான குரலினை பதிவு செய்வோம். போராட்டங்களை முன்னெடுப்போம்.

-மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply