சேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது – மே 17 இயக்கம் வன்மையான கண்டனம்

சேலம் 8 வழி சாலையை எதிர்த்து பேசியதற்காக தோழர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கார்ப்பரேட்டுகள் லாபம் பார்ப்பதற்காக விவசாய நிலங்களையும், சாதாரண மக்களின் நிலங்களையும் பிடுங்கி, எட்டு வழி சாலை திட்டத்தினை அமல்படுத்துவதில் இந்திய பாஜக அரசு தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்த திட்டத்தினை எதிர்க்கிற விவசாயிகள் மீது கடுமையான ஒடுக்குமுறைகளை ஏவி, அவர்களை கைது செய்தும் வருகிறது.

விவசாயிகளின் நண்பனைப் போல விளம்பரம் செய்யும் மோடி அரசு விவசாயிகளை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் மிக வேகமாக செய்து வருகிறது. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களை சுரண்டி கார்ப்பரேட்டுகளை கொழுக்கச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. தமிழ்நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் ஒழுங்கான சாலையினை போடக் கோரி மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களையெல்லாம் கண்டுகொள்ளாத அரசு, மக்களே வேண்டாம் என்று சொல்கிற தேவையற்ற 8 வழி சாலையினை, அமைத்தே தீருவோம் என்று ஆணவத்துடன் சொல்கிறது. அப்படியென்றால் இந்த திட்டம் யாருக்கானது என்பதனை நாம் எளிதாக புரிந்து கொள்ளமுடியும்.

இந்த 8 வழி சாலை என்பது அமைக்கப்பட்ட்டாலும் அது ஒன்றும் எளிய மக்களுக்கான சாலையாக இருக்கப்போவதில்லை. இந்த சாலையில் 8 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைத்து மிகப் பெரும் கொள்ளை நடைபெற இருக்கிறது. எளிய மக்கள் பயணிக்க முடியாத சாலையாகவே இந்த சாலை இருக்கப்போகிறது. 2560 ஹெக்டேர் நிலம் இந்த திட்டத்திற்காக கைப்பற்றப்பட இருக்கிறது. காடுகளும் அழிக்கப்பட இருக்கின்றன.

இந்த திட்டத்தினை எதிர்த்து போராடும் மக்களின் குரல் என்பது மிகவும் நியாயமானது. உடனடியாக இத்திட்டம் என்பது நிறுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராக போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவுவதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தோழர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply