புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்த நாளில் நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யாதே என்பதை வலியுறுத்தியும் கண்டனப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கத்தினால் வடசென்னை திருவொற்றியூரில் 14-8-2018 சனி அன்று நடத்தப்பட்டது.
திருவொற்றியூரில் இருக்கும் அம்பேத்கர் சிலைக்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட பிறகு கூட்டம் தொடங்கப்பட்டது. மே பதினேழு இயக்கத் தோழர்களின் பறை இசை நிகழ்வுடன் கூட்டம் துவங்கியது.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அம்பேத்கரின் உழைப்பின் பலனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் கிடைத்த சமூக நீதி இன்று எவ்வாறு பார்ப்பனியத்தினால் பிடுங்கப்படுகிறது என்பது குறித்தும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்வது ஒடுக்கப்பட்ட மக்களின் குறைந்தபட்ச பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் என்று தோழர்கள் பேசினர்.
நீட் தேர்வினை ஒழிக்கும் வரை மீண்டும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் தோழர்கள் பேசினர். மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, அருள்முருகன், லெனாகுமார், பிரவீன் குமார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.