மக்கள் வழக்கறிஞர் செம்மணி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நெல்லை காவல் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு 23-2-2018 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
கூடங்குளம் போராட்ட வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர் செம்மணி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருபவர்.பல நேரங்களில் காவல்துறையினரின் அத்துமீறல்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனால் தான் அவர் மீது காவல்துறையினர் கொலைவெறி தாக்குதலை நடத்தினர்.
ஒரு மக்கள் வழக்கறிஞரை வீடு புகுந்து இழுத்துச் சென்று, கை கால்களை கட்டி, வாயில் செருப்பை திணித்து தாக்குதல் நடத்தியுள்ளனர் காவல்துறையினர். டி.எஸ்.பி குமார், பனகுடி காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோரின் வழிகாட்டலில் பழவூர் காவல் உதவி ஆய்வாளர் விமல்குமார், இராதாபுரம் காவல் உதவி ஆய்வாளர் பழனி, பழவூர் காவல் உதவி ஆய்வாளர் முகமது சம்சிர், தனிப்படை காவலர்கள் சாகர், செல்லதுரை, ஜோஸ் மற்றும் இன்னொரு காவலர் ஆகியோர் சுற்றி நின்று இரும்புத் தடியால் அடித்துள்ளனர்.
பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரும், அரசியல் கட்சித் தலைவர்கள் இணைந்து மனு அளித்து கோரிக்கை வைத்த பின்னரும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எந்த அதிகாரிகள் மீதும் எப்.ஐ.ஆர் பதியப்படவில்லை. எனவே இதனைக் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் மற்றும் தமிழக மக்கள் முன்னணி சார்பில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் செம்மணி பத்திரிக்கையாளர் முன்னிலையில் உரையாற்றினார்.
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் லெனா குமார் கலந்து கொண்டார்.