ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மீனவர்களுக்கு நீதி கேட்கும் விதமாக வெள்ளிக்கிழமை (29-12-2017) மாலை
4 மணியளவில் பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்களும், பொதுமக்களும் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை உயர்த்தி பிடித்து முழக்கங்களை எழுப்பினர்.
* கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவித்திடு
* ஆழ்கடல் தேடுதல் பணியை நிறுத்தாதே! காணாமல் போன மீனவர்களை கண்டுபிடி!
* மீன்பிடித் தொழிலை கார்பரேட்களுக்கு தாரை வார்க்க மீனவர்களை வெளியேற்றாதே!
உரிய நேரத்தில் முன்னறிவிப்பினை செய்யாமல் தேடுதல் பணிகளை முறையாக நடத்தாமல் இந்திய பாஜக அரசும், தமிழக அரசும் தமிழக மீனவர்களை பச்சைப்படுகொலை செய்வதை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில், SDPI கட்சியை சேர்ந்த சாகுல் அமீது உஸ்மானி, மனிதநேய மக்கள் கட்சியின் கனி, மதிமுகவின் விஜயகுமார் பாக்கியம், CPI(ML) கட்சியின் ரமேஸ், தமிழ் புலிகள் கட்சியின் தமிழரசன், ஆதித் தமிழர் கட்சியின் கதிரவன், தமிழர் தேசிய முண்ணனியின் கணேசன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். மே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் மற்றும் தோழர் முகிலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.