**டிசம்பர் 29 – நெல்லை-பாளையில்**
குமரி மீனவர்களுக்காக கூடுவோம்.
தமிழக மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கிற அநீதிக்கு தமிழகம் முழுதும் எழுந்து நின்று நீதி கேட்போம்.
வெள்ளி மாலை 4 மணி, பாளை ஜவகர் திடல்
அனைவரும் வாருங்கள்.
ஏன் இந்த ஆர்ப்பாட்டத்தினை தமிழகத்தின் பல பகுதிகளில் நிகழ்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது?
குமரி மீனவர்களுக்கு நிகழ்த்தப்பட்டிருக்கும் அநீதி என்பது மிகப்பெரியது. வெறும் இயற்கைப் பேரிடரால் நிகழ்ந்த மரணங்கள் போன்றும், அரசினால் காப்பாற்றப்பட இயலாமல் போனதாகவும் தொடர்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது. ஊடகங்களும் ஆர்.கே நகர் தேர்தலை மட்டுமே பிரதானமான ஒன்றாக தொடர்ச்சியாக காட்டியிருக்கின்றன. மீனவர்களை மீன்பிடி தொழிலை விட்டு வெளியேற்றும், உலக வர்த்தகக் கழக ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மீனவர்களை காப்பாற்றாமல் சாக அனுமதித்திருக்கிறது இந்த அரசு. இதை படுகொலை என்று தான் சொல்ல முடியும். இதை 5 லட்சமோ, 10 லட்சமோ நிவாரணம் கொடுத்துவிட்டு கடந்து செல்கிற நிகழ்வாக பார்க்க முடியாது.
இதற்கு ஒரு தொடர்ச்சி இருக்கிறது. இந்த மீனவர்களின் மீதான அநீதி இன்னும் தொடரும். இது நிற்கப்போவதில்லை. 2020 க்குள் அவர்களை வெளியேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் இந்திய அரசு செய்யவிருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற WTO கூட்டத்தொடரில் மீனவர் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது இந்தியா எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து எழுந்து வந்திருக்கிறது. மீன்பிடி தொழிலை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கிற, மீன்வர்களின் மானியத்தை ரத்து செய்கிற ஒப்பந்தத்தில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் கையொப்பமிட இந்திய அரசு தயாராக இருக்கிறது. அதனால்தான் WTO-ல் எந்த எதிர்ப்பையும் இந்திய அரசு பதிவு செய்யவில்லை.
500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. சில நாட்களுக்கு முன்பு வள்ளவிளை கிராமத்து மீனவர்கள் தாங்களாகவே கடலுக்குள் சென்று நடுக்கடலில் சோறு இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த 47 மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்கள். அவ்வப்போது ஒன்றிரண்டு மீனவர்களை மீனவர்களே கரை மீட்டு கொண்டு வருகிறார்கள். இந்திய கடற்படையோ, அரசோ இதனை செய்யவில்லை. எனவே குமரி மீனவன் பிரச்சினை குமரிக்குள் சுருங்கிவிட முடியாது. இது ராமேஸ்வரம் மீனவனுக்கும், சென்னை மீனவனுக்கும் நாளை நடக்கும். அதனால் தான் இதனை தமிழகம் தழுவிய பிரச்சினையாக கொண்டு செல்ல விரும்புகிறோம்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குமரி மீனவர்களுக்காக தமிழன் எழ வேண்டும். இந்த விழிப்புணர்வு ஏற்படாவிட்டால் நமது மீனவன் ஆடு மாடுகளைப் போல கடலை விட்டு வெளியேற்றப்படுவான். கார்ப்பரேட் கம்பெனிகள் மீன்பிடி தொழிலை ஆக்கிரமிக்க காத்திருக்கின்றன.
மே பதினேழு இயக்கம்
9884072010