சங்கர் படுகொலையில், சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான தண்டனையை போராடி பெற்றிருக்கும் தோழர் கெளசல்யாவின் மன உறுதி இந்திய சமூகத்தின் பெண்களுக்கும், தமிழ் பெண்களுக்கும் ஒரு மிகச் சிறந்த உதாரணமாய் நிற்கிறது. ஆகவே தோழர் கெளசல்யாவிற்கு புரட்சிகர வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது – மே பதினேழு இயக்கம்
தொடர்ச்சியான சாதியவாதத்தின் கொடுமைகளில் சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கப்படாமல், ஆதிக்க சாதிகளின் உடமையாக மட்டுமே வளர்க்கப்படும் பெண் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு பெண் விடுதலை, சாதிய விடுதலை தளத்தில் பயணிக்கும் முக்கியமான பெண்ணாக தோழர் கெளசல்யா தற்போது வளர்ச்சியடைந்து நிற்கிறார்.
இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகம் கடந்த 70 ஆண்டுகளில் தோல்வியடைந்த ஓன்றாக இருப்பதையே தொடர்ச்சியாக நடைபெறும் சாதிய ஆணவப் படுகொலைகள் நிறுவுகின்றன. இந்த அரசியலமைப்பு சட்டம் என்பது சாதியை ஒழிப்பதற்கான எந்தக் கூறினையும் தனக்குள் கொண்டிருக்கவில்லை. ”தீண்டாமை ஒரு குற்றம்” என்ற ரீதியில் மட்டுமே சொல்லும் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் என்பது சாதி ஒழிப்பினைப் பற்றி பேசவில்லை. சாதி ஆதிக்கத்தின் இருப்பினை அது போற்றுகிறது. இந்திய ஒன்றியத்தின் கட்டமைப்பு அயோக்கியத்தனமான மனுதர்மத்தை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கிறது. அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் 1957ஆம் ஆண்டே சாதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு சட்ட எரிப்புப் போராட்டத்தினை நடத்தினார். இந்த போராட்டத்தினில் 3000 தோழர்கள் 3 ஆண்டுகளுக்கு சிறைவாசம் அனுபவித்தனர். பிணை கேட்காமல் மொத்த தண்டனை காலத்தையும் அவர்கள் சிறையில் கழித்தனர். இப்படிப்பட்ட போராட்டம் இந்தியாவின் வேறெந்த இடத்திலும் நடைபெற்றதில்லை. சாதி ஒழிப்பிற்காக பெரும் கிளர்ச்சியை நிகழ்த்திய அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இன்னும் சாதிய ஆணவப் படுகொலைகள் தொடர்வது என்பது நமது அவமானமாக நிற்கிறது.
சாதிய ஆணவப் படுகொலை ஒழிப்பிற்கான கோரிக்கை என்பது ஒரு நிரந்தர தீர்வினை நோக்கி நகர வேண்டும். அதற்கான தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். மரண தண்டனை என்பது சாதி ஒழிப்பிற்கான அல்லது சாதி ஆணவப்படுகொலை ஒழிப்பிற்கான தீர்வாக இருக்க முடியாது. கீழ் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு என்பதன் வழியே அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று இதிலிருந்து விடுதலை பெறவும் வாய்ப்பிருக்கிறது. எனவே மரண தண்டனைகள் என்ற ஒற்றைப் புள்ளியிலிருந்து மட்டுமே இதனை அணுகாமல் நமக்கு கூடுதல் திட்டங்கள் தேவை இருக்கிறது.
சாதி மறுப்பு திருமணம் புரிபவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கும் கடமை இந்த அரசுக்கு இருக்கிறது. சாதியவாதத்தினை அங்கீகரிக்காத ரீதியில் இந்த அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும். நமது தொடர் போராட்டங்களும், அரசியல் செயல்பாடுகளும் மட்டுமே இந்த மாற்றத்தினைக் கொண்டு வரும். இந்தியாவின் நீதிமன்றங்கள் எப்போதுமே நம்பிக்கைக்குரியவையாக இருந்தவை இல்லை.
இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் மரண தண்டனை என்பதை ஒரு தண்டனையாகவே கருத முடியாது. அது எந்த வகையிலும் சாதி ஒழிப்பிற்கோ, ஆவணப் படுகொலையை ஒழிக்கவோ துணை நிற்காது என்பதையும் அறிவுறுத்த விரும்புகிறோம். சாதி ஆணவப் படுகொலைகளை வேரறுக்க புரட்சிகர, முற்போக்கு, பெரியாரிய, அம்பேத்கரிய, தமிழ்த்தேசிய, ஜனநாயக சக்திகளாகிய நாம் ஒன்றிணைந்து நமக்கான செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும். இத்தகைய செயல்திட்டங்களில் அனைவருடனும் இணைந்து பணியாற்றுவதற்கு மே பதினேழு இயக்கம் தயாராக இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சாதி ஒழிப்பிற்காக தொடர்ந்து போராடப் போவதாக அறிவித்திருக்கும் தோழர் கெளசல்யாவிற்கு மே பதினேழு இயக்கம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
– மே பதினேழு இயக்கம்