கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மற்றும் பேரூராட்சி நகராட்சி அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றிக் கொண்டு மருத்துவ மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்கு வழங்க வேண்டிய பணி உயர்விடங்களை அவசர அவசரமாக தனியார் மருத்துவர்களுக்கு திருடி கொடுத்திருக்கிறது அதிமுக அரசு..
58 வயதுவரை அரசு மருத்துவர்களாக பணியாற்ற சம்மதித்து எழுதி கொடுத்துவிட்டு கிராமங்களில் பணியாற்றிக்கொண்டு மேற்படிப்பும் படித்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் மேல் இந்த அரசு எவ்வளவு மரியாதை செய்கிறது என்று பாருங்கள்..
சென்னை மதுரை போன்ற மாநகராட்சிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த மருத்துவர்களுக்கு வழங்கவேண்டிய 465 உயர் மருத்துவ இடங்களை தனியார் மருத்துவர்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கி இருக்கிறது எடப்பாடி அரசு.
சமூகநீதி நோக்கில் தமிழக அரசு வழங்கிய 69% இடஒதுக்கீடும் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக போராடும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்..
குறிப்பிடட உயர் பணியிடங்களை குறிப்பிட்ட துறைகளில் MD முடித்தவர்களுக்கு வழங்கவேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளும் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக பொருமுகிறார்கள் அரசு மருத்துவர்கள்.
கிராமங்களில் பணியாற்றினால் முன்னுரிமை என்ற நிலை மாறினால் யார் அங்கு பணியாற்ற வருவார்கள், பணியாற்ற யாரும் தயாராக இல்லாத நிலையில் கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், பேரூராட்சி, மாவட்ட மருத்துவமனைகள் இழுத்து மூடப்படும் அல்லது தனியாருக்கு வழங்கப்படும்.
மாநில அரசின் மருத்துவமனைகளை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் சுகாதாரத்தை அதுசார்ந்த வர்த்தகத்தை கார்ப்பரேட்டுகளுக்கு நகர்த்தும் திருட்டுத்தனமான நடவடிக்கையாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு மருத்துவத்தை விற்கும் இந்திய அரசின் நீட் நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.
இன்னொருபக்கம் ஆட்சி கவிழுவதற்குள் அத்தனை வகைகளிலும் சம்பாதித்துக் கொள்ள துடிக்கும் அதிமுக அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் சுகாதார துறை சார்ந்த இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது..
இன்றைய மார்க்கெட் விலையில் கணக்கிட்டால் ஒரு இடத்திற்கு சுமார் 30 முதல் 50 லட்சம் வரைக்கும் வசூலித்திருக்க வாய்ப்பிருக்கும் நிலையில் 465 இடங்களுக்கு சுமார் 200 கோடி வரைக்கும் ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
ஊழலை ஒழிக்க வந்த பிதாமகர்களாக காட்டிக்கொள்ளும் டெல்லி பாஜக அரசு ஏற்கனவே ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளே மாநில உரிமைகளையும் விழுங்கி இதுபேன்ற அடுத்தடுத்த ஊழல்களுக்கு பாதை அமைத்துக் கொடுப்பதாகவே இருக்கிறது..
ஏழை எளிய மக்களுக்கு கிராமங்களுக்கு மருத்துவத்தை உறுதிப்படுத்திய மருத்துவத்தை குறைந்தபட்ச சேவையாக வழங்கிய அரசு மருத்துவர்களின் பணியிடங்களை அவர்களுக்கே திரும்ப வழங்க இந்த ஊழல் பினாமி அரசை நெறுக்குவோம்..
10 நாட்களாக போராடும் அரசு மருத்துவர்களின் போராட்டத்திற்கு மே17 இயக்கம் உறுதுணையாக நிற்கும். ஏனென்றால் அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு பின்னால் 8 கோடி மக்களின் சுகாதாரமும் இருக்கிறது..
மே17 இயக்கம்