அன்பான தோழர்களுக்கு,
சமீபத்தில் வெளியான ஒரு பேட்டியில் நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்கள் தெரிவித்திருந்த கருத்திற்கு மறுப்பு தெரிவித்து மே பதினேழு இயக்கம் வெளியிடும் விளக்க அறிக்கை.
திரு.சீமான் அவர்கள், தனது பேட்டியில் ”மே பதினேழு இயக்கத்தில் திரு.பால்நியூமென், திரு.அய்யநாதன் போன்றவர்கள் இணைந்து இயங்கிக் கொண்டிருந்தனர்” என நாம் தமிழர் கட்சியில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பொறுப்பில் இருப்பவரும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களை டப்ளின் தீர்ப்பாயத்தில் 2010 ஜனவரியில் பதிவு செய்திருந்தவருமான திரு.பால்நியூமென் பற்றி பதிவு செய்திருக்கிறார்.
திரு.சீமான் அவர்களுடைய கருத்து முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது. திரு.பால்நியூமென் மற்றும் திரு.அய்யநாதன் ஆகிய இருவருமே மே பதினேழு இயக்கத்தில் என்றுமே உறுப்பினராக இருந்தவர்கள் இல்லை. 2010 ஜனவரி 15இல் டப்ளின் நகரில் நடந்த தமிழினப்படுகொலை குறித்தான மக்கள் தீர்ப்பாயத்தில் ஈழப்போரின் போது ’உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்’ குறித்து ஆவணங்களை பதிவு செய்திருந்ததாக சென்னை லயோலா கல்லூரியில் நடந்த பி.யூ.சி.எல் கருத்தரங்கில் அறிமுகமானார். 2010 ஜனவரியில் டப்ளின் தீர்ப்பாயத்தில் அவர் தனது கருத்துக்களை பதிவு செய்த பின்பான காலத்தில் தான் மே17 இயக்கத்திற்கு அறிமுகமானவர். அதற்கு முன்பு அவர் எம் இயக்கத்திற்கு அறிமுகமானவரல்ல. அவர் டப்ளின் தீர்ப்பாயத்தில் பதிவு செய்த ஆவணங்களை எங்களது கருத்தரங்கிலும் பதிவு செய்வதற்காக ஒரு பேச்சாளராக 2010 பிப்ரவரியில் ஒரு கருத்தரங்கில் அழைக்கப்பட்டார். அதில் உள்நாட்டு அகதிகள் குறித்தே பேசியவர் அவர். இந்த கருத்தரங்கில் மே17 இயக்க தோழர்கள் மட்டுமல்லாது மே17 இயக்கத்தில் இல்லாத பிற தோழர்களும் பங்கேற்று பேசி இருக்கின்றனர். அவ்வாறே அவர் எங்களது ஓரிரு மேடைகளில் உள்நாட்டு அகதி குறித்து பதிவு செய்தார். அவர் எக்காலத்திலும் மே பதினேழு இயக்கத்தில் உறுப்பினராக இருந்தது கிடையாது. கருத்தரங்க பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தவர் மட்டுமே. அந்நாளில் டப்ளின் தீர்ப்பாயத்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பதிவு செய்ததை மறைத்து, தமிழ்நாட்டில் இருப்பவர்களிடத்தில் தொடர்பு வைத்திருந்தார்.
அவர் தனது நிலைப்பாட்டினை மறைத்து வந்த போதிலும், ஐ.நா நிபுணர் குழு அறிக்கை வெளிவந்த 2011 ஏப்ரல் மாத தருணத்தில் அமெரிக்க சார்பு நிலைப்பாட்டினை அவர் எடுத்தபோது அவரது கருத்தியல் பின்புலம் எங்களுக்கு அம்பலமானது. பின்னர் அவரை நாங்கள் அழைத்தது கிடையாது. அதுவே அவரது இறுதி பங்கேற்பாக இருந்தது. அவரை விலக்கி வைப்பது பற்றிய முடிவை எடுப்பதற்கு அவரது உள்ளார்ந்த விடுதலைப் புலி எதிர்ப்பு மனநிலை மட்டுமல்லாது அவரது தொடர்புகள் மிகத்தவறானதாகவும் ஈழவிடுதலை எதிர்ப்பு, விடுதலைப்புலிகள் எதிர்ப்பாகவும் அமைந்தது முக்கிய காரணியாக அமைந்தது. அமெரிக்காவில் இருந்து அவர் அழைத்திருந்த ஒரு மனித உரிமைப் பேராசிரியரிடம் ஒரு பத்திரிக்கை தொடர்பாக மொழிபெயர்ப்புக்காக மே17 இயக்க தோழர் தொடர்பு கொண்டபொழுதில் அவர் தீவிர ஈழ எதிர்ப்பாளராகவும், விடுதலைப்புலிகள் இயக்க எதிர்ப்பாளராகவும் இருந்தார். அதை பேட்டியின் போது பதிவு செய்தார். ஆனால் அந்நபர் ‘என்ன செய்யலாம் இதற்காக’ எனும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கெடுக்கச் செய்திருந்தார் திரு.பால்நியூமென். மேலும் அவர் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் திரு.ராகுல்காந்திக்கு நெருக்கமான இளையப்பிரமுகராக இருந்த திருமதி.தேஜஸ்வனி கவுடா என்பவரை (தற்போது அவர் பாஜகவில் இருக்கிறார்) தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்களுக்கு அறிமுகப்படுத்த அழைத்து வந்திருந்தார். அந்நபரோடு தொடர்ந்து செயல்பட்டவராக திரு.பால்நியூமென் இருந்ததையும் தெரியவந்தது. அவரது தொடர்புகள் மட்டுமல்லாது, ஈழ ஆதரவு நிலைப்பாடுகளில் ஆழமற்று நிற்பதும், சமரசம் மேற்கொள்வதும், ஈழவிடுதலை மற்றும் தமிழினப்படுகொலைக்கான விசாரணை ஆகியவற்றினை கைவிட்டு இலங்கை அரசோடு இணைந்து பணியாற்ற ஆரம்பித்த நபர்களோடு இவரும் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்ததும், அவர் மீதான நம்பிக்கையின்மையை எங்களுக்கு வலுப்படுத்திய காரணத்தினால் அவருடனான தொடர்புகளை, 2011ல் மே மாதத்திற்கு பின்பு, நிறுத்திக் கொள்ள இயக்க ரீதியான முடிவை மே பதினேழு இயக்கம் எடுத்தது.
இந்நிலையில் அவர் நாம் தமிழர் கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டதும் இக்காலகட்டத்திலேயே. அக்கட்சியில் அவர் இணைந்த காலத்திலிருந்து அவர் மே17 இயக்கம் குறித்து அவதூறுகளை பதிவு செய்து வந்திருக்கிறார். இது குறித்து பல தோழர்கள் எங்களிடத்தில் நேரடியாகவே பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்நிலையில் 2012ம் வருடத்தில் திரு.பால்நியூமென் அவர்கள் டப்ளின் தீர்ப்பாயத்தில் ”…விடுதலைப்புலிகள் கட்டாய ஆட்சேர்ப்பும், குழந்தைப்போராளிகளை இணைப்பது, கட்டாய கருக்கலைப்பு செய்து பெண்களை இணைப்பது போன்ற குற்றங்களை செய்வதாக…” பதிவு செய்திருந்தது பொதுவெளியில் அம்பலமானது. டப்ளின் தீர்ப்பாயத்தினை ஏற்பாடு செய்திருந்த விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும், ஈழ விடுதலைக்காக போராடுபவர்களுமான சிங்கள பத்திரிக்கையாளர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரிடத்தில் புலம்பெயர் நாட்டில் 2012இல் சந்தித்த தருணத்தில் பதிவு செய்திருந்தார்கள். இது அவருடனான தொடர்பினை முறிப்பது எனும் மே17 இயக்கத்தின் 2011ம் வருட நிலைப்பாட்டினை மேலும் வலுப்படுத்தியது. இது போல திரு.பால்நியூமென் உபயோகமற்ற நபர்களை ஈழவிடுதலை ஆதரவு கூட்டங்களுக்கு அழைத்து வருவதாக புலம்பெயர் தோழர்கள் எங்களிடத்தில் பதிவு செய்திருந்தனர். மேலும், மே17 இயக்கம் ’ஒரு உளவு அமைப்பு’ என வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற நகரங்களிலும் அவர் தொடர்ந்து பதிவு செய்திருக்கிறார்.
2016 ஐ.நா மனித உரிமை அவை கூட்டத்தொடரில் சிங்கள அமைச்சர் மற்றும் விடுதலைப்புலிகள் மீது விசாரணை தேவை கருத்தினை வலியுறுத்திய திரு.மங்கள சமரவீராவிடம் கைகுலுக்கிய திரு.பால்நியூமென் மே பதினேழு இயக்கத்தைப்பற்றிய அவதூறுகளை மட்டுமே பரப்பி வந்தவராக இருக்கிறார். இது குறித்து மே17 இயக்கம் பொருட்படுத்தியதில்லை என்பது மட்டுமல்ல, அவதூறுகளுக்கும், பொய் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பதில்லை எனும் நிலைப்பாட்டின் காரணத்தினால் இதை கடந்து சென்றிருக்கிறோம்.
இம்முறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களே இக்கருத்தினை பதிவு செய்த காரணத்தினால் அவருக்கும், அவரது கட்சி நண்பர்களுக்கும் மற்றும் இதர பொதுமக்களுக்கும் விளக்கமளித்து சந்தேகத்தினை போக்கவே இந்த அறிக்கையை வெளியிடுகிறோம்.
ஆகவே மே 17 இயக்கம் குறித்தான விவரங்கள் தேவைப்படும் பட்சத்தில் எங்களை நேரடியாகவே தொடர்பு கொண்டு விளக்கமறிவதே அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.
நன்றி
மே 17 இயக்கம்