மோடி நவம்பர் 08’2016இல் அறிவித்த 500 மற்றும் 1000ரூபாய் நோட்டு செல்லாதென்ற அமைப்புசாரா துறை (informal sector) இன் மீது தொடுத்த போர் ஆகும். அதை மறைப்பதற்காகவே கருப்பு பணம் ஒழிப்பென்றும், ஊழல் ஒழிப்பென்றும், தீவிரவாத ஒழிப்பென்றும் முன்னுக்கு பின் முரணாக மாற்றி மாற்றி மோடி கும்பல் பேசி வருகிறது.
இந்தியாவில் தோராயமாக 64கோடி பேர் வேலை செய்யும் திறன் பெற்றவர்கள். இதில் 90% பேர் அமைப்புசாரா முறையில் வேலை செய்பவர்கள். உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 60% இவர்களின் பங்கு இருக்கிறது. இப்படிப்பட்டவர்களின் கையிலிருக்கும் பணத்தை புடுங்குவதற்காக கொண்டுவரப்பட்டது தான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. இதனை தான் கடந்த பதிவில் அதிக அமைப்புசாரா தொழிலாளர்கள் இருக்கும் ஜவுளி துறையை இந்த நடவடிக்கை எவ்வாறு பாதித்ததென்று பார்த்தோம். தற்போது அடுத்த அதிக தொழிலாளர்களை கொண்ட கட்டுமானத்துறையில் இந்த நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து பார்ப்போம்.
ஒரு நாட்டில் வளர்ச்சி என்பதில் மிகமுக்கிய பங்காற்றுவது கட்டுமானத்துறை ஆகும். இந்தியாவில் 2016 நவம்பர் வரை கட்டுமானத்துறையில் மொத்த மதிப்பு 31லட்சம் கோடி (நிலுவையிலிருந்த கட்டிடங்கள் மற்றும் பதிவு செய்த கட்டிடங்கள்). நவம்பர் 08’2016க்கு பிறகு இது தற்போது 30% குறைந்து விட்டதென்று கட்டுமானத்துறை சங்கம் ( property equity analysis) தெரிவித்திருக்கிறது. இதற்கு காரணங்களாக புதிய நிலங்கள் வாங்க முடியாமல் போனதாலும், பணபுழக்கம் இல்லாமல் போனதாலும் அதனால் வேலை ஆளுக்கு சம்பளம் கொடுக்கமுடியாமல போனதால் வேலைக்கு ஆள் கிடைக்காதது போன்ற பிரச்சனைகளே என்றும் இதற்கு மூல காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்றும் கூறுகின்றனர்.
இந்த நடவடிக்கையால் கட்டுமானத்துறையில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு, மும்பை பெங்களூர் மற்றும் கூர்கான் போன்ற மாநிலங்களே. மேற்சொன்ன மாநிலங்களில் மட்டும் முறையே 1.5லட்சம் கோடி & 2,00,330 லட்சம் கோடி & 99,983 கோடி & 79,059 கோடி அளவிலான வேலைகள் நடைபெற்றுவந்தன. இதில் தமிழகத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 1000க்கும் அதிகமான புதிய கட்டுமான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலைமையிலிருந்த கட்டுமானத்துறை முற்றிலும் உருக்குலைக்கு வண்ணம் தான் மோடியின் அந்த நள்ளிரவு அறிவிப்பு வெளிவந்தது. அன்றிலிருந்து கட்டுமானத்துறை மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஒரு சிறிய கட்டுமான திட்டத்தில் மட்டும் குறைந்தது 100லிருந்து 120பேர் வேலை செய்கிறார்களென்று Confederation Of Real Estates Developers’ Associations of India (CREDAI), Tamil Nadu, ரியல் எஸ்டேட் மற்றும் டெவலப்பர்கள் சங்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இவர்கள் அனைவரும் தினக்கூலியோ அல்லது வாராந்திர கூலியோ பெற்றுக்கொண்டு வேலை செய்பவர்கள்.
இப்படியிருக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பணம் எடுப்பதற்கு அதிக கெடுபிடியை மோடி அரசு போட்டதால் புதிய நிலங்களை வாங்குவது சிரமமானது. புதிய நிலங்களை வாங்க முடியாமல் போனதால், புதிய கட்டுமானம் கட்டாமல் கட்டுமான நிறுவனங்கள் மூடும் நிலைக்கு சென்றது. ஒரு வேளை ஏற்கனவே கட்டிக்கொண்டிருக்கின்ற திட்டமென்றால் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்களான செங்கல், சிமெண்ட், இரும்பு போன்றவற்றை வாங்குவது இயலாமல் போனது. ஒருவேளை அதையும் கடனாக வாங்கிக் கொண்டாலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது தாமதமானது. இதனால் பசியோடு வேலை செய்யமுடியாமல் அவர்கள் வேலைக்கு வராமல் போனார்கள்.
ஒருபக்கம் கட்டுமான நிறுவனங்களை மூடி வேலையிழப்பும் மறுபக்கம் சம்பளம் கொடுக்க முடியாதளவுக்கான ஒரு சூழலை ஏற்படுத்தி வேலையிழப்பையும் செய்து ஒட்டுமொத்த கட்டுமானத்துறையையும் இந்த மோடி கும்பல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உருக்குலைந்து போட்டுவிட்டது.