திருவண்ணாமலை போந்தை கிராமத்தில் ட்ராக்டர் கடனை வசூலிக்க குண்டர்களை வைத்து திரு. ஞானசேகரன் என்கிற விவசாயியை அடித்துக் கொன்றிருக்கிறது வங்கி.
10 லட்சம் கோடி வரா-கடனை (NPA) கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வசூலிக்க வக்கற்ற வங்கிகள், ஏழை விவசாயிகளை குண்டர்களை வைத்து கொலை செய்கிறது. கந்துவட்டி கும்பலுக்கும், அரசு வங்கிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் கடன் வழங்கும், வசூலிக்கும் தொழில் ஒரு மாஃபியா தொழிலாக நடந்து வருகிறது..
ஏழை எளியவர்களாகிய மக்கள் ஒரு புறம், கார்ப்பரேட்-அதிகாரிகள்-அரசியல்வாதிகள்-நீதிமன்றங்கள் மறுபுறம் என இரு அணிகளாக பிரிகிறது தேசம்.
மக்களின் பக்கம் நிற்பவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவது, மக்கள் மீதான வன்முறையின் நீட்சியே. இதை எதிர்கொண்டு நாம் முன்னேறுவோம்.
திருவண்ணாமலையில் விவசாயியை கொலை செய்த State Bank Of India ’ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’வின் தலைமை அதிகாரியை கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்ய வலியுறுத்துவோம்.
வங்கிகள் இவ்வாறு சட்டவிரோதமாக குண்டர்களைக் கொண்டு கடன் பாக்கிகளை வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவுரை கொடுத்திருந்தும், சட்டவிரோதமாக நடந்து கொண்ட வங்கி உயர் அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். இம்மாதிரியான கொலைக்குற்றத்தினை கண்டும் காணாமல் நகர்ந்து செல்லும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் கண்டனத்திற்குரியது.
தோழர்கள், தோழமை இயக்கங்கள் இது குறித்து ஒரே குரலில் எதிர்ப்புகளை பதிவு செய்வோம். விவசாயியின் கொலைக்கு நீதி வேண்டுமெனும் முழக்கம் வலுப்பெறட்டும்.
விவசாயிகள் மீது கைவைக்கும், தாக்கும், கொலை செய்யும் கார்ப்பரேட் வங்கிகளை கண்டிப்போம்.
விவசாயிகளை காக்க ஒன்றுபடுவோம்.
மே பதினேழு இயக்கம்.