ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 2017 செப்டம்பர் மாத அரங்கில் தமிழீழ இனப்படுகொலையை அம்பலப்படுத்தியும், அது குறித்து சர்வதேசத்தின் கவனத்தையும், செயல்பாட்டையும் கோரி கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருக்கும் ம.தி.மு.கவின் பொதுச்செயலாளரான மரியாதைக்குரிய ஐயா. வைகோ அவர்கள் மீது தாக்குதலை நிகழ்த்திய சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராக ஒருமித்து குரல் எழுப்புவோம்.
சர்வதேச அளவில் தமிழர்கள் மீது இலங்கை நிகழ்த்திய இனப்படுகொலையை அம்பலப்படுத்தும் முயற்சியில் தமிழீழ ஆதரவு தோழமைகள் தொடர்ந்து ஜெனீவாவில் நடந்துவரும் மனித உரிமை அவையின் அமர்வில் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த வாதத்தினை வலுப்படுத்தும் குரலாக இந்திய பாராளுமன்றத்தில் நீண்டகாலம் உறுப்பினராக இருந்த ஐயா.வைகோ அவர்கள் ஜெனீவாவின் அரங்கில் தமிழினப்படுகொலையின் அவலத்தினை பதிவு செய்ததுடன், சர்வதேசம் இது குறித்து செய்யத் தவறிய கடமைகளையும், ஐ.நா மனித உரிமைக்கமிசன் இலங்கையின் யுத்தத்தினை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றிய அவலத்தினை நினைவு படுத்தி, கடமை தவறிய நிறுவனங்கள்- நாடுகள் உடனடியாக செயல்படவேண்டுமென்று அழுத்தமாக ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் மைய அரங்கில் பதிவு செய்தார்.
தமிழ்நாட்டில் இருந்து வரும் ஆதரவு , குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டவர்களின் கருத்துக்கள் மிகக்கவனமாக பிற உறுப்பினர்களால் குறிப்பெடுத்துக்கொள்ளப்படுமென்பதை தெரிந்து வைத்திருக்கும் சிங்களப் பேரினவாதிகள் தங்களது வன்முறையை கட்டவிழ்த்திருக்கிறார்கள்.
மனித உரிமைக்கவுன்சிலிலேயே இத்தகைய வன்முறையை நிகழ்த்த தயங்காதவர்களின் ஆட்சியில் எங்ஙனம் தமிழீழத்தமிழர்கள் சுயமரியாதையோடும், பாதுகாப்போடும் வாழ இயலுமென்ற கேள்வி எழுவது இயல்பே. இந்தியாவின் பாராளுமன்ற செயல்பாட்டாளர் ஒருவர் மீது இலங்கையின் சிங்களப் பிரதிநிதிகள் நடத்திய வன்முறை இதுகணம் வரை இந்திய அரசினால் கண்டிக்கப்படவில்லை. இந்திய அரசின் கள்ளமெளனம், இந்த வன்முறையில் இந்திய அரசிற்கும் உடன்பாடு இருப்பதையே அம்பலப்படுத்துகிறது .
ஐயா.வைகோ அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறை தமிழினம் இன்னும் பாதுகாப்பற்ற சூழலிலேயே சர்வதேச அரங்கிலும் வாழவேண்டியிருப்பதை அம்பலப்படுத்தி இருக்கிறது. இந்திய அரசின் ஆதரவில் இலங்கை அரசு மேற்கொள்ளும் இந்த வன்முறைய வெறியாட்டங்கள் உடனடியாக எதிர்கொள்ளப்பட்டு இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்.
இலங்கை அரசின் முன்னாள் ராணுவ அதிகாரிகளை கடந்த ஆண்டுகளில் இது போன்று ஐ.நா மனித உரிமைக்கவுன்சிலுக்கு அழைத்துவந்து தமிழீழ ஆதரவு செயல்பாட்டாளர்களை மிரட்டி வருவது தொடர் நிகழ்ச்சியாகி இருக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் கனடா நாட்டைச்சார்ந்த தமிழீழ செயல்பாட்டளர் ஒருவரை இந்த கும்பல் நேரடியாக மிரட்டியதை மே17 இயக்கத்தோழர் நேரில் பார்த்தார்.
அதற்கு முந்தைய வருடம் 2016 ஜீன் மாதத்தில் ஐ.நா மனித உரிமைக்கவுன்சில் முற்றத்தில் தமிழினப்படுகொலைக்கான புகைப்படங்களை காட்சிப்படுத்த வைக்கப்பட்டிருந்த பதாகைகள் சிதைக்கப்பட்டிருந்தன. இது போன்ற காலித்தனத்தினை தொடர்ந்து இலங்கை அரசு செய்து வருகிறது. இதை தடுத்து நிறுத்துவதை நாம் உடனடியாக செய்தாக வேண்டும்.
ஐயா.வைகோ அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறையை உறுதியுடனும், ஒற்றுமையுடனும் எதிர்கொண்டு இனப்பகைவர்களை கண்டிப்போம், இந்திய அரசின் மெளனத்தை கேள்விக்குள்ளாக்குவோம்.
மே பதினேழு இயக்கம்.
98840 72010