மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் டைசன், தோழர் இளமாறன் மற்றும் தமிழர் விடியல் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண் குமார் ஆகியோர் மீது தமிழினப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதாக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 19ம் தேதி இவர்கள் மீதான குண்டர் சட்டம் தவறானது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் இரத்து செய்தது. ஆகையால் 4 தோழர்களும் நேற்று (20-09-2017) சென்னை புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். தோழர்களை வரவேற்பதற்காக பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், தொண்டர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என தமிழகம் முழுவதுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் புழல் சிறை முன்பாக கூடினர். சரியாக 3 மணியளவில் 4 தோழர்களும் சிறையைவிட்டு வெளியேறிய போது கூடியிருந்தவர்கள் பறையிசையுடன், முழக்கமிட்டவாறு ஆரவாரமாக வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்த மதிமுக துணை பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, தமுமுக பொதுச்செயலாளர் தோழர் அப்துல் சமது, தமிழ்ப் புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன், எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்பாளர், காஞ்சி மக்கள் மன்றம் தோழர் மகேசு, தோழர் வளர்மதி, தமிழர் விடுதலை கழக தோழர் சுந்தரமூர்த்தி, திராவிடர் விடுதலை கழகம் மற்றும் தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் சீராளன், தமிழ்த்தேச மக்கள் கட்சி தோழர் செந்தமிழ் குமரன், குமுக விடுதலை இயக்கத்தின் தோழர் சேகர், நடிகர் மன்சூர் அலிகான், கார்ட்டூனிஸ்ட் பாலா, எழுத்தாளர்கள் சரவணன் கன்னியாரி, அருள் எழிலன், ஒளிப்பதிவாளர் விஜய் சக்கரவர்த்தி, இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் எண்ணற்ற தோழர்கள் மலர்மாலைகள் மற்றும் பொன்னாடைகள் அணிவித்து வரவேற்பளித்தனர். ஊடகங்களின் பேசிய பின்பு தோழர்கள் நால்வரும் சிறை எதிரே இருந்த தந்தை பெரியார் சிலைக்கும், சிறை அருகிலிருந்த அண்ணல் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கிருந்து புறப்பட்டு இராயப்பேட்டை விஎம் தெரு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து திவிக மற்றும் தபெதிக தோழர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு, தோழர் திருமுருகன் காந்தி அங்கு கூடியிருந்தவர்களிடையே சிறு உரையாற்றனார். பின்னர் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர் நாகை.திருவள்ளுவன் ஒருங்கிணைக்க தோழர்கள் நால்வரும் கூடியிருந்த தோழர்களிடையே உரையாற்றினார். இறுதியாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் லேனா.குமார் நன்றியுரையாற்றினார்.
குறிப்பு: வரவேற்பளிக்க வந்த அமைப்புகள் மற்றும் தலைவர்களின் பெயர் ஏதேனும் விடுபட்டிருந்தால் தெரியப்படுத்தவும். இணைத்துக்கொள்கிறோம்.