நீதிபதி. கர்ணன் கைது. முறை தவறிய நீதியும், மனுதர்ம நீதிமன்றமும் – புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி.

நீதிபதி. கர்ணன் கைது. முறை தவறிய நீதியும், மனுதர்ம நீதிமன்றமும் – புழல் சிறையிலிருந்து தோழர் திருமுருகன் காந்தி.

பா.ஜ.க- ஆர்.எஸ்.எஸ்-சினால் சனாதிபதி பதவிக்கு ராம்நாத் கோவிந்த் எனும் பீகார் மாநிலத்தின் தற்போதய ஆளுனர் நிறுத்தப்பட்டு, அவர் ஒரு தலித் சமூக பிரதிநிதி என்று பிரச்சாரம் செய்யப்பட்ட அதே தினத்தில், அதே பட்டியலின வகுப்பைச் சார்ந்த நீதிபதி திரு. கர்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இந்த தினத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு பட்டியலின வகுப்பைச் சார்ந்த மாவட்ட நீதிபதியாக இருந்தவரை சாதியின் பெயராலும், கொலைகார சகோதரரை பாதுகாக்கவும் அழுத்தமும், நெருக்கடியும் கொடுத்த ஜதராபாத் நீதிமன்றத்தின் நீதிபதி. நாகார்ஜீன ரெட்டியின் மீதான நடவடிக்கைக்குப் பாரளுமன்ற உறுப்பினர்களின் போதுமான ஆதரவு இல்லாத நிலை ஏற்படுகிறது. பட்டியலின மக்களின் உரிமைகள் முழுமையாக நசுக்கப்படுகிறது, மறுபுறம் அதே மக்களின் பிரதிநிதிகளாக எதிர்-அரசியல் கொண்டவர்களை வைத்து அடையாள அரசியலும் நடந்து வருகிறது. உத்திரப் பிரதேசத்தில் பட்டியலின மக்கள் தம்மை சந்திப்பதற்கு முன்பாக குளித்துவிட்டு வர வேண்டிய தீண்டாமையை அம்மாநில முதல்வர் முன்னெடுப்பதும், இதே பாஜக ஆட்சியில் நிகழ்கிறது.
பாஜக ஆட்சிப் பொறுப்பினை உத்தரபிரதேசத்தில் ஏற்றுக் கொண்ட ஒரு சில மாதங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. கடந்த மே மாதம் 2017ல் மேற்கு உத்திரப்பிரதேசத்தின் சப்பிர்பூர் கிராமத்தில் அக்னிபஸ்கர் எனும் பட்டியலின சமூகத்தவனரின் தலையை வாளால் வெட்டி வீசி, அவரது மனைவியின் மார்பகங்களை வாளால் வெட்ட முயன்றும், ஒரு வயது குழந்தையை நெருப்பிற்குள் வீசி யெறித்தும் உயர் ஆதிக்க சாதி வெறியாட்டத்தை இந்துத்துவ அமைப்புகளைச் சார்ந்தவர்கள் செய்திருக்கின்றனர். இப்படியான ஒரு சீர்கெட்ட சூழலில் கர்ணனின் கைதுக்கு பின் உள்ள நிகழ்வுகளையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.
ஒரு மாதத்திற்குள் ஓய்வு பெற இருக்கும் நீதிபதி கர்ணன் மீது, அவர் ஓய்வு பெறுவதற்குள்ளாகவும், நீதிமன்றத்தின் இறுதி வேலை நாளின் பொழுதும் அவசர அவசரமாக இந்த தீர்ப்பினையும், தண்டனையையும் வழங்கியதன் அரசியல் கவனத்திற்குரியது.

ஜனவரி 23, 2017ல் இந்திய பிரதமர் மோடிக்கு, கல்கத்தாவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த தமிழகத்தை சார்ந்த நீதிபதி. கர்ணன் அவர்கள் தான் சென்னையில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது சக நீதிபதிகளில் சிலர் ஊழல்வாதிகளாக இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதி இருந்தார். இந்த விடயத்தை ‘சு-மோட்டோ’ என்னும் ‘தன்னிச்சையான’ விருப்பத்தின் அடிப்படையில் எடுத்துக் கொண்டது. இதன் அடிப்படையில் பிப்ரவரி 8ம் தேதி 2017ல் நீதிபதி. கர்ணன் அவர்கள் நீதிமன்ற மற்றும் நிர்வாக பணிகளில் இருந்து விடுபடவும் பணிகளில் இருந்து விலகி இருக்குமாறும், தன்னுடன் இருக்கும் நீதிமன்ற மற்றும் நிர்வாக கோப்புகளை தலைமை பதிவாளராக உயர் நீதிமன்றத்துக்கு இருக்கும் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றத்தின் ஒரு மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. இந்த நீதிபதிகள் திரு.ஜெகதீஸ் சிங் கெகர், தீபக் மிஸ்ரா, காலமேஸ்வர், ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பினாகி சந்திரகோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் ஆவர்.

உச்ச நீதிமன்றத்தின் பதிவு அலுவலகத்திற்கு திரு. கர்ணன் அனுப்பிய பதிவிற்கும், குறிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்காமல் பிப்ரவரி 13ம் தேதியன்று திரு கர்ணன் நேரில் வராமல் இருந்ததையும் அவர் சார்பான வழக்கறிஞர் இல்லாதிருந்ததையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது உச்ச நீதிமன்றம். வழக்கை மார்ச் 10, 2017 தேதிக்கு ஒத்திவைத்து. நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இதை எடுத்துக்கொண்டதால் நீதிபதி. கர்ணன் சார்பாக எவரும், (அவரின் நேரடி ஒப்புதல்) இல்லாமல் ஆஜராக கூடாது என்று சொன்னது. மார்ச் 10ம் தேதி கூடிய நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கர்ணனுக்கு குறிப்பாணை அனுப்பியதை பதிவு செய்த நீதிமன்றம், திரு கர்ணன் மார்ச் 8ம் தேதி உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்திற்கு (Registry of Supreme Court) உச்ச நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்க கேட்டிருப்பதை மறுத்த நீதிபதிகள், திரு. கர்ணன் தனது கடிதத்தில் சில நீதிபதிகள் மீது குற்றச்சாட்டு கூறியிருந்ததை, நீதிமன்ற அவமதிப்புக்கு அளித்த பதிலாக ஏற்க முடியாதென நிராகரித்தனர். மார்ச் 31ம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென பிணையுடன் கூடிய பிடி ஆணையை மேற்கு வங்கத்தின் தலைமை காவல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.

இதன்படி மார்ச் 31ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆஜரான கர்ணனிடம் நீதிபதிகள் தன்னுடைய குற்றச்சாட்டினை அவர் உறுதிப்படுத்துகிறாரா மற்றும் இந்த குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கேட்டது. இந்த குற்றச்சாட்டுகளை மார்ச் 25ம் தேதி அவர் எழுதிய கடிதத்தினை மார்ச் 31ம் தேதி நேரடியாக நீதிபதிகளிடம் அளித்ததன் அடிப்படையில் எழுதப்பட்டது. இந்த விசாரணைக்குப் பின்னர் ‘கர்ணன் அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என்றும் அவர் எழுதிய கடிதங்களுக்கான பதிலை அளிக்க வேண்டும்’ என்று சொன்னது. அதே சமயம் அரசால் வழங்கப் பட்ட சென்னை பங்களாவை விட்டு வெளியேற உத்தரவிட்டதை ஏற்று அவ்வீட்டிலிருந்து வெளியேறினார்.

பின்னர் மே, 1, 2017ல் உச்சநீதிமன்றத்திற்கு மேலும் அவமதிப்பினை தன் பேட்டியின் மூலமாக உண்டாக்குவதாக சொல்லி, பிப்ரவரி 8, 2017க்கு பின்பு திரு. கர்ணன் அளித்த தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த வேண்டாமென்று நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், கமிஷன்களுக்கு உத்தரவிட்டது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதால் இந்த உத்தரவை இடுவதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
இது மட்டுமல்லாமல் உச்சநீதிமன்றம் திரு. கர்ணனின் மனநிலை குறித்து கேள்வி எழுப்பி, அவரை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மேற்கு வங்கத்தின் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டது. மே 4ம் தேதியன்று அவர் மீது விசாரனை நடத்தி அறிக்கைத் தரச் சொன்னது. விசாரணைக்கு வந்த மருத்துவ அதிகாரிகளிடத்தில் மிக மரியாதையான முறையில் விசாரணைக்கு உட்பட மறுத்துவிட்டார் திரு. கர்ணன். விருப்பமில்லாதவர்களை கட்டாயப்படுத்தி மருத்துவபரிசோதனை செய்யக்கூடாதென்பதால் உச்சநீதிமன்ற உத்தரவை அம்மருத்துவர்கள் நிறைவேற்றவில்லை.

மே 8ம் தேதிக்குள்ளாக பதில் அளிக்கப்படவில்லையெனில் கர்ணன் அவர்களின் அவகாசம் முடிந்துவிட்டதாக உச்சநீதிமன்றம் நிலைப்பாடு எடுத்தது. மே 9ம் தேதி உச்சநீதிமன்றத்தின் கடைசி வேலைநாள். அதற்கு பின்னர் விடுமுறை ஆரம்பிப்பதால் அதற்குள்ளாக முடிவை எடுக்கும் திட்டத்தில் உச்சநீதிமன்றம் இருந்தது. மேலும் நீதிபதிகளில் திரு. பினாகி சந்திரகோஷ் மே 27ம் தேதி ஓய்வு பெறுவதாக இருக்கிறார். அனைத்து வழிமுறைகளும் நிறைவு பெற்றதாக அறிவித்து, மே மோதம் 9ம் தேதி விசாரணை முடிவு பெற்றதாக அறிவித்து நீதிமன்ற தீர்ப்பையும், தண்டணையையும் ஒரு சேர அறிவித்தது. இதன்படி நீதிபதி பதவியிலிருந்து அவரை நீக்குவதாகவும் மற்றும் ஆறு மாத கால சிறைத் தண்டனையையும் ‘நீதிமன்ற அவமதிப்பு’ காரணத்திற்கான தண்டனையாக வழங்கியது. மேலும் கர்ணனின் பேட்டிகளை ஊடகங்கள் பதிவு செய்யக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதி கர்ணனை தண்டிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் செயல்பட்ட உச்சநீதிமன்றம் பல்வேறு தவறுகளை செய்திருக்கிறது. குற்றம் சாட்டுவதும், தண்டனைக்கான தீர்ப்பினை வழங்குவதும் ஒரே நாளில் நீதிமன்றங்கள் செய்வதில்லை. இந்த இரண்டு நிகழ்விற்கும் இடையே குறிப்பிட்ட கால அளவு இருக்கவேண்டுமென்பதன் காரணம் ‘ஒருவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்த பின்னர் புலப்படாத இரட்டைத்தன்மையோடு(bias) கூடிய கருத்துக்களின் அடிப்படையில் தண்டனை தீர்ப்பினை வழங்கி விடக்கூடிய அபாயத்திலிருந்து மீள்வதற்காகவே இம்முறை கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் திரு. கர்ணனுக்கு இது கடைபிடிக்கப்படவில்லை. மாறாக ஒரே நாளில் குற்றச்சாட்டும், தண்டனையும் (நீதிமன்ற இறுதி வேலை நாளில்) வழங்கப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் ‘மன்னிப்பு கோரும்’ வாய்ப்பும் கர்ணனுக்கு வழங்கப்படவில்லை.

மேலும் கர்ணன் தனது கருத்துக்களை ஊடகங்களில் வெளியிடும் பட்சத்தில் அதை ஊடகங்கள் பதிவு செய்ய கூடாது என்று உத்தரவிட்டதும், அரசியல் சாசனத்துடைய கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக அமைந்தது. இது ஊடகச் சுதந்திரத்திற்கும் எதிரானதே. மேலும் மிக முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேண்டிய விடயங்களாக, உயர் நீதிமன்ற நீதிபதியை பதவியை விட்டு நீக்கக் கூடிய அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கோ அதன் நீதிபதிகளுக்கோ கிடையாது. இந்த அத்துமீறலை உச்சநீதிமன்றம் செய்திருக்கிறது.
இச்சமயத்தில், இதே காலத்தில் நடைபெற்று வரும் மற்றுமொரு நிகழ்ச்சியினையும் நாம் இணைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. கடத்த ஜூன் 16, 2017ல் ஆந்திராவின் (ஹைதராபாத்) உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி. நாகார்ஜுன ரெட்டி மீதான பதவி நீக்க பாராளுமன்ற நடவடிக்கைக்கு தேவையான மேலவை பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவில் 54 ஆதரவு உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் தமது ஆதரவை திரும்ப பெற்றிருக்கின்றனர். இதனால் இவரை பதவியிலிருந்து நீக்க தேவைப்படும் பாராளுமன்ற மேலவை முறையினை நடைமுறைப் படுத்த இயலாது போய் உள்ளது. ஒரு உயர் அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதியின் மீது பதவி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது 50 மக்களவை உறுப்பினர்கள் ஒப்புதல் பெற்ற முன்மொழிவை துணை சனாதிபதியிடம் அளித்து பாராளுமன்ற உறுப்பினர் கொண்ட விசாரணைக் குழுவினை ஏற்படுத்தி அதன் பரிந்துரையின் அடிப்படியில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் தீர்மானம் இயற்றி இதை இரண்டு அவைகளிலும் நிறைவேற்றி அந்த தீர்மானத்தை சனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி, அவரிடம் இருந்து பெறப்படும் ஒப்புதலின் அடிப்படியில் மட்டுமே ஒரு உயர் அல்லது உச்ச மன்ற நீதிபதியை பதவியிலிருந்து நீக்க இயலும். இந்த வழிமுறைகளை பின்பற்றாமல் உச்ச நீதிமன்றம் கர்ணனை பதவிநீக்கம் செய்திருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்றத்திற்கு ஒருவரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை.

மேலும் கர்ணனின் மீதான தண்டனைக்கும், குற்றச்சாட்டிற்குமான அடிப்படை காரணங்களை உச்சநீதிமன்றம் பதிவு செய்யவில்லை. இத்தனைக்கும் பல்லாயிரக்கணக்கான ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்’ நிலுவையில் இருக்கையில் கர்ணன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க காரணமென்ன? காவிரி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்றாத கர்நாடக அரசின் மீது செலுத்தப்படாத ‘நீதிமன்ற அவமதிப்பு’ தண்டனை, உச்சநீதிமன்றத்தில் நேரில் வராமல், அவமதிப்பு குற்றத்திற்கு உள்ளான பெருமுதலாளி விஜய் மல்லையாவிற்கு காட்டப்பட்ட சலுகை கர்ணனுக்கு அளிக்கப்படவில்லை. கர்ணனுக்கு தண்டனை விதிக்கப்பட்ட அதே தினத்தில், அதே உச்சநீதிமன்றத்தில் விஜய் மல்லையாவிற்கு அதே குற்றச்சாட்டின் மீது ஜூலை 2017 வரை கால அவகாசம் கொடுத்தது.

திரு. கர்ணன் முன்வைத்த நீதிபதிகளின் ஊழல் குற்றச்சாட்டு பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது. அவரின் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமெனில் அது விளைவிக்கக்கூடிய அநீதியின் ஆழத்தை உணரும் பட்சத்தில் இந்த குற்றச்சாட்டின் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும். நீதிமன்றங்களே நீதி கிடைப்பதற்கான இறுதி வாய்ப்பாக இருக்கும் பட்சத்தில் இக்குற்றச்சாட்டு ஏன் விவாதத்திற்கு வராமல் போனது என்பதே நாம் எழுப்பும் கேள்வி. மேலும் திரு. கர்ணனின் குற்றச்சாட்டு என்பது பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் அளிக்கப்பட்டது எனும் பொழுதில் உச்ச நீதிமன்றம் இதில் எந்த தர்க்கத்தின் அடிப்படியில் தன்னார்வமாக தலையிட்டது. கர்ணனின் குற்றச்சாட்டினைப் பற்றிய முக்கியத்துவத்தை முற்றிலும் புறக்கணித்த நீதிமன்றம், குற்றம் சாட்டிய கர்ணனை குற்றவாளியாக சித்தரித்து ஆறுமாத சிறைத்தண்டனையை வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பினை வழங்குவதற்கு அனைத்து நீதிமன்ற வழிமுறைகளையும் புறக்கணித்துவிட்டு கர்ணனை தண்டித்திருக்கிறார்கள். இதன் அடிப்படியில் ஜூன் 20ம் தேதி கோவையில் கைது செய்யப்பட்ட கர்ணன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கான பிணை கோரும் வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. கர்ணனுக்கு தண்டனை வழங்கிய அமர்வு மட்டுமே இது குறித்து முடிவெடுக்க இயலுமென்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

கர்ணன் அவர்கள் குற்றம் சாட்டிய நீதிபதிகள் பட்டியலில் உயர் சாதி நீதிபதிகள் அடங்கி இருப்பதும், கர்ணன் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவராக இருப்பதுமே உச்ச நீதிமன்றத்தின் நேர்மையற்ற, முறைதவறிய தீர்ப்புகள் பின்புலத்தில் இருக்கும் ஆதிக்க அரசியல். இக்குற்றச்சாட்டினை கர்ணன் வெளிப்படையாக பதிவும் செய்திருக்கிறார். அவர் சென்னை நீதிமன்றத்தில் பணியாற்றிய தருணத்தில் அவருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்புகள் அவரை வெளிப்படையாக பேசவைத்திருக்கிறது என்பது மிகையல்ல. இந்திய நீதிமன்றங்களில் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் சாதி ஆதிக்கம் நிலை நிறுத்தப்படுவது தொடர்ந்த வரலாறாகவே இருந்து வருகிறது.
இந்நிகழ்ச்சி நடைபெறும் இதே காலக்கட்டத்தில் தான், ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சி.வி.நாகார்ஜூன ரெட்டியின் மீதான குற்றச்சாட்டும் உச்சநீதிமன்றத்தினால் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

திரு.சி.வி நாகார்ஜூன ரெட்டியின் சகோதரர் பவன்குமார் ரெட்டி அவருடைய வீட்டில் வேலை பார்த்த ராமன் ராஜூலு என்பவரை செம்மரக்கடத்தலின் வழக்கில் அரசு வனத்துறை வாகனத்தின் மீதான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வற்புறுத்தியதை மறுத்திருக்கிறார். செம்மரக் கடத்தல் தொழிலில் நெருங்கிய உறவு வைத்து செயல்பட்ட பவன்குமார் ரெட்டி, ராயச்சோட்டி எனும் கடப்பா மாவட்டத்தில் இருக்கும் நகரின் துணை அரசு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இச்சமயத்தில் கடப்பாவின் மாவட்ட நீதிபதியாக நாகார்ஜூன ரெட்டி பணியாற்றி வந்திருக்கிறார். இக்காலக்கட்டத்தில் இரு சகோதரர்களும் இணைந்து நீதிமன்ற நிர்வாகத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு பிணை அளிப்பது முதல் நீதிமன்ற ஆவணங்களை திருத்துதல், காணாமல் போகச் செய்தல் என்று பல்வேறு குற்றங்களை செய்திருக்கின்றனர். இந்நிலையில் 2012 நவம்பர் மாதத்தில் தனது வேலையாளான திரு.ராமன் ராஜீலுவை ஒரு பொய் வழக்கிற்காக நெருக்கடி கொடுத்ததை நிறைவேற்ற மறுத்ததற்காக அவர் மீது பவன்குமார் ரெட்டி மண்ணெண்ணை ஊற்றி எரியூட்டி இருக்கிறார். அந்த ராமன் ராஜீலு தான் இறப்பதற்கு முன்பான வாக்குமூலத்தில் பவன்குமார் ரெட்டியின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மரண வாக்குமூலத்தில் இருந்து தனது சகோதரரின் பெயரை நீக்க வேண்டும் என்று நாகார்ஜூன ரெட்டி, அந்த ஊரின் நீதிபதியாக இருந்த பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார். இந்த அழுத்தத்திற்கு அடிபணியாத ராமகிருஷ்ணாவை சாதியின் அடிப்படையில் இழிவுபடுத்தி இருக்கிறார் நாகார்ஜூன ரெட்டி. வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்க முயன்ற பவன்குமார் ரெட்டியின் நடவடிக்கை அராஜகத்தை, மரணத்திற்கு முன் பதிவு செய்ததை, மாற்ற மறுத்த காரணத்திற்காக நேர்மையான நீதிபதி ராமகிருஷ்ணா நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறார்.

இது குறித்து தனது குற்றச்சாட்டினை வழக்காக ராமகிருஷ்ணா உயர்-உச்ச நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார். வழக்கை பதிவு செய்த ஒரு வாரத்திற்குள்ளாக ஆந்திராவின் மற்றொரு மூலைக்கு அவர் மாற்றப்பட்டிருக்கிறார். அதற்கடுத்த 3 வாரத்தில் பதவி குறைப்பு செய்யப்பட்டிருக்கிறார். 7 ஆண்டுகள் ஒருவர் வழக்கறிஞராக பணியாற்றிய பின்னரே அவர் அரசு தரப்பு வழக்கறிஞராக இயலும். ஆனால் பவன்குமார் ரெட்டி ஆறு ஆண்டுகள் கூட முழுமையாக வழக்கறிஞராக பணியாற்றாமலே துணை அரசு வழக்கறிஞராக ஆக்கப்பட்டது மட்டுமல்ல, அவரது பணிகாலம் முடிந்த பின்னர், அப்பதவிக்கு வந்தவரை பணிமாற்றம் செய்துவிட்டு பணியை தொடர்கிறார். 2006 லிருந்து மூன்று முறை அவர் இப்பதவியில் விதிமுறை மீறி பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். நிலை இப்படியாக இருக்க ராமகிருஷ்ணனின் வழக்கை விசாரிக்க முடியாது என்று ஐதராபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றமோ இவ்வழக்கினை ஐதராபாத் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது. நாகார்ஜூன ரெட்டி மீதான நடவடிக்கை எடுக்க மக்களவையில் ஆதரவு திரட்டப்பட்ட பொழுதில், 2016இல் 61 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதில் 19 உறுப்பினர்கள் பின்வாங்கினார்கள். ஆறு மாதத்திற்கு பின்னர் 54 உறுப்பினர் ஆதரவாக இருந்த நிலையில் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவை திரும்ப பெற்றிருக்கிறார்கள். இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆக ஆதிக்க, உயர்சாதியினரின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க மறுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். மாறாக குற்றம் சாட்டிய கர்ணனை விதி முறைகளுக்கு மாறான முறையில் தண்டித்து, கைது செய்து சிறையில் அடைத்தது மட்டுமல்லாமல் அவருடைய அடிப்படை உரிமைகளையும் மறுத்து இருக்கிறது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகிய இரண்டு பேருமே அதிகார அளவில் ஒரே நிலையை பெற்றவர்கள். மேல்முறையீட்டுக்குரிய நீதிமன்றமாக உச்ச நீதிமன்றம் விளங்குவது மட்டுமே இவற்றிற்குள்ள வேறுபாடு. ஆகவே கர்ணனின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான பதிலடி தீர்ப்புகளும் செல்லுபடியாகும் வலிமை உள்ளவை. மேலும் நீதிபதிகளை பதவிக்கு தேர்ந்தெடுக்கும் முறை இன்றுவரை பொதுமக்கள் பார்வைக்குட்பட்டதான வெளிப்படை தண்மையற்றதாகவே இருந்து வருகிறது. நீதிமன்றத்தின் மீதான, நீதிபதிகள் மீதான விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள இயலாத சனநாயக தன்மையற்ற போக்கினையே இந்த நீதிமன்ற கட்டமைப்புகள் கொண்டுள்ளன.

தனது மேட்டிமைத்தன்மை (Elitisms) கூறுகளை இவ்வகையான வெளிப்படையற்ற தன்மை மூலம் பாதுகாப்பதுடன் தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்கிறது. இதனால் இதன் உள்ளார்ந்து வெகுசன ’மக்களுக்கு’ எதிரான அதிகாரவர்க்க பண்பாட்டினை மேற்கொள்ளும் கூறுகளை மேலும் மேலும் உள்வாங்கி நிற்கிறது. பார்பானியத்தினால் ஆதிக்கம் செலுத்தப்படும் நீதித்துறை தனது மனுதர்ம சாய்வினை வாய்ப்பு கிடைக்கும் தருணங்களில் வெளிப்படுத்தியே வருகிறது. இந்த நிறுவனங்கள் சனநாயக விரோதத்தன்மையுடன் செயல்பட்டு வருவதை பல்வேறு சமீபகால தீர்ப்புகள் விளக்குகிறது. ’நீட்’ தேர்விற்கு எதிரான விசாரணை தமிழக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு எதிரான தீர்ப்பினை வழங்குவது மட்டுமல்லாமல் ’நீட்’ குறித்த வழக்குகளை மாநில நீதிமன்றங்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்குமாறு உத்திரவிட்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் முரண்பட்டதும், மக்கள் விரோதமான நிலைப்பாடு கொண்ட ஆராஜகத்தையே இத்தகைய தீர்ப்புகள் உணர்த்துகின்றன.

நீதிமன்றங்கள் இந்தியாவின் பார்பனிய, ஆரிய பண்பாட்டு மேலாண்மையை வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் எல்லாம் உயர்த்திப் பிடித்திருக்கின்றன. இதற்கு ஏற்றாற்போல ‘அவுட்லுக்’ பத்திரிக்கையில் 22-மே-2017 இல் ஜி.சி. சேகர் எழுதிய கட்டுரை கர்ணன் மீதான character assassination உள்ளடக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது.

கர்ணனின் கைதின் பின்னணியில் நடைபெற்ற முறைகேடுகளை தனது frontline பத்திரிக்கையில் விரிவாக எழுதிய ‘இந்து’ பத்திரிக்கை குழுமம், 22-06-2017 ‘தி இந்து’ ஆங்கில இதழில், கர்ணன் குறித்த character assassination-ஐ முதல்பக்க தலைப்பில் செய்திருக்கிறது. சக நீதிபதிகளுடன் முறையான உறவையும், முரண்பாடான உறவையும் வளர்த்துக் கொண்டு அராஜகமாக நடந்து கொண்டவர் என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இதற்கு சாட்சியாக தமிழின விரோத தீர்ப்புகளையும், ஆரிய-பார்பபனிய மனநிலையை சென்னை உயர் நீதிமன்றத்தில் வாய்ப்பிருக்கும் தருணங்களில் வெளிப்படுத்திய நீதிபதி கவுல் அவர்களின் பேட்டியை மேற்கோள் காட்டி இருக்கிறது. கர்ணன் தனது சகபணியாளர்களிடம் கொண்டிருந்த முரண்பட்ட உறவிற்காக தண்டிக்கப்படவில்லை எனும் பொழுதில் அவரது தனிப்பட்ட குணாம்சங்களை பணியிடத்து நடவடிக்கைகளை எழுதி அவர் மீது குற்ற பிம்பத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் என்பது, உச்சநீதிமன்றத்தின் ‘பார்ப்பனிய மனநிலையில் முறைதவறி எடுக்கப்பட்ட தண்டனை நடவடிக்கைகளை புனிதப்படுத்துவதற்காக அன்றி வேறென்னவாக இருக்க இயலும்?

பார்ப்பனிய-ஆங்கில ஏகாதிபத்தியத்தின் எச்ச பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கிய நீதிமன்ற நிறுவனத்தில், இந்த மனநிலைக்கு முற்றிலும் முரண்பட்ட வாழ்வியல் சூழலில் வளர்த்தெடுக்கப்படும் சாமானிய மக்களிடத்திலிருந்து வரும் பிரதிநிதிகளால் ஒன்றிப் போவதென்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. உயர்தட்டுப் பண்பாடு எனும் ஆதிக்கப் பண்பாடு கொண்ட நிறுவனங்களில் இது போன்ற முரண்பாடுகள் இயல்பானவை. ஒரு பார்ப்பன-முதலாளித்துவ-பண்ணையார் சூழலில் வளர்த்தெடுக்கப்பட்டவர் எவ்வாறு அடித்தட்டு மக்களின் வாழ்வியல் பண்பாடுகளில் அன்னியர் தன்மையோடு எதிர்கொள்வாரோ அதே தன்மை கொண்ட சூழல்களே இவை. இந்த அன்னியச் சூழலில் தன்னை பார்ப்பானாக, பண்பாட்டியலில் மாற்றிக் கொள்ளும் அடித்தட்டு மக்கள் அங்கீகரிக்கப்படுவதும், முரண்படுகிறவர்கள் ‘பண்படாதவர்களாக’ பிம்பத்தை கட்டி எழுப்புவதும் பல்வேறு அரசு – தனியார் நிறுவன கட்டமைப்புகளில் தொடர்ந்து நிகழ்கிறது. பள்ளிக்கூடம் முதல் IIT, JNU எனும் கல்வி நிறுவனங்கள் முதல் நீதிமன்றங்கள் வரை இந்த முரண்பாடுகள் பல தருணங்களில் வெளிப்பட்டிருக்கின்றன. அச்சமயங்களில் எல்லாம் பாதிக்கப்பட்ட தரப்பினரை நேர்மையாக அணுகாமல் ‘பண்படாதவர்களாக’ பிம்பங்கள் கட்டி எழுப்புவது நிகழ்ந்து வருகிறது. Elitist பண்பாட்டு விழுமியங்களோடு ஒன்றாதவர்களுக்கு இத்தகைய பிம்பங்கள் இயல்பாக கட்டி எழுப்பப்படுகின்றன.

கிரிக்கெட் விளையாட்டு வீரராக மீனவர் சமூகத்திலிருந்தும், வறிய பொருளாதார பின்புலத்தில் இருந்தும் முன்னேறிய திரு.காம்ளே-வை மனைவியோடு உறவு முறிவு, கட்டற்ற வாழ்க்கை முறை என்று குற்றம் சாட்டி பண்பாட்டிற்கு ஒவ்வாத நபராக முத்திரையும், பிம்பமும் ஏற்படுத்தி வெளியேற்றிய அதே கிரிக்கெட் வாரியம், இதே குறைபாட்டுடன் இருந்த கங்குலியை அணி தலைவராக உயர்த்தியது வரை வாய்ப்பினை கொடுத்தது. அச்சமயத்திலும் காம்ளே குறித்த பத்திரிக்கை கட்டுரைகள் Character Assassination தன்மையிலேயே வெளியிடப்பட்டன.

கர்ணன் முன்வைத்த குற்றச்சாட்டின் மீதான விவாதங்கள் குறித்து எந்தப்பத்திரிகையும் அழமாக விசாரிக்காமல் கவனமாக தவிர்த்திருக்கிறார்கள். கர்ணன் நடத்தும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை வெளியிடக்கூடாது என்று உத்தரவிட்டு பேச்சுரிமையை மறுத்த நீதிமன்றம் ஒருபுறம், கர்ணனின் கேள்வியின் நியாயத்தை பேசமறுத்து சாதியின் பின்னால் ஒளிந்து கொள்பவர் எனும் அவதூறு விவாதங்கள் மறுபுறம் நடைபெற்றிருக்கிறது.

மேட்டிமைச் சமூக புனிதங்கள் குலைக்கப்பட்டு விட்டதாகவும், அதற்குரிய பண்பாட்டுத் தன்மை diplomatic niceties கர்ணனிடம் இல்லையென்றும் குற்றச்சாட்டுகளை பார்பனிய-பனியா மேலாண்மை அரசு நிறுவனங்கள் பிரயோகித்து, ஊழல் செய்த நீதிபதிகள் குறித்து கேள்வியை கள்ள மெளனத்துடன் கடந்து செல்கின்றன.

தந்தைப் பெரியார் அழுத்தமாக குறிப்பிட்டதைப் போன்று இந்நாட்டின் நீதிமன்றங்கள் பார்ப்பன நீதியை பொதுநீதியாக வழங்குவதற்குரிய மன்றங்களே அன்றி வெகுமக்கள், உழைக்கும் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நீதியை வழங்கும் மன்றங்களல்ல.

மேட்டிமைத்தன்மையின் போலி நீதி முகத்தை, வெளிப்படையான உழைக்கும் மக்களின் பண்பாட்டு எதிர்வினைகள் உடைக்கும் எனில் அதை நாம் வலிமையாகவும் மீண்டும் மீண்டும் செய்யும் வலிமை கொண்டவர்களாக மாறுவதே காலத்தின் தேவை.

இச்சூழலில் தலித் சமூகத்தின் பிரதிநிதியாக ஒருவரை சனாதிபதி தேர்தலில் நிறுத்தியுள்ளதாக சனதான தர்மத்தையும், மனு நீதியையும் வலியுறுத்தும் பா.ஜ.க மோடி அரசு அறிவித்திருக்கும் அதே நாளில் கர்ணனும் கைது செய்யப்படிருக்கிறார். மோடிக்கு கர்ணன் அனுப்பிய

ஊழல் நீதிபதிகளின் பட்டியல் என்ன ஆயிற்று எனும் கேள்வியை எழுப்பப் போவது யார்?

– திருமுருகன்.கா,
ஒருங்கிணைப்பாளர், மே பதினேழு இயக்கம்,
புழல் சிறை

 

Leave a Reply