அம்பரப்பர் மலையில் உள்ள அம்பரப்பராயர் பங்குனி திருவிழா பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பநாசாரிபட்டி, ராமகிருட்டினாபுரம், புதுக்கோட்டை, திம்ம நாயக்கன் பட்டி , ஆகிய ஆறு ஊர் மக்களால் கொண்டாடப்பட்டது. நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்தும் வேண்டுதலை முன்வைத்து கட்டளை கட்டி கொண்டாடினார்கள்.
இந்த ஆறு ஊர் மக்களின் வாழ்வாதாரமும் இந்த மலையை நம்பித்தான் இருக்கின்றது. இவர்களின் பூர்வ தொழில் ஆடு மாடு வளர்ப்பது ஆகும். இந்த பகுதியில் இரண்டு மூன்று பேர் சிறு குழுவாக இணைந்து மொத்தமாக ஆடு மாடுகளை வளர்க்கின்றனர். இந்த மக்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. இதில் பொட்டி புரம் மற்றும் ராமகிருசுனாபுரம் கிராமங்களில் மட்டும் சிலர் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியிருக்கின்றனர்.
பொட்டி புரத்தை சேர்ந்த ஒரு பெரியவர் “எங்களுக்கு அம்பரப்பரையும் இந்த மலையையும் ஆடு மாடுகளையும் தவிர வேறு எதுவும் தெரியாது. இந்த ஊர சுத்தி உள்ளவங்கலாம் இத சாமி மண்ணுனுதான் சொல்லுவாங்க. அந்த சாமிங்கதான் எங்களை காப்பாத்தனும். எங்களால முடிஞ்ச வரைக்கும் போராடுவோம். அம்பரப்பர் மூணு மாசம் கெடு கேட்டுருக்கார் அதை விரட்டி அடிக்க..” இந்த மக்கள் இயற்கையை தொந்தரவு செய்யாத ஒரு வாழ்க்கை வாழ்கின்றனர். இந்த மக்களை அப்புறப்படுத்தும் நியூட்ரினோ திட்டத்தை தங்கள் அம்பரப்பர் தடுத்து நிறுத்துவார் என்று அந்த மக்கள் நம்புகின்றனர். இந்த மலை இந்த மக்களின் வாழ்வாதாரம் மட்டுமல்ல. அது அவர்களின் அம்பரப்ப ராய பெருமாளின் வாழ்விடமும் கூட ..
”இது சும்மா சின்ன திருவிழாதான், பெரும்பொங்கள் வரும் போது சொல்லுறேன் வந்துருங்க .. இனி இந்த மலைய நாங்க விட்டு கொடுக்க மாட்டோம்” என்று சொன்னார் அந்த ஊர் இளைஞர் பெருமாள். இது வரை இல்லாத நெருக்கடியை அந்த மக்கள் இப்பொழுது சந்திக்கின்றனர்.. தேவாரத்தில் இருந்து பொட்டி புரத்தை தாண்டி செல்லுகின்ற போதே ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வரும் புது மனிதர்களை பற்றிய தகவல்களை ஓட்டுனர்களிடம் காவல் புலனாய்வு துறையினர் பெறுகின்றனர்.. . இதுவரை அரசு பார்வையே படாத அந்த பகுதி இன்று ஐ. எஸ் காவல் துறையினரால் நிரப்பபட்டுள்ளது. திருவிழாவில் நாம் நான்கு புகைப்படம் எடுக்கும் முன்னரே அவர்கள் நம்மை யார் என்று விசாரிக்க துவங்குகிறார்கள் ..
மலை அடிவாரத்தில் ஒரு கோவிலும் மலையில் ஒரு கோவிலும் உள்ளது. மலையடிவாரத்தில் சிலர் பொங்கல் வைத்து தேவராட்டம் ஆடி கொண்டு இருக்கின்றனர் . சில தாய்மார்கள் வேண்டுதல் பாடலை பாடி கொண்டு இருகின்றனர். ஒரு குழு மலை மேல் உள்ள அம்பரப்பர்க்கு விளக்கு போட செல்கின்றனர். அவர்கள் அங்கு விளக்கு போட்டதும் ஒரு வெள்ளைக்கொடி ஏற்றுகின்றனர். அடுத்து கீழ் கோவிலில் மரத்தில் பாலூற்றும் நிகழ்வு நடைபெறுகின்றது. அதன் பின் பூஜை செய்து வணங்குகின்றனர்.
அம்பரப்பர் மலையடிவாரத்தில் உள்ள ஓடையை திசை மாற்றிவிட்டு ஓடையின் உள்தான் இப்பொழுது கட்டுமான வேலை நடைபெறுகிறது. அதில் தோண்டப்பட்ட ஒரு பெரும்குழி சேற்றால் நிரம்பி புதைக்குழி போல உள்ளது.. தண்ணீர் குடிக்க சென்ற இரண்டு ஆடுகள் அந்தப் புதை குழியில் விழுந்து சேற்றில் புதைந்த வண்ணமாக இருந்தது. அப்பொழுது அதை வெளியே எடுப்பது பெரும் போரட்டமாகவே இருந்தது. மீட்க்கப்பட்ட ஆடுகளின் உரிமையாளரான ஆட்டுக்கார பெரியவர் ”மலையில பத்தி விட்டோம்னா சாயிங்காலம் வந்து பத்திட்டு போவோம். இது வரைக்கும் அப்படித்தான் வழக்கம். இனி அப்படி இருக்க முடியாது. இது ஆரம்பிக்கும் போதே இப்படி ஆடு மாடுகளுக்கு ஆபத்தா வருது. இனி என்னலாம் நடக்குமோ அந்த சாமிதான் எங்கள காப்பத்தனும்” என்றார்.. சாமி அருள் வந்து ஆடியவர்கள் எல்லாம் ”என் எல்லைக்குள் நான் நீயூட்ரினோவ வரவிட மாட்டேன்” என்று அம்பரப்பராகவே மாறி அருள்வாக்கு சொன்னார்கள் . தங்கள் அம்பரப்பர் தங்களை காப்பார் என்றே மக்களும் நம்பி இருக்கின்றனர். இதுவரை இயற்கையை தொந்தரவு செய்யாமல் வாழ்ந்த மக்களை அறிவியலின் பெயரால் அப்புரப்படுத்த முயல்கிறார்கள். அவர்கள் தாய் மண்ணான அந்த மலையை தவிர அவர்களுக்கு வேறெதுவும் தெரியாது. பெரும்பாலானவர்கள் அருகிலிருக்கும் போடிக்கு கூட போனது கிடையாது..
மேலும் இந்த மலை இவர்களுக்கு மட்டுமல்ல பல்வேறு ஆறுகளையும் அணைகளையும் கொண்ட மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியே. இது வரை அந்த பகுதி மக்களுக்கான அடிப்படை தேவைகளை கூட பூர்த்திசெய்யாத அரசாங்கம் இப்பொழுது நீயூட்ரினோ திட்டத்துக்கான ஆய்வுக்கு நீர் தேக்க தொட்டி அமைத்துள்ளனர். மக்கள் நலத்திட்டங்களுக்கு ஏதும் செய்யாத அரசு மக்களை அப்புறப்படுத்த வேகமாக செயல் படுகிறது.