புரட்சியாளர் அம்பேத்கர் 125வது பிறந்த நாளில் சாதிய ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான எழுச்சிப் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் ஏப்ரல் 14,2016 அன்று சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடத்தப்பட்டது. அனைத்து எளிய மக்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என சட்டத்தை நடைமுறைப்படுத்திய அம்பேத்கரின் நினைவை வலியுறுத்தும் வகையில் ”ஊழல் மின்சாரம்” ஆவணப்படம் இப்பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னணியின் தோழர்கள் அரங்க குணசேகரன் மற்றும் பொழிலன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் துரை, தமிழர் விடியல் கட்சியின் தோழர் இளமாறன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் தோழர் சீராளன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தின் தோழர் தெய்வமணி, குமுக தொழிலாளர்கள் விடுதலை இயக்கத்தின் தோழர் சேகர் ஆகியோரும், மே பதினேழு இயக்க தோழர்கள் பிரவீன் குமார், லெனா குமார், அருள் முருகன், திருமுருகன் ஆகியோரும் சாதிய ஆவணப் படுகொலைகள் குறித்தும், சாதி ஒழிப்பின் அவசியம் குறித்தும், புதிய பொருளாதாரக் கொள்கை என்பது சாதியை தாங்கிப் பிடிக்கும் நவீன மனுசாஸ்திரம் என்றும் உரை நிகழ்த்தினர். சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தோழர் சமர்பா குமரன் அவர்களின் சாதி ஒழிப்பு பாடல்கள், மே பதினேழு இயக்கத் தோழர்களின் பறை இசை நிகழ்வு ஆகியவை நடத்தப்பட்டது.