”முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கப்படும்” என்று முழங்கிய தமிழக பொதுப்பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர் விஜயகுமார் புற்றுநோயின் காரணமாக நேற்று நம்மை விட்டு பிரிந்தார்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய போலீசை நிறுத்த வேண்டும், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும், அணை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தமிழக பொறியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஜயகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் 2012இல் செய்திருந்தார்.
அய்யாவின் கடுமையான உழைப்பினால் முல்லைப்பெரியாறு போராட்டத்திற்கான ஆயுதமாக ‘முல்லைப்பெரியாறு’ குறித்த ஆவணப்படம் வெளியானது. மூத்த பொறியாளர் சங்கத்தின் தோழர்கள் இணைந்து இந்த அரும்பணியை செய்தார்கள்.
முல்லைப்பெரியாறு மட்டுமல்லாது, மீத்தேன், ஈழப்படுகொலை என பல்வேறு தமிழினப்போராட்டத்தில் ஆதரவு நிலைப்பாடும், செயல்பாடும் கொண்டிருந்த முத்த தோழர் நம்மைவிட்டுப் பிரிந்தது தமிழ்ச்சமூகத்திற்கு பேரிழப்பு.
அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தனது சுயநலன் சார்ந்த வாழ்க்கையை பார்ப்பதோ அல்லது சாதி-கட்சி-பெருநிறுவனங்கள் ஆகியவற்றில் இணைந்து தங்களை வளப்படுத்திக்கொள்ளும் மனநிலை கொண்ட பல்லாயிர அரசு அதிகாரிகளின் நடுவே, இப்படியான தன்னலமற்ற , போராடும் குணம் கொண்டவர்களை இழப்பது மிக மிக வேதனையானது.
கேரள அரசின் நெருக்கடிக்கு நடுவே தமிழகத்திற்கான தண்ணீர் தேவையை பெற்றுத்தரும் பொறியியல் நுணுக்கத்தினை செயல்படுத்திய அற்புத போராளி இவர்.
தங்களது பொறியாள அறிவையும், பதவியையும் மக்களுக்காக செலவிட்டவர் அய்யா. விஜயக்குமார் அவர்கள்.
பொறியாளர் படிப்பு படித்து நிறைந்திருக்கும் தமிழகத்தில் இதுவரை மக்களுக்கான தொழிற்நுட்பத்திற்காகவோ, மக்கள் பிரச்சனைகளுக்காகவோ தங்களது கல்வி அறிவைப் பயன்படுத்தாமல், தான் பணியாற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முழுநேரமாக மூளையை பயன்படுத்தும் இளைஞர்கள் அய்யா.விஜயக்குமார் போன்றோரின் மக்களுக்காக கல்வியறிவைப் பயன்படுத்தும் போராட்ட குணத்தினை கற்றுக்கொள்தல் அவசியம்.
எந்த விளம்பரமுமின்றி தமிழினத்திற்காக உழைத்து, நம்மை விட்டு பிரிகிற இது போன்ற போராளிகளுக்கு நம்முடைய மரியாதையை செலுத்துவோம்.
அய்யா.விஜயக்குமாருக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்.