ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலைக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம்

சிங்களப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, வயிற்றில் கல்லைக் கட்டி, கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்ட ஆறு வயது தமிழ் சிறுவன் தர்சன் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் 05-02-2016 வெள்ளி அன்று மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தப்பட்டது.

தர்சன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே. இலங்கையின் அரசியல் சாசனம் தமிழர்களுக்கு எதிரானது என்பதே உண்மை. அமெரிக்கத் தீர்மானம் என்பது ஏமாற்று வேலை என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஐநா தீர்மானத்தின் மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என சொல்லி விட்டு, தர்சன் படுகொலைக்கு மவுனம் காக்கும் நாடுகளின் நிலைப்பாடு கண்டிக்கப்பட வேண்டியது. ஐ.நாவின் கள்ள மவுனம் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமை ஆணையர் உடனடியாக தர்சன் படுகொலை குறித்து பேச வேண்டும். சிரியாவுக்கு அமைத்ததைப் போன்று இலங்கை அரசு குறித்து விசாரிக்க பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயத்தினை(ICTSL) அமைக்க வேண்டும். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், சீனா அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும். தெற்கு சூடானுக்கு நடத்தியதைப் போன்று தமிழீழ விடுதலைக்குப் பொதுவாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதை முன்னிட்டு முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ம் தேதி ஐ.நா அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தோழர் மல்லை சத்யா, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழர் குமரன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தோழர் பழ.நல் ஆறுமுகம், தமிழர் விடியல் கட்சியின் தோழர் இளமாறன், டிசம்பர் 3 இயக்கத்தின் தோழர் தீபக், SDPI கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

Leave a Reply