வெகுமக்கள் எழுச்சிக்கான விதையை தமிழீழத்தில் செந்தூரன் விதைத்திருக்கிறார். போலி வாக்கு வங்கி அரசியல்வாதிகளின் முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறது செந்தூரனின் தியாகம். மாவீரனாக இன்று நம்முன் மக்கள் எழுச்சிக்கான அறைக்கூவலை விடுத்திருக்கிறார்.
நல்லிணக்கம், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்று பசப்பிக்கொண்டிருந்த அரசியல்வாதிகள், அறிவுசீவிகள், இந்திய அரசு, அமெரிக்க, இங்கிலாந்து ஆகியவற்றின் முகமூடிகளை அம்பலப்படுத்தி இருக்கிறது செந்தூரனின் முழக்கம்.
தமிழீழ அரசியல்கைதிகளை விடுதலை செய்யக் கூட வக்கற்ற ஐ.நா தீர்மானம், இந்திய-அமெரிக்க நல்லிணக்க நடவெடிக்கைகள், இந்திய அரசின் கலாச்சார பரிவர்த்தனைகள், தமிழகத்தின் சோ-கால்டு முற்போக்குவாதிகளின் இலங்கை ஆட்சிமாற்றம் குறித்தான நம்பிக்கைகள் என பலவற்றினையும் இந்நிகழ்வு புரட்டி போட்டிருக்கிறது.
தி இந்துவோ, இங்கிருக்கும் முற்போக்கு மனித உரிமை ஆர்வலர்களோ இதுகுறித்து கள்ள மெளனம் காக்கிறார்கள். இலங்கையில் அனைத்து சரியாகி விட்டது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வினை பெற்றுக்கொள்ளலாம், தேசியம் என்பது பாசிசம் எனப் பேசிய வாய்கள் இப்பொழுது ஏன் திறக்க மறுக்கிறது?.. பார்ப்பனியத்தின் மனித குலவிரோத தத்துவத்திற்கும், இந்த முற்போக்கு-போலி மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும் உள்ள ஒற்றுமையை செந்தூரன் ராஜேஸ்வரனின் தியாகம் நமக்கு எடுத்துரைக்கிறது.
’
இசுலாமிய வெளியேற்றம் குறித்து முதலைக்கண்ணீர் வடித்த அகிலன் வகையறாக்களோ, தி இந்துவோ, இவர்களுக்கு ஒத்தூதும் அ.மார்க்ஸ் வகையறாக்களோ தங்களது கள்ள மெளனத்தினை உடைத்திடப் போவதில்லை. இந்தியாவின் செல்லப்பிள்ளைகளான இந்தக் குழுக்கள் இறுதி வரையில் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அங்கீகரிக்கப் போவதில்லை. இந்த அறிவுசீவிகளே தமிழகத்தின் பெரும் சாபம். விருதுகளை திருப்பி அளித்து எதிர்ப்பு காட்டும் திராணியற்ற மார்க்சிய படைப்புலக கும்பல்கள், இலக்கியவாதிகள் இலங்கையின் மனிதகுல விரோத போக்கினைப் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு, உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவு, இனப்படுகொலை என்பது நடக்கவில்லை என்று பேசும் இலங்கை-இந்திய-அமெரிக்க ஒட்டுக்குழுக்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?..
ஜெனீவாவில் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக ஒன்றுபட்டு நின்ற நபர்களின் அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?. அமெரிக்க-இலங்கை கூட்டுு தீர்மானத்திற்கு ஆதரவளித்துப் பேசியவர்கள் எந்தவகையான வியாக்கியானத்தினை தங்களின் தோல்வியின் பால் முன்வைக்கப் போகிறார்கள்?….
செந்தூரனின் இந்தத் தியாகம் ஒரு செய்தியை தெளிவுபடுத்துகிறது.
2009ல் தமிழரின் போராட்ட களத்தினை தனது கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க விரும்பிய கருணாநிதியின் ஒட்டுபொறுக்கித் தனத்தினை உடைத்து மக்களிடத்தில் போராட்டத்தினை ஒப்படைத்த மாவீரன்.முத்துக்குமாரின் ஈகைக்கு ஒப்பாக இந்த நிகழ்வு நடந்திருக்கிறது.
ஆனால் இனிமேலும் நம்மவர்கள் தங்களைத் தாங்களே ஈகைக்கொடுப்பது ஏற்புடையதன்று.. உயிரை மாய்த்துக்கொள்வதும் நலமன்று…. தேவைக்கதிமான இழப்பினை சந்தித்த நம் இனம் இனிமேலும் எந்த ஒரு தமிழ் குழந்தைகளையும் இழக்கக் கூடாது.
மக்களிடத்தில் செல்வோம். மக்களை திரட்டுவோம். மக்கள் திரள் போராட்டங்களை வலிமைப்படுத்துவோம்.
பாலஸ்தீனத்திலும், காசுமீரத்திலும் நடத்தப்படும் மக்கள் திரள் போராட்டத்தினைப் போன்று வலிமையான போராட்டத்திற்கு தமிழீழம் தயாராகட்டும். ஒட்டுபொறுக்கி அரசியல் வாதிகளை வீட்டிற்கு அனுப்புங்கள். பாராளுமன்றத்தில் விடுதலைப் பெற்றுத்தருகிறேன் எனப்பேசும் பசப்புவாதிகளை புறம்தள்ளுங்கள். உள்ளடி-இரண்டக வேலைகளைச் செய்யும் இந்தியாவின் துணைத்தூதரகத்தினை தமிழீழத்தினை விட்டு வெளியேற்றுங்கள். வன்முறையற்ற வலிமையான மக்கள் போராட்டத்திற்கு இளைஞர்கள் பின்னால் அணி திரளுங்கள்.
மாவீரர் தின வணக்க நிகழ்வுகளை கடுமையான ஒடுக்குமுறைக்குள் இருந்து கொண்டு நடத்திய வீரமிக்க மாணவத் தோழர்களுக்கு மே17 இயக்கம் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. எங்களிடத்தில் நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள். திரிந்து போன அரசியல்வாதிகளிடத்திலிருந்து விடுதலைக் கோரிக்கையை , போராட்டத்தினை மீட்டெடுத்திருக்கிறீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடையும்.
இளைஞர் கையில் இப்போராட்டம் சென்று கொண்டிருக்கிறது என்பதை மே17 இயக்கம் உணர்கிறது, அங்கீகரிக்கிறது, மகிழ்ச்சி கொள்கிறது. உங்களோடு தோளோடு தோள் நிற்போம் நாங்கள். வலிமையடைகிறோம் நாம்.
தமிழீழ மக்களே! இயக்கமாகுங்கள்.
செந்தூரன் ராஜேஸ்வரனுக்கு வீரவணக்கங்கள். தமிழீழம் நிச்சயம் வெல்லும்.
மே பதினேழு இயக்கம்.