ஒரு சமூகத்தின் பண்பாட்டு கலாச்சார அடையாளமாக திகழ்வது கலையும் இலக்கியமும் ஆகும்.
இந்த கலைகளில் ஒன்றான ’மைம்’ நாடக கலை என்பது வசனங்கள் இல்லாமல் மௌனத்தின் துணை கொண்டு தனது உடல் மொழியால் மக்களுக்கு தங்கள் கருத்துகளை வெளியிடும் ஓர் முறையாகும்.
‘ஒரு மீனின் கதை’ எனும் சூழலியல் நாடகம், மேற்கு வங்கத்தை சேர்ந்த நாடக கலைஞர் சுசாந்த தாஸ் அவர்களால் எழுதி இயக்கப்பட்டது. இந்நாடகத்தில் சுசாந்த தாஸ் தனி ஒருவராக நடித்திருக்கிறார், இந்த நாடகத்தை இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேற்றி பெரும் வரவேற்பு பெற்றது.
அந்த நாடகம் நிமிர் மற்றும் மே 17 இயக்கத்தின் முயற்சியால் முதன் முறையாக சென்னையில் செப்டம்பர் 14 அன்று நடத்தப்பட்டது.
சூழலியல் அரசியல் குறித்தும், மக்களின் உழைப்பை சுரண்டி கொழுக்கும் பெரு முதலாளி வர்க்கங்கள் சூழலின் மீது செலுத்தும் வன்முறை, பெருமுதலாளிகளுடன் இணைந்து கொண்டு மக்களின் மீது அதிகார வெறியாட்டத்தை நடத்துகிற அதிகார வர்க்கம், அணு உலைகளின் பெயரால் நடத்தப்படுகிற அணுவர்த்தகம் குறித்தும் தனது நுண்ணிய உடல் மொழிகளால் அரங்கேற்றிக் காட்டினார் சுசாந்த தாஸ்.
குறிப்பாக மக்களிடம் சிரிப்பைக் காட்டி ஏமாற்றும் அரசியல்வாதிகளின் உண்மையான கோர முகமானது, அரச படைகளைக் கொண்டு ஏவிவிடும் வன்முறைகளில் மறைந்து கொண்டிருப்பதை தனது நடிப்பினில் வேறுபடுத்திக் காட்டிய விதம் அனைவரையும் சிலிர்க்க வைத்தது.
இறுதியில் தோழர்கள் நாடகம் குறித்தான விவாதம் சுசாந்த தாஸுடன் நடைபெற்றது.
நிகழ்வினை மே பதினேழு இயக்கத்தின் நிமிர் வெளியீட்டின் தோழர்கள் லேனா குமார், புருசோத்தமன், அருள் முருகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.