தற்போது எழுச்சி பெற்றிருக்கும் மது ஒழிப்பு போராட்டம் பல வடிவங்களில் எழுந்து நிற்கிறது.
1. தேர்தல் சார்ந்த அரசியல் கட்சிகளால் ஒருங்கிணைக்கப்படும் போராட்டங்கள்.
2. புரட்சிகர இயக்கங்களால்/அரசியல் இயக்கங்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்.
3. அரசியல் கட்சி/இயக்கம் சாராத மாணவர்கள், பொதுமக்கள், சமூக நல இயக்கங்கள், தனிநபர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்.
4. இவை மட்டுமல்லால், மிக முக்கியமாக அய்யா.சசி பெருமாளின் குடும்பத்தினர் நடத்தும் உணர்ச்சிமயமிக்க உறுதியான போராட்டம்.
இதில் ஏதேனும் ஒன்றில் பங்கெடுங்கள். அல்லது துணை செய்யுங்கள். பரப்புரை செய்யுங்கள். கைது செய்யப்படுபவர்களுக்கு ஆதரவாக எழுந்து நில்லுங்கள்.
போராட்டத்தில் பங்கெடுக்காதவர்கள், இயலாதவர்கள் தங்களால் இயன்ற கருத்துப் பரப்பலுக்கு நேரத்தை, தனது முகநூலை பயன்படுத்துவது போராடும் தோழர்களுக்கு பேருதவியாக அமையும்.
அய்யா.சசிபெருமாள் அவர்களின் போராட்ட கள மரணம் தமிழக மக்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது, இந்த எழுச்சியை பாதுகாக்கவேண்டும், வளர்க்க வேண்டும்,
போராட்டத்தை ஒடுக்க அரசு வன்முறை, அவதூறுகளை, பொய் வழக்குகளை, முன்னெச்சரிக்கை கைது நடவெடிக்கைகளை, கொடூரமான தாக்குதலை, வன்முறையை கட்டவிழ்த்திருக்கிறது.
இது மக்கள் மயமாகி நிற்கும் போராட்டம். மக்களின் கோரிக்கைக்காக அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்கும் போராட்டம்.
இதில் அனைவரும் ஒற்றைக்குரலில் அரசிற்கும், அதன் கொள்கைகளுக்கும், அதன் காட்டுமிராண்டி அடக்குமுறைகளுக்கும் எதிராக நிற்பதுவே நேர்மையான அரசியல் நடவெடிக்கை.
பிறவிடயங்களைப் பேச கால வசதிகள் உண்டு. ஆனால் இன்று எழுந்திருக்கிற எழுச்சியை மீண்டும் ஒரு தியாகத்தின் மூலம் கொண்டுவருவது கூட சாத்தியமில்லாமல் போகலாம்.
உலகின் பிற பகுதிகளில் நிகழும் மக்கள் திரள் போராட்டம் போல பெரும்திரளாய் எழுந்து சாலைகளை நிரப்புவோம்
எழுந்து நிற்போம், போராடுவோம், பரப்புரை செய்வோம்.
சாராயக்கடைக்கு எதிராக போராடிய பல்வேறு அமைப்புகள் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் மீது தமிழக அரசு பல்வேறு பொய்வழக்குகளை போட்டுவருவதாக தகவல் வருகிறது. இதன்படி இதுவரை
காஞ்சிபுரத்தில் 30தோழர்களை வேலூர் சிறைக்கும்
திருவண்ணாமலையில் 30க்கும் மேற்பட்ட தோழர்களும்
நேற்று போராடி காவல்துறையால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவியரை சென்னை புழல் சிறையிலும் அடைந்திருக்கின்றது.
மேலும் கலிங்கபட்டியில் போராடிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்ட 52பேர் மீதும் இன்னும் முகம்தெரியாத்வர்கள் என்று 100க்கும் அதிகமானபேர் மீதும் வழக்கு பதிந்திருக்கிறது.
மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் மதுக்கடைகளை மூடச்சொல்லி போராட்டம் நடத்தியவர்களை காட்டுமிராண்டிதனமாக அடிப்பதும் அவர்களின் மீதே பொய்வழக்குகளை போடுவதும் என்ற அராஜக வேலையை செய்யும் தமிழக அரசை கண்டிப்போம்.
ஜனநாயக சக்திகளோடு துணைநின்று மதுக்கடைகளை இழுத்து மூடுவோம்.
மே 17 இயக்கம்