அசின்: தமிழ் இன அழிப்பிற்கான ராஜபக்சா அரசின் தமிழ் விளம்பரதாரி

- in பரப்புரை
20 ஜூலை 2010

இது உங்களுக்குத் தேவையில்லையே சரத் !சரத்குமார் ! உங்களுக்கு என்ன ஆயிற்று? திரைப்படத் துறையில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக இருந்தும் ஐபா (IIFA) விழாவுக்குப் பின் இருந்த சுய லாப – சுய மோக அரசியலை ஏன் நீங்கள் புரிந்துகொள்ளவில்லை?

இரண்டு போக்கிரி மற்றும் பொறுக்கிகளின் கட்டளைக்கு இணங்கி இலங்கைக்கு சென்று இன்று சிங்கள மகாராணியின் முதன்மைத் தோழியாக உருமாறியிருக்கும் நடிகை அசினை நல்லவராக வர்ணிப்பதன் எதிர்கால விளைவுகளை சிந்தித்துப் பார்தீர்களா சரத்? அசின் பிரச்சினையை உங்கள் பிறந்த நாள் செய்தியாக சொல்லும் அளவிற்கு உங்களை மாற்றியுள்ளவர்களின் பின்னணியை சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய அவசியத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்…

இதோ… உங்களின் பார்வைக்கு வைப்பதற்காகவே கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்க் கலையுலகினரையும், தமிழ் மக்களையும் அலைக்கலைத்துவரும் மாறிவரும் அரசியல் காட்சிகளை நடுநிலைமையில் நின்று இங்கு தொகுத்துக் கொடுக்கிறோம்…..

———————————————————————————————————–
ஐபா விழாவும், இரண்டு போக்கிரி – பொறுக்கிகளால் அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் தொல்லைகளும் 

ஜூன் மாதத் துவக்கத்தில் இந்தித் திரையுலகத்தின் ஐபா (IIFA) திரைப்பட விழா இலங்கையில் நடத்தப்பட்டது. ஈழ மக்களின் மீது இலங்கை அரசு நடத்திக் கொண்டிருக்கும் இன அழிப்பு பயங்கரவாத நிகழ்வுகளை சர்வதேச மக்களின் முன்பும், அரசுகளின் முன்பும் மறைப்பதே அந்த விழாவின் பணியாக இருக்கும் என்ற எதிர்ப்புக்குரல் தமிழ் மக்கள் அனைவரிடம் இருந்தும் எழும்பியது. இந்தித் திரைப்படத் துறையின் முன்னணி பிரமுகர்கள் பலர் இதனை உடனடியாகப் புரிந்து கொண்டு தமிழர்களின் உண்ர்வுகளைப் புண்படுத்தக்கூடிய அந்த விழாவில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று வெளிப்படையாக அறிவித்தனர். அமிதாப் பச்சன், ஷா ருக் கான், ஐஸ்வர்யா ராய், அமீர் கான், அபிஷேக் பச்சன் போன்றோர் இதில் அடங்குவர்.

ஐபா விழாவின் மக்கள் தொடர்பாளராக இருந்த அமிதாப் பச்சனே இந்த முடிவை எடுத்தது ஐபா விழாக் குழுவினரை அதிரவைத்தது.

அதிர்ந்துபோன ஐபா குழுவினர் அமிதாப் பச்சனுக்குத் தக்க பாடம் புகட்ட முடிவு செய்தனர். தனிப்பட்ட காரணங்களுக்காக அவரை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் இரண்டு முன்னணி இந்தி நடிகர்களை அவர்கள் இதற்காகக் களமிறக்கினர். சல்மான் கான் மற்றும் விவேக் ஓபராய் ஆகியோரே அந்த இருவர்.

அமிதாப் பச்சனுக்கும் சல்மான் கான்- விவேக் ஓபராய் ஆகியோருக்கும் அப்படி என்ன தனிப்பட்ட பகை?

அமிதாப் பச்சனின் புதல்வர் அபிஷேக் பச்சன். அவரது மனைவி உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா ராயை முன்னொரு காலத்தில் காதலித்தவர்களே இந்த சல்மான் கானும், விவேக் ஓபராயும்.

2000 ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு வரை இந்த இரு நபர்களால் ஐஸ்வர்யா பட்ட துன்பத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் துணையை நாடும் அளவிற்கு சல்மான் கானின் போக்கிரித்தனம் இருந்தது. சல்மான்கானின் தொல்லையில் இருந்த ஐஸ்வர்யாவைக் கவர்ந்து, அவரது காதலைப் பொறுக்கிக் கொள்வதற்காக ”நல்லவர், சமூக சேவகர்” என்ற வேடத்தை விவேக் ஒபராய் தரித்துக்கொண்டார். 2004 டிசம்பர் சுனாமியின்போது தமிழக மீனவ மக்களிடம் பணியாற்றும் சமூகசேவகர் என்ற பெயரைப் பெற அவர் செய்த முயற்சிகள் யாவும் ஐஸ்வர்யாவின் கவனத்தைக் கவர்ந்து அவரது காதலைப் பொறுக்க அவரால் எடுக்கப்பட்ட சுயலாப முயற்சிகளே.

போக்கிரித்தனம் நிறைந்த முரட்டு ஹீரோவாக சல்மான் கானும், பொறுக்கி குணம் கொண்ட மென்மையான ஹீரோவாக விவேக் ஓபராயும் ஐஸ்வர்யா ராயை முன்னிலைப் படுத்தி உண்மை வாழ்வில் படம் காட்டிக் கொண்டிருந்ததை ஐஸ்வர்யாவால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அவர்களது திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என்ற முடிவுக்கே அவர் போனார். தங்களிடம் இருந்து ஐஸ்வர்யா விலகிச் செல்கிறார் என்பதை இந்த சுயமோகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஐஸ்வர்யாவின் மீது தங்கள் போக்கிரித்தனத்தையும், பொறுக்கித்தனத்தையும் அதிகப்படுத்தினர். அதோடு நிற்காமல், சல்மானும் ஓபராயும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவுக்கு பரம வைரிகளாகவும் மாறிப்போனார்கள். ஐஸ்வர்யாவின் அன்றாட வாழ்வு இவர்களது அடாவடித்தனத்தால் நரகமாகியது. இவர்களின் போக்கிரி – பொறுக்கித்தனங்களிலிருந்து தன்னைக் காவல் துறை மற்றும் நீதிமன்றங்களால் கூடக் காப்பாற்றிவிட முடியாது என்ற முடிவுக்கு ஐஸ்வர்யா தள்ளப்பட்டார்.
போக்கிரி- பொறுக்கிகளிடம் இருந்து ஹீரோவிடம் தஞ்சம் அடையும் திரைப்படங்களில் வரும் அப்பாவிப் பெண்ணைப் போலவே ஐஸ்வர்யா தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தன் சக நடிகரான அபிஷேக் பச்சனிடம் உதவியை கோரினார். தன்னைத் திருமணம் செய்துகொண்டு இந்தப் போக்கிரி-பொறுக்கிகளிடம் இருந்து காப்பாற்றும்படி விண்ணப்பம் வைத்தார். ஐஸ்வர்யாவின் நிலையைப் புரிந்து கொண்ட அபிஷேக் அவரைத் தன் இல்லறத் துணையாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தார். தந்தை அமிதாப் பச்சனிடம் இதுகுறித்து பேசினார்.

இதன்பிறகு ஐஸ்வர்யா ராயுடன் அமிதாப்பும் பிற பெரியோர்களும் சல்மான் கான் – விவேக் ஓபராய் ஆகியோரால் அவருக்கு நேர்ந்துவரும் துன்பங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர். ஐஸ்வர்யாவின் தரப்பில் தவறேதும் இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். திருமணத்திற்கு முழு சம்மதத்தைத் தெரிவித்தனர். 2007 ஏப்ரலில் அபிஷேக் – ஐஸ்வர்யா திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது.

திருமணம் நடந்து முடிந்ததில் இருந்து இன்றுவரை அவர்கள் இருவர் உறவில் எவ்விதக் குழப்பங்களும் இல்லை. பொது நிகழ்வுகள் அனைத்திலும் அபிஷேக்கும் ஐஸ்வர்யாவும் ஒன்றுசேரக் கலந்துகொள்கின்றனர். அபிஷேக்கால் கலந்துகொள்ள இயலாத நிகழ்வுகளில் ஐஸ்வர்யாவுக்குத் துணையாக அமிதாப் பச்சன் அவர்களே சென்று வருவது வாடிக்கையாக இன்றளவும் இருந்து வருகிறது. திருமணம் ஆகி மூன்றாண்டுகளுக்குப்பிறகும் கூட பொது நிகழ்வுகளில் ஐஸ்வர்யா தனியாகக் கலந்துகொள்ளாததற்கான காரணம் சல்மான் மற்றும் விவேக் ஓபராய் ஆகியோரின் போக்கிரி – பொறுக்கித்தனங்களின் மீது அவருக்கு உள்ள அச்சமே.

ஐஸ்வர்யா – அபிசேக் திருமணத்தை சல்மான் கானாலும், விவேக் ஓபராயாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பல ஆண்டுகளாக பரம எதிரிகளாக சுற்றித் திரிந்த அவர்களை இந்தத் திருமணம் நண்பர்களாக மாற்றிக் காட்டியது. இருந்தாலும், அமிதாப் பச்சனால் ஐஸ்வர்யாவை சுற்றி நிறுவப் பட்டிருக்கும் பாதுகாப்பு வளையத்தை மீறி அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இதனைத் தம் ஆண்மைக்கு அமிதாப் பச்சன் விட்ட சவாலாகவே அவர்களிருவரும் கருதிக் கொண்டனர்.

தங்களின் ஆண்மையை அமிதாப் குடும்பத்தினருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் நிரூபித்துக் காண்பிப்பதற்கான சரியான தருணத்திற்காக அவர்கள் காத்திருந்தனர். அவ்வாறு காத்துக் கொண்டிருந்தவர்களின் மடியில் விழுந்த அரிய வாய்ப்பாகவே – உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் உணர்வினைப் புண்படுத்திய – ஐபா நிகழ்வு அவர்களுக்குக் கிடைத்தது.

ஐபா விழாவில் கலந்துகொள்வதைத் தவிர்த்தன் மூலம் இந்தித் திரைப்பட உலகை அமிதாப் சிறுமைப் படுத்துகிறார் என்று சல்மான் கான் முரட்டு ஹீரோ பாணியில் ஐபா விழாவின்போது தடாலடியாக அறிக்கை விட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த குழ்ந்தைப் போராளிகளுக்கு உதவுவதற்காகவே தான் இலங்கைக்கு சென்றிருப்பதாகக் கூறி நல்லவர் வேடம் தரித்த ஹீரோவாக விவேக் ஓபராய் வழக்கமான கதையை அளந்தார். தன்னிடம் உள்ளதைப்போல் மனிதாபிமானமும், வீரமும் அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாப்பிடம் இல்லை என்று தான் பார்க்கும் அனைவரிடமும் அவர் பீற்றிக்கொண்டார்.

ஐபாவின் தோல்வியும் திசை திரும்பிய போக்கிரி- பொறுக்கிகளின் கோபமும்

இவ்விருவர் எதிர்பார்ப்பை மீறி ஐபா விழா படுதோலியடைந்தது. இந்தத் தோல்வி இவர்களுக்குக் கடுமையான மன உளைச்சலை உருவாக்கியது.

”ஐபா விழா தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் எங்களை எவராலும் தோற்கடிக்க முடியாது”என்று கூற இருவரும் முற்பட்டனர். இதுவரை அமிதாப் பச்சனின் மீது இருந்த அவர்களது கோபம் ஐபா விழாவின் தோல்விக்குக் காரணமாக இருந்த தமிழ்த் திரைப்பட உலகத்தின் மீது திரும்பியது. தமிழ்த் திரையுலகிற்குத் தகுந்த பதிலடியைக் கொடுத்தே தீருவது என்ற சபதத்தை அவர்கள் எடுத்தனர்.

இலங்கை ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சாவின் அறக்கட்டளையால் வவுனியாவிலும், யாழ்ப்பாணத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் திருமண விழாவின் முதன்மை விருந்தாளியாகப் பங்கேற்க முடியுமா என்று இலங்கை அரசால் அவர் கேட்கப்பட்டபோது விவேக் ஓபராய் அதனைத் தனக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகக் கருதி அதனை உடனடியாகப் பொறுக்கிக் கொண்டார்.

”தமிழர்களான நீங்கள் ராஜபக்சாவைப் போர்க்குற்றவாளி என்று கூறுகிறீர்கள். அவரது மகன் நாமலுடன் இதோ இன்று நான் இருக்கிறேன். இதற்காக, உங்களில் ஒருவரான நடிகர் சூர்யாவுடன் இணைந்து நான் நடிக்கும் ரத்த சாட்சி படத்தை உங்களால் என்ன செய்துவிட முடியும்?” என்று தமிழ்த் திரைப்படத் துறையினருக்கு இந்த செயலின் மூலம் சவால் விட்டார். மேலும், தமிழர் சூர்யாவை வைத்தே பெங்களூர்ப் பத்திரிகை ஒன்றிற்கு தமிழ்த்திரை உலகினர் விதித்த தடைக்கு எதிரான பேட்டி ஒன்றையும் அவர் வெற்றிகரமாகக் கொடுக்க வைத்தார். இதன் மூலம் – ஐபா விழாவை வெற்றிபெறச் செய்வதன் மூலம் அமிதாப் பச்சனை சிறுமைப்படுத்த முயன்றதைப் போல – தமிழ்த் திரையுலகினரை அவர்களில் ஒருவரை வைத்தே சிறுமைப்படுத்திவிட்டதாகப் பெருமகிழ்ச்சியில் திளைக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், இலங்கை அரசின் சலுகைகளைப் பொறுக்குவதற்காகவே அவரது தொண்டு நிறுவனம் அங்கு சென்றிருந்தாலும் கூட அதன் பொறுக்கிச் செயல்பாடுகள் அனைத்தையும் தமிழ் நடிகர் சூர்யாவை வைத்து ஈழத் தமிழ் மக்களுக்கான சமூக சேவை என்று கூறவைத்ததுதான் அவரது திறமையாகும். ராஜபக்சாவின் மகன் நாமலுடன் அவர் நெருக்கமாக இருப்பது உலக்ம் அறிந்த விசயம் என்றாலும் கூட அவரைத் ஈழத் தமிழ் மக்களுக்கு உதவச் சென்றுள்ள ஆபத்பாந்தவனாக சூர்யாவைக் கொண்டே சொல்ல வைத்ததுதான் அவரது திறமை.

பொறுக்கியின் போக்கு இப்படியென்றால் முரட்டுப் போக்கிரியாகத் தன்னைக் கருதிக்கொள்ளும் சல்மான் கான் எப்படி இருப்பார்?

ஐபாவின் படுதோல்விக்குப் பிறகு மௌரீசியஸ் நாட்டில் நடப்பதாக இருந்த தனது “ரெடி” படத்தின் படப்பிடிப்பை உடனடியாக இலங்கைக்கு மாற்றும்படி படத்தின் இயக்குனர் அனீஸ் பாஸ்மிக்கு சல்மான் கான் கட்டளை பிறப்பித்தார். ஈழத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழ்த் திரை உலகினரின் தடை உத்தரவு இந்தப்படத்தின் கதாநாயகியான தமிழில் இருந்து இந்திக்கு சென்ற மலையாள நடிகையான அசினை என்ன செய்யும் என்ற கேள்வியை இதன்மூலம் அவர் எழுப்பினார். விஜய்யுடன் அசின் ஒப்பந்தமாகியிருக்கும் காவல் காதல் படத்தின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியையும் அவர் இதன்மூலம் எழுப்பினார்.

பொறுக்கி விவேக் ஓபராயால் எழுதிக்கொடுக்கப்பட்ட வசனத்தை பெங்களூர்ப் பத்திரிகையில் ஒப்பித்த அப்பாவித் தமிழன் சூர்யாவைப் போலவே தமிழ் மலையாளத்தியான அசினும் சல்மான் கானின் வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுத்த வசனத்தை ஒப்பித்திருக்கிறார். ”ஐபா பிரச்சினை முடிந்து விட்டது. இலங்கைக்குள் செல்ல தொழில் துறையினருக்கும், விளையாட்டுத் துறையினருக்கும் தடையில்லை. கலைஞர்களான எங்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? இதையும் மீறி தடை விதிக்கப்பட்டால் அது குறித்து நான் கண்டுகொள்ள மாட்டேன.” என்ற அறிக்கையை அவர் கொழும்புவில் இருந்து வாசிக்கும் சூழ்நிலையை உருவாக்கி மகிழ்ந்திருக்கிறார் சல்மான் கான்.
ஐபா விழா வெற்றியடைந்தால் அமிதாப் பச்சனின் குடும்பம் சிறுமைப்படும் என்பது சல்மான் – ஓபராயின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பைக் குலைத்த தமிழ்த் திரையுலகத்தினரை சூர்யாவை வைத்து விவேக் ஓபராய் பழி தீர்த்துக் கொண்டார். தமிழ் மலையாள நடிகை அசினை வைத்துத் தன் பழியினை சல்மான் கான் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

சிங்கள மகாராணியின் தமிழச்சித் தோழியாக வன்னி மக்களின் முன் பாவனை செய்துகொண்ட அசின்

2004 ஆம் ஆண்டில் இயக்குனர் ரீமேக் ராஜாவால் தமிழ்த் திரையுலகிற்கு அசின் அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்த நான்கு ஆண்டுகளில் அவர் 10 தமிழ்ப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். 2008 ஆம் ஆண்டில் இந்தித் திரையுலகிற்கு இயக்குனர் முருகதாசால் இந்தி கஜினி படத்தில் அறிமுகப்படுத்தப் பட்டார். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ்ப் படங்களுக்குத் திரும்ப வர அசின் விரும்பவில்லை.2009 ஆம் ஆண்டில் சல்மான் கானுடன் பெரிதளவில் வெற்றிபெறாத லணடன் ட்ரீம்ஸ் படத்தில் நடித்தார். 2010 இல் மீண்டும் சல்மான் கானுடன் “ரெடி” என்ற படத்தில் ஒப்பந்தம். இந்தப்படத்தின் படப்பிடிப்புதான் இன்று இலங்கையில் நடந்து வருகிறது.

”ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தினை என்ன்னால் எப்படி மீற முடியும்?” என்று அவர் அப்பாவியாகத் தமிழ்த் திரயுலகினரை நோக்கியும், தமிழக மக்களை நோக்கியும் ஜூன் மாத இறுதியில் கேட்டார்.

ஆனால் ஜூலை 11 ஆம் தேதியன்று வவுனியா முகாம்களில் ஓராண்டுக்கும் மேலாக சிறைவைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்கான மருத்துவமனைக்கு இலங்கையின் மன்னர் மஹிந்த ராஜபக்சாவின் தர்மபத்னியான சிங்கள மகாராணி ஷிராந்தி மேடத்தின் முதன்மைத் தோழியாக மாடர்ன் தமிழச்சி கெட்டப்பில் திடீர் விஜயம் செய்து வன்னி மக்கள் அனைவரையும் அசத்தியிருக்கிறார். சிங்கள மகாராணியின் முன்னணித் தமிழச்சித் தோழி என்ற பாவனையுடன் அவர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் உள்ள தமிழர்களுக்கான மருத்துவமனைகளிற்குள்ளும் வலம் வந்திருக்கிறார்.
பல முன்னணி சர்வதேச தொண்டுநிறுவனங்கள் ஈழத் தமிழ் மக்களிடையே தங்குதடையின்றி பணிபுரிய தங்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்று கடந்த ஒன்றரை வருடங்களாக இலங்கை அரசிடம் கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் இன்றளவும் அவர்களுக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்து வருகிறது.

ஆனால் அசினோ ஜூன் 23 ஆம் தேதியன்றுதான் இலங்கையில் காலெடுத்து வைத்தார். ஜூலை 5 ஆம் தேதி வரைக்கும் அங்குள்ள தமிழ் மக்களைப் பற்றி அவர் எவ்விதக் கருத்தையும் கூறவில்லை. ஜூலை 12 ஆம் தேதியன்று ”இலங்கைத் தமிழ் மக்களை நோய்களில் இருந்து விடுவிப்பதற்காக அறக்கட்டளைஒன்றைத் தொடங்கியிருக்கிறேன். அதன் மூலம் (கடந்த 5 நாட்களில்) 300 தமிழர்களுக்கு என் சொந்த செலவில் கண் ஆபரேஷன் செய்துள்ளேன். சுமார் 5 கோடி ரூபாய் செலவில் 10 ஆயிரம் தமிழர்களுக்குக் கண் ஆபரேஷன் செய்யப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார். ஒன்றரை ஆண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சர்வதேச அறக்கட்டளைகள் காத்துக்கிடக்கும்போது அசினால தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு 300 தமிழர்களுக்கு கண் ஆபரேஷன் செய்ய உடனடியாக அனுமதி கொடுத்தது யார்? அடுத்த கட்டமாக அவரது அறக்கட்டளை மூலமாக 10 ஆயிரம் தமிழர்களுக்குக் கண் ஆபரேஷன் செய்ய அனுமதி வழங்கியிருப்பது யார்?

சிங்கள மகாராணி ஷிராந்தி மேடத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா விஜயத்தின்போது அவரது முதன்மைத் தோழியாக – தமிழச்சியாக – அசினை பாவனை செய்யச் சொல்லி அவரைப் பணித்தது யார்?

அசினின் கவலையும், போனி கபூர் ஞானத் தந்தை ஆன கதையும் 

ஜூன் 23 ஆம் தேதியிலிருந்தே அசின் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். எதிர்காலத்தில் தமிழ்ப்படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை உருவாகிவிடுமோ என்பதும்,ஆனால் அதே சமயம் இந்திப் பட உலக்த்தில் தன்னால் நிலைத்து நிற்க முடியுமா என்பதும் அவரது மன உளைச்சலுக்கான காரணங்கள். தனது திரையுலக எதிர்காலம் முடிவுக்கு வந்துவிடுமோ என்பது அவரது மன உளைச்சலுக்கான காரணங்கள்.

இதைத் தீர்க்க என்னதான் வழி? என்பதை இரவும் பகலும் ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருந்த அசினின் தந்தைக்கு சல்மான் கான் ஜூலை மாதத் தொடக்கத்தில் ஒரு அறிவுரையை வழங்கியுள்ளார்.

இந்திப்படத் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவ்ரும், அசினின் மும்பை வீட்டிற்கு அடுத்து வசிப்பவருமான போனி கபூரை அசினின் ஞானத் தந்தையாக, அவரது இந்தித் திரையுலக எதிர்காலத்தை ஒழுங்கு செய்பவராக இருக்கக் கேட்டுக்கொண்டால் அசினின் மன உளைச்சல் தீர்ந்துவிடும் என்பதே அந்த அறிவுரையாகும்.

அசின் நடித்த போக்கிரி தமிழ்ப் படத்தை இந்தியில் சல்மான் கானை வைத்து, பிரபுதேவா இயக்கத்தில் வெற்றிப்படமாக தயாரித்தவரே போனி கபூர்.போனி கபூரை அசினின் தந்தை ஜூலை முதல் வாரத்தில் சல்மானின் பரிந்துரையுடன் சந்தித்துள்ளார். அவரும் அசினின் ஞானத் தந்தையாக இருக்க உடனடியாக சம்மதித்து விட்டார்.

ஞானத் தந்தையாக மாறிய உடன் அவர் தந்த முதல் அறிவுரை விவேக் ஓபராயுடன் அசினையும், அவரது தந்தையையும் பேசச் சொன்னதுதான். விவேக் ஓபராயுடன் அசினும் அவரது தந்தையும் பேசிய மறு நாளே அசினுக்கு கொழும்பு அரண்மனையிலிருந்து அழைப்பு வந்தது!

இளவரசர் நாமல் ராஜபக்சாவும், அசினின் தமிழர்களுக்கான கண்ணொளித் திட்டமும்

இளவரசர் நாமல் ராஜபக்சாவிடம் விவேக் ஓபராய் அசின் குறித்து பேசியதன் விளைவாகவே மகாராணி ஷிராந்தி அம்மையாரின் முதன்மைத் தோழியாகவும், தமிழச்சி வேடம் தரித்தவராகவும் மகாராணியின் பரிவாரத்தில் செல்ல ஜூலை 11 ஆம் தேதியன்று அசினுக்கு வாய்ப்பு கிடைத்தது..

விவேக் ஓபராயின் அறிவுரையின் பேரிலேயே தமிழர்களுக்ககுக் கண்ணொளி வழங்க அறக்கட்டளை ஒன்றைத் தான் நிறுவியிருப்பதாகவும், அந்த அறக்கட்டளைப் பணிகதளுக்கு 5 கோடி ரூபாய் வரைக்கும் தன் சொந்தப்பணத்தை செலவிடப்போவதாகவும் பத்திரிகை செய்தி கொடுத்துள்ளார். அவர் கூறும் அந்த அறக்கட்டளை யாருடையது?

கடந்த 2 ஆண்டுகளாக இளவரசர் நாமல் ராஜபக்சா தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்தத் தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமே விவேக் ஓபராயின் தொண்டு நிறுவனம். இப்போது இளவரசரின் அந்தத் தொண்டு நிறுவனத்தில் அசினையும் ஓபராய் சேர்த்து விட்டிருக்கிறார்.

இளவரசருக்குச் சொந்தமான் தொண்டு நிறுவனத்தின் முதல்கட்டப் பணியாகத்தான் ஜூலை 11 ஆம் தேதியன்று மகாராணியின் தோழியாக, தமிழச்சி வேடம் தரித்து யாழ்ப்பாணத்திற்கும், வவுனியாவிற்கும் அசின் சென்று வந்திருக்கிறார்.

இதன்மூலம் தான் நல்லவள் என்றும், தனது இலங்கைப் பயணம் தமிழர்களுக்கு நல்லது செய்வதற்காகவே நடந்துள்ளது என்றும் விவேக் ஓபராயின் அறிவுரையின் பேரில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு சிங்களவர்களின் அரண்மையில் இருந்து பேட்டி அசின் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அவ்வாறு பேட்டி கொடுக்கும்போது தான் ஆரம்பித்துள்ள தொண்டு நிறுவனம் சிங்கள இளவரசர் நாமல் ராஜபக்சாவின் தொண்டு நிறுவனத்தின் ஒரு அங்கமே என்பதை அவர் வெளியில் சொல்லவில்லை. ஆனால் அதே நேரம் தன்னைப் போல் இலங்கையில் (நாமல் ராஜபக்சாவின் அறக்கட்டளையின் கீழ்) தமிழர்களுக்கு இடையில் தொண்டு செய்ய வரும்படி விஜய் அண்ணா, அஜித் அண்ணா மற்றும் அனைத்துத் தமிழ்த் திரையுலகினருக்கும் கொழும்பு அரண்மனையில் இருந்து அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த அழைப்பின் பின்னனியைக் கவனிக்காமல், சரத் குமார் அவரது பிறந்த நாளன்று செய்தி அறிக்கை ஒன்றை வெளிட்டதுதான் துரதிர்ஷ்டவசமானது. தமிழ்த் திரைப்படத் துறையினரை இலங்கைக்கு வருமாறு அவருக்கு வந்திருக்கும் கடிதங்கள் யாவும் இளவரசர் நாமல் ராஜபக்சாவால் நடத்தப்படும் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட கடிதங்களே என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. இந்தக் கடிதங்களின் பின்னணியில் இருப்பது பொறுக்கிக் திண்ண இலங்கைக்கு சென்றிருக்கும் விவேக் ஓபராயே என்பதை அவர் அறிந்துகொள்ள வேண்டும்.

சல்மானின் செல்லப் பெண் என்ற பெயரை உறுதிசெய்த கையுடன் ஞானத் தந்தை போனி கபூரின் அறிவுரையின் பேரில் விவேக் ஓபராயின் செல்லப் பெண்ணாகவும் மாறியாயிற்று. தனது ஞானக் குழந்தையின் நடவைக்கைகளைக் கண்டு போனி கபூரே புல்லரிக்குமளவிற்கு நடித்தாயிற்று. சிங்கள இளவரசருக்கும், சீனியர் மகாராணிக்கும் நெருக்கமானவளாகவும் மாறியாயிற்று. இந்த நெருக்கத்தின் பயன்களை போனி கபூரின் மனைவியான ஸ்ரீதேவியிடம் விலாவாரியாகக் கூறி அவரையும் அவரது நண்பர்களையும் சிங்கள இளவரசர் நாமலின் சார்பாக இலங்கை அரண்மணைக்கு வரும்படி அழைத்தாயிற்று. இலங்கை அரண்மணையுடன் இணைந்து நடந்துகொண்டால் கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளை அனைவருக்கும் எடுத்தியம்பும் “தமிழச்சி” வேடம் தரித்த நாமல் ராஜபக்சாவின் கொள்கை பரப்பு செயலாளராக மாறியாகிவிட்டது.

இனி தன் எதிர்காலத்தைப் பற்றி ஏன் அவர் கவலைப் பட வேண்டும்?

இந்திப் பட வாய்ப்புகளை சல்மானும், ஓபராயும், போனி கபூரும் கவனித்துக் கொள்வார்கள். இலங்கையின் இளவரசரும், மகாராணியும் ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை வகுத்துக் கொடுப்பார்கள்.

இனி ஏன் தமிழ்த் திரையுலகினரைப் பார்த்தோ, தமிழ் மக்களைப் பார்த்தோ அசின் கவலைப் பட வேண்டும்?

ஈழத் தமிழரின் இன்றைய நிலை 

வன்னிப் பெருநிலத்தின் 2007 ஆம் ஆண்டின் மக்கள் தொகையான 4 லட்சத்து 20 ஆயிரம் பேர்களில் போரின்போது சுமார் கால்வாசிப்பேர் கொல்லப்பட்டனர். ( இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரம் ). சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயண குண்டுகளாலும், பல்குழல் பீரங்கிகளாலும் அப்பாவிமக்களை இவ்வாறாக இலங்கை இராணுவம் கொன்று குவித்தது.
போரில் சரணடைந்த தமிழ்ப் போராளிகளில் முக்கியமான அனைவரையும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொன்றொழித்தது. கொல்லாமல் விடப்பட்ட 12 ஆயிரம் போராளிகளையும், தமிழீழ நிர்வாக அதிகாரிகளையும் இன்றளவும் சித்திரவதைக் கொட்டடிகளில் அடைத்து வைத்திருக்கிறது. இலங்கை அரச சாசனத்தால் அளிக்கப்படாத இன உரிமைக்காகப் போராடிய அவர்களை போர்க் கைதிகளாகத்தான் கருதவேண்டும் – தீவிரவாதிகளாக அல்ல – என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் பலமுறை கோரிக்கை விடுத்தும்கூட அதற்கெல்லாம் சிங்கள அரசு இன்றளவும் செவிசாய்க்கவில்லை. அவர்களனைவரையும் சிங்கள இராணுவம் இன்றளவும் தங்களின் அடிமைகளாகவே நடத்திக் கொண்டிருக்கின்றது. பெண் போராளிகளையும், தமிழீழ நிர்வாகத்தில் இருந்த பெண்டிரையும் பாலியல் அடிமைகளாக அது மாற்றியுள்ளது.

சர்வதேச போர் நியதிகளுக்கு அப்பாற்பட்ட சிங்கள அரசின் இப்படிப்பட்ட செயல்கள் அனைத்தையும் பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஓராண்டாகவே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நீதிக்கான ஐ.நா.சபையின் ந்டவடிக்கைகள் அனைத்தையும் சிங்கள அரசு தன் நட்பு நாடுகளைக் கொண்டு இன்றளவும் தடுத்தே வந்திருக்கிறது. 2010 ஜூன் மாதம் இதற்காக ஆய்வுக் குழு ஒன்றை ஐ.நா. சபை அமைத்தபோது, இலங்கையில் உள்ள ஐ.நா.சபை அலுவலகத்தை சிங்கள வெறியர்கள் சூரையாடினார்கள். இதனை இலங்கை அரசு வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

முகாம்களில் அடக்கப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் மக்களை பிச்சைக்காரர்களாகவே அது நடத்தியது. இந்தியாவில் இருந்தும், பிற நாடுகளில் இருந்தும் இந்த மக்களுக்கு அனுப்பப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை அவர்களிடம் சேரவிடாமல் தடுக்கும் அனைத்து அடாவ்டி நடவடிக்கைகளிலும் அது ஈடுபட்டது. அம்மக்களின் நடமாட்டத்தை அது முள்வேலி முகாம்களுக்குள் முடக்கிப் போட்டது. சர்வதேச அளவில் இதற்கு எதிர்ப்பு மிகவும் உரத்து எழுந்த போது, இவர்களில் முக்கால்வாசிப்பேரை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதாக சொல்லிவிட்டு வேறு தடுப்பு முகாம்களுக்கு மாற்றியது. ஊர்களுக்கு அனுப்பப்பட்ட குடும்பங்களில் இளைஞர்கள் இல்லாது பார்த்துக் கொண்டது. பெண்களும், வயோதிகர்களும், குழந்தைகளும் நிறைந்த அந்தக் குடும்பங்களுக்கு எவ்வித உதவியையும் அது செய்ய மறுத்தது. இதன்காரணமாக நோயினால் மட்டுமே இறந்து கொண்டிருக்கும் வயோதிகர்களும், குழந்தைகளும் ஆயிரக்கணக்கில் அடங்குவர்.

தமிழீழ அரசு செயல்பட்டுவந்த வன்னிப் பெருநிலத்தில் சிங்கள இராணுவத்தின் பலநூறு நிரந்தர முகாம்களை இலங்கை அரசு அமைத்திருக்கிறது. ஊர்களில் குடியமர்த்தப்பட்ட மக்கள் சிங்கள இராணுவத்தின் அனுமதியின்றி எங்கும் நடமாடமுடியாத நிரந்தரத் தடையை இலங்கை அரசு பிறப்பித்திருக்கிறது.

வன்னிப் பெருநிலத்தின் கலாச்சார சின்னங்கள் அனைத்தையும் சிங்கள இராணுவம் அழித்து வருகிறது. பல நூறு ஆண்டுகளாக தமிழில் இருந்துவந்த தெருப்பெயர்களைக்கூட சிங்களப் பெயர்களாக அது மாற்றியுள்ளது.

போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழீழத் தாயக நிலமான இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்வதற்காக திட்டங்களைத் தீட்டிய குழுவிலும், அவற்றை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட குழுவிலும் தமிழர்கள் ஒருவர்கூட இல்லாமல் அது பார்த்துக் கொண்டது.

தமிழ் மக்களின் தாயக நிலத்தில் இன்று மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் உலக அரங்கில் தன் இருப்பினை உறுதிபடுத்தும் புவிசார் அரசியலின் அடிப்படையில் மட்டுமே சிங்கள அரசு பல்வ்வேறு நாடுகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஆக, அரசியல் – பொருளாதாரம் – கலாச்சாரம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் ஈழத் தமிழ் இனத்தை சிங்களப் பேரினவாத அரசு அழித்துக்கொண்டிருக்கிறது.

இவர்களை அழித்தது போதாதென்று தமிழ்நாட்டின் மீனவர்களையும் அது நூற்றுக்கணக்கில் கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது. ஜூலை 7 ஆம் தேதியன்று சிங்களக் கடற்படையால் 501 வது தமிழக மீனவர் கொல்லப்பட்டார். கரையில் காத்துக்கிடந்த மீனவப் பெண்கள் கதறியழத் தொடங்கியிருந்தபோது அந்தக் கொலையை நடத்திய சிங்கள அரசின் அரண்மனையிலிருந்து அசினுக்கு அன்பான அழைப்பு ஒன்று வந்தது.
ஜூலை 11 ஆம் தேதியன்று அவர் “மாடர்ன்” தமிழ்ப் பெண் கெட்டப்பில் சிங்கள மகாராணி அம்மையாரின் முதன்மைத் தோழியாக இன்னும் சிங்கள அரசால் முள்வேலி முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களுக்கான மருத்துவமனையில் ராஜ பரிவாரத்துடன் உலா வந்தார். இளவரசர் நாமல் ராஜபக்சாவின் அறக்கட்டளை சார்பாக மருத்துவமனையில் இருந்த தமிழ் ஏதிலிகளுக்கு அவர் பல பரிசுப் பொருட்களை வழங்கி அனைவரையும் மகிழ்வித்தார்.

மருத்துவமனையில் இருந்து ராஜ பரிவாரம் புறப்பட்டபோது பத்திரிகையாளர்காளுக்கு அவர் பின்வரும் பேட்டியை அளித்தார்:

“ முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் தமிழர் பகுதிக்கு வரும் முதல் வெளிநாட்டுப் பெண் நான்தான் . இங்கு வருவதற்கு முன் நான் கூட யோசித்தேன்.. போகலாமா வேண்டாமா என்று. வந்த பிறகுதான் அப்படி யோசித்ததே தவறு என்று தெரிந்து கொண்டேன். இங்கு அனைவரும் அத்தனை அன்பாக பழகுகிறார்கள். இங்கேயே இருந்து கொள்ளலாம் போலத்தான் உள்ளது.நிறைய தமிழர்களைச் சந்தித்தேன். அவர்களுக்கு என் மீது கொள்ளைப் பிரியம். தொட்டுத் தொட்டுப் பேசினார்கள். ‘வாழ்க்கையில் ஒரு முறையாவது சினிமா நட்சத்திரங்களைப் பார்த்துவிட்டால் போதும்’ என்ற ஆவலுடன் அவர்கள் இருக்கிறார்கள்.

இலங்கை ஒரு அருமையான நாடு. இங்கு தமிழர்கள் அனைவரையும் அத்தனை சிரத்தையுடன் பார்த்துக் கொள்கிறது ராஜபக்சே அரசு. சர்வதேச தரத்தில் இங்கு வைத்திய வசதிகள் தரப்படுகின்றன. தமிழர்களுக்கு ராஜ வைத்தியம் அளிக்கப்படுகிறது. எனவேதான் இங்குள்ள தமிழர்களுக்கு சுதந்திரமோ சுயாட்சியோ முக்கியமில்லை.”

அசினின் பேட்டியில் சிங்கள மகாராணி ஷிராந்தி கிறங்கிப் போனார். மருத்துவமனையைவிட்டு வெளியில் வந்தபோது அசினை அவர் அன்புடன் அணைத்துக் கொண்டார்.

கடந்த ஓராண்டாக ஒளியிழந்து கிடந்த அசினின் கலை வாழ்வு இவ்வாறாக ஜூலை 11 ஆம் தேதியில் இருந்து ஒளி வீசிப் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறது.

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த அவரையும், அவர் விளம்பரப்படுத்தும் பொருட்களையும் அடியோடு புறக்கணித்து அவருக்கும், அவர் போன்ற மற்றவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு வாழ்வியல் பாடத்தை அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றுகூடிக் கற்றுக்கொடுக்க வேண்டிய காலம் இதுவே.

Leave a Reply