திரு.ஞாநிக்கு

- in பரப்புரை
3 மார்ச் 2011

மே பதினேழு இயக்கத்தின் போராட்ட அழைப்பு கடிதத்திற்கு கீற்று.காம் பின்னூட்டம் வழியாக தனது விளக்கத்தை வெளிப்படுத்திய திரு.ஞாநிக்கு ‘அவரை நாம் எதற்கு எதிர்க்க வேண்டும் என்பதான விளக்கம் இது’.

கீற்றுவில் எழுதிய ஞாநியின் பதிலை இணைத்துள்ளோம்

(என் கருத்துகளை நான் என் கட்டுரைகளில் பொது தளமான பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்துகிறேன். அவற்றுடன் உடன்படவும்முரண்படவும் அனைவருக்கும் உள்ள உரிமைகளை நான் மதிக்கிறேன். என் கருத்துகளுக்கு மாற்றுக் கருத்துகளைக்கொண்டிருப்பவர்கள் அவற்றை அவர்களுக்கு உகந்த பொது தளங்களில் வைக்கலாம்.வைப்பது அவர்கள் உரிமையும் பொறுப்பும் ஆகும். எல்லா கருத்துகளையும் பரிசீலித்து முடிவுக்கு வருவது பொது மக்களின் உரிமை. நான் என்னுடன் முரண்படுகிறோம் என்று அறிவிப்பவர்களுடன் நேரடி விவாதங்களில் ஈடுபடுவதில்லை. அவர்கள் அவர்களுடைய நிலையிலும் நான் என்னுடைய நிலையிலும் உறுதியாக இருக்கும்போது இந்த விவாதத்தில் அர்த்தமில்லை. என் கூட்டங்களை வேறொருவருக்கான மேடையாகவோ, இன்னொருவர் மேடையை என்னுடைய மேடையாகவோ நான் ஆக்கிக் கொள்ள விரும்புவதில்லை. இரு தரப்பு கருத்துகளும் அவரவர் முயற்சியில் மக்களிடையே செல்கின்றன. மக்கள் தமக்கு உகந்தவைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். கடந்த 35 வருடங்களாக இதே அடிப்படையுடன்தான் நான் இயங்கி வருகிறேன். தமிழ்ச் சமூகத்தில் வாழ்வியலிலும், சமூக நீதியிலும், மானுட சமத்துவத்திலும் நேயத்திலும் என் பார்வைகள் என்னவென்பதை 35 ஆண்டுகளாக திறந்த புத்தகமாக இருந்து வரும் என் வாழ்க்கையும் எழுத்தும் அறிந்தவர்களுக்குத் தெரியும். ஈழத் தமிழர்களுக்கான அரசியல் சமத்துவத்தையும் சம உரிமையையும் நான் எப்போதும் ஆதரித்தே வந்திருக்கிறேன். எனவே அவதூறுகள், முத்திரை குத்துதல்களை நான் பொருட்படுத்துவதில்லை. தகவல் பிழைகள் இருக்கும்போது மட்டுமே சில தருணங்களில் அவற்றை திருத்த கருத்து தெரிவித்திருக்கிறேன். மற்றபடி என்னை ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் விருப்பம். இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை. ஞாநி)

வணக்கம் திரு ஞாநி அவர்களே.

தன் கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் அரசுகள், அதிபர்கள் கூட தமக்கு நேர் எதிரான கருத்துக்களில் உறுதியாய் இருக்கும் குழுக்களிடமும், தனி நபர்களிடமும் விவாதமும், பேச்சு வார்த்தைகளும் நடத்தக்கூடிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதே நாங்கள் அறிவிக்க வேண்டியது இல்லை. ஹிட்லரும் , முசோலினியும் சமீபத்திய ராஜபக்செக்களும் தவிர கிட்டத்தட்ட அனைவரும் பேச முற்பட்டு இருக்கின்றனர். பாசிஸ்டுகள் மற்றும் தமது கருத்து மட்டுமே உலகில் சரியானது என்று நம்புபவர்கள், அல்லது அவ்வாறு நம்பிக்கை கொண்டு இருப்பவர்கள் மட்டுமே இவ்வாறு பொது தள விவாதத்தை மறுப்பவர்களாக இருக்கிறார்கள் என்பதை தங்கள் உயரிய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.தவறு என நிருபிக்கும் பட்சத்தில் எங்கள் கருத்தை திருத்தி கொள்ள என்றும் தயாராய் இருந்து இருக்கிறோம் அவ்வாறு செய்தும் இருக்கிறோம். இது எங்களை பலப்படுத்தி இருக்கிறது, மக்களிடத்தில் எங்களை நெருக்கமாக கொண்டு சேர்த்தும் இருக்கிறது. பொது தளத்தில் சனநாயக அரசியல் வேலை செய்பவர்கள் இதை செய்து வருகிறார்கள் என்பது புது செய்தியுமல்ல. இஸ்ரேல் பலஸ்டினம் எப்பொழுதும் சண்டையிட்டு கொண்டு மட்டும் இருந்தது இல்லை. சனநாயக விரோதிகள் என்று நீங்கள் சித்தரிக்கின்ற புலிகள் கூட பேச்சுவார்த்தைகளை நடத்தியே வந்து இருக்கிறார்கள், நீங்கள் மறைமுகமாக தூக்கிப்பிடிக்கும் ராஜபக்செக்கள் தவிர .

அடுத்தவர் நீதியை தமது சுயநலத்திற்க்காக திரிக்கும் நீங்கள் சொன்ன “என் கூட்டங்களை வேறொருவருக்கான மேடையாகவோ, இன்னொருவர் மேடையை என்னுடைய மேடையாகவோ நான் ஆக்கிக் கொள்ள விரும்புவதில்லை” வார்த்தைகள் எங்களுக்கு நகைப்பை மட்டுமே வரவழைக்கின்றன. சரி நீங்கள் யார் என்று சற்று பார்ப்போம். ஞாநி சொல்லக்கூடிய பொது தளம் எனப்படக்கூடிய பத்திரிக்கை தளம் யாருக்கு வாய்த்திருக்கிறது, எப்படி பட்டவர்களுக்கு வைத்து இருக்கிறது?… இந்தியாவில் மட்டுமல்லாமல் எங்கெல்லாம் போலி சனநாயகம் கடைபிடிக்கபடுகிறதோ அங்கெல்லாம் பத்திரிக்கை மக்கள் சனநாயகத்தின் ஊதுகுரலாய் காட்டப்படுவதுண்டு. இந்த அடிப்படையில்தான் அது சனநாயகத்தின் தூண் என்று வர்ணிக்கப்படுகின்றது. லாபநோக்கில் செயல்படும் எந்த முதலாளித்துவ பத்திரிக்கையும், அரசிடம் முரண்பட்டு நிற்க முடிவதில்லை. அரசியலில் சிறிது முரண்படக்கூடிய பத்திரிக்கை கூட அரசு எந்திரத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்கமுடியும் அல்லது இயங்குகிறது. இதுவே இங்கு நிதர்சனம். அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வது என்பது வேறு, அரசின் அடிப்படை நியாய தர்மங்களை கேள்வி கேட்பது என்பது வேறு. அரசின் செயல்பாட்டிற்கு எவ்வகையிலும் தடை செய்யாத, கேள்வி கேட்க்காத பத்திரிக்கை, அவ்வகையிலான ஒரு பத்திரிக்கையாளரைதான் தன்னிடத்தில் வைத்து இருக்கிறது. அந்த பத்திரிக்கை தளத்தில் உயர்சாதிகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்பது பத்திரிக்கையில் செயல்படுபவர்களின் சாதி கணக்கெடுப்பு சொல்கிறது. இந்த சாதி தளம் மைய அரசு வர்க்கத்தின் திட்டத்திற்கு ,செயல்பாட்டிற்கு என்றுமே எதிராக செயல்பட்டதில்லை என்பது இந்தியாவின் சனநாயக வரலாறு. இந்த தளத்தில் என்றுமே மக்கள் போராட்டங்களுக்கு இடம் ஒதுக்கபட்டது இல்லை. இதை தான் திரு.ஞாநி விவாத களம் என்கிறார். எதையும் காது கொடுத்து கேட்க்காத அரசு கூட இப்படியாய் தான் பொறுப்பற்று பேசுகிறது. தான் போடும் வழக்கை நீதிமன்றத்தில் நியாயவாதி என நிரூபித்து விடுதலை பெற்றுகொள் என்கிற அரசிடம், பலியிடப்படுவது ஒரு மனிதனின் வாழ்க்கையும், போராட்டமும். இவ்வாராய் வாழ்க்கையை தொலைத்தவர்களில் ஒருவராய் நமது போராட்டத்தின் நியாயத்தை பலிகொடுக்க சொல்கிறது இவரின் பொதுதள விவாதங்கள்.பிரதமரும், ஒரு தினக்கூலி மனிதரும் சட்டத்தின் முன் ஒன்றே என்று சொல்லி நியாயம் பெற்றுகொள் என்பதான வாதம் இது. தமது போராட்டத்தின் மீதான அவதூறை எதிர்த்துப்போராடுவதே ஒரு போராட்டமாகியபின் எவ்வாறு மைய கோரிக்கைக்கு போராட்டத்தை நகர்த்துவதர்க்கான காலமும், ஆற்றலும் இருக்கும். இவ்வாறன போராட்டதிர்க்கான எதிர் கருத்துக்களை மாற்று கருத்துக்கள் எனசொல்லி அரசிற்கு சாதகமான ஒரு ‘தற்செயலான’ கருத்தாய் உங்கள் கட்டுரைகளும், பேச்சுகளும் இருப்பதே நாங்கள் உங்களை எதிர்த்து போராடுவதன் அடிப்படை. உங்களையும், உங்களை போன்றோர்களையும், நாங்கள் எதிர் கொள்ளக்கூடிய பாசிச அரசின் ஒரு பகுதியாய்த்தான் பார்க்கிறோம். நீங்கள் வேறு, அரசு வேறு அல்ல. அரசு வேறு, லாபநோக்கிலான பத்திரிக்கை ஊடகம் வேறு அல்ல. உங்களின் மாற்று கருத்தும், சிங்கள அரசின் இனவாதமும் வேறு அல்ல.

ஒரு பத்திரிகையாளர் அரசின் ஊது குரல் என்பதில் இருந்து எங்கே வேறுபடுகிறார், அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால் உங்களுக்கும் நேர்மையான கட்டுரையாளர்களுக்கும், அறிவுசீவிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று அறிவதானால் ஹிந்து ராம் , அருந்ததி ராயுடன் எங்கு வேறுபட்டு நிற்கிறார், எட்வர்ட் ஸைடும், நோம் சொம்ஸ்கியும், பினாயக் சென்னும், கேன்சரோ விவாவும், எவ்வாறு தாமஸ் பிரீட்மான், ஜெப்ப்ரே சாச்ஸ், அருண்ஷோரி, பிர்டிஷ்ணந்தி, பிரணாய் ராய், அர்னாப் கோஸ்வாமி உடன் வேறுபடுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம். இவ்வாறே நீங்களும் , நாங்களும். உங்களை எதிர்ப்பது என்பது ஒரு இன்றியமையாத சனநாயக கடமை. உங்களை போன்றவர்களால்தான் மக்கள் போராட்டம் வரலாறு எங்கும் பின்னோக்கி நகர்த்தப்பட்டு இருக்கிறது. நீங்கள் மக்கள் சார்ந்த முற்போக்குவாதியா? அல்லது முற்போக்கு முகமூடியில் இயங்கும் அரசின் குரலா என்பது புரியாமல் மக்கள் குழம்புவது உலகம் எங்கும் போராடும் மக்கள் எதிர்கொள்ளும் சவால். இதை வீதியிலும், போராட்டத்திலும் மட்டுமே எதிர் கொள்ள முடியும்.

முற்போக்கு முகமூடிகள் எப்போதுமே மக்களிடத்தில் எதிர் கருத்துக்களை விதைப்பதற்கு பயன்பட்டு இருக்கிறது.எதிர்க்கருத்துக்கள் மாற்று கருத்துக்கள் அல்ல. உங்களின் 35 ஆண்டுகால திறந்த வாழ்க்கை புத்தகத்தில் இவை சேர்ந்தே பயணப்பட்டு இருக்கின்றன. உங்களது அரைகுறை முற்போக்குகளும், அறிவிசீவித்தனமும் பல மேடைகளில் கிழிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றன.இதை ஆதரங்களுடன் நாங்கள் வெளிப்படுத்த என்றும் தயாராகவே இருக்கிறோம். தங்களது தமிழீழ தமிழர்களுக்கான அரசியல் உரிமை என்பதும், சம உரிமை என்பதும் அவர்களின் வட்டுகோட்டை முதல் மேற்கொண்டுவரும் விடுதலை போராட்டத்தை தவறாக சித்தரிப்பதற்கும், அதை மறைத்து அரசியல் உரிமை என்ற திரிக்கப்பட்ட இந்திய அரசதிகாரத்தின் வாதத்தை மட்டுமே முன்னெடுப்பதாக அமைவதே உங்களை மக்கள்போராட்டங்களின் எதிரியாக, அரசின் கைக்கூலியாக மாற்றி இருக்கிறது. விகிலீக்ஸ் பற்றிய உங்களின் சிலாகிப்புகளிடத்தில் அந்த லீக்குகள் வெளிப்படுத்திய தமிழ் ஈழப்படுகொலை சார்பான ஆதாரங்களை பற்றி பேசாது மௌனித்த ‘தகவல் பிழைகளை’ நாங்களும் எப்படி கவனிக்காமல் இருக்க முடியும். இந்திய அரசின் செல்லப்பிள்ளை ராகுல்காந்தி தமிழகத்தின் முக்கிய நபர்களை சந்திக்க ஏற்பாடு செய்வதற்காய் முழுமுனைப்போடு செயல்பட்ட ‘ஒரு திறந்த முற்போக்கு புத்தகமாகிய’ உங்களை எப்படி எதிர்கொள்வது என்பது நாங்கள் அறியாதது அல்ல. காங்கிரஸ் கட்சியின் பாசிசத்தைதான் உங்களிடமும் எதிர்பார்க்க முடியும். ஒரே ஒரு வித்தியாசம் , அந்த பாசிசம் உங்களின் ‘திறந்த முற்போக்கு’ முத்திரையுடன் வெளிப்படும்.

லசந்த விக்ரமதுங்கவிர்க்கும் உங்களுக்குமான வித்தியாசம் எங்களுக்கு தெரிந்து தான் இருக்கிறது. புலிகளை கடுமையாக விமர்சனம் செய்தவர் லசந்த விக்ரமதுங்க, ஆயினும் அவருக்கு தமிழ் அமைப்புகள் மரியாதை அளிப்பதன் காரணம், அவர் இனவாதி ராஜபக்சேவை , ஒரு சமயத்தில் தமது நெருங்கிய நண்பர் என்கிற போதும், தன் உயிருக்கு ஆபத்து என்கிற போதும் அதை பொருட்படுத்தாமல் ராஜபக்சேவை விமர்சித்து பத்திரிக்கையாளன் என்கிற முறையில் தனது ஊடக கடமையை நேர்மையாய் செய்தார். அத்தகைய நேர்மையை உங்களுடைய 35 ஆண்டு கால திறந்த முற்போக்கு வாழ்வில் நாங்கள் கண்டது இல்லை. நீங்கள் யாருக்கும் முன்மாதிரியாய் அமைந்ததும் இல்லை. இந்து ராமிற்கும், கமலஹாசனிர்க்கும், உங்களுக்கும் உள்ள நேர்மையற்ற முதுகெலும்பை முறித்து போடும் பொழுது தான், இந்த தமிழ்ச்சமூகத்தின் கருத்துகளத்தில் காளானாய் முளைத்து நிற்கும் உங்களை போன்றவர்கள் நீக்கபட்டு, தமிழ்சமூகத்தின் பரப்பில் கடைகோடியில் நின்று எந்த விளம்பரத்திற்கும் ஆட்படாமல், சுயமோகதிர்க்கு இடம் தராமல், லாப நட்டக்கணக்கு பார்க்காமல், காங்கிரஸ்க்கு குடைபிடிக்காமல் வாழும் நேர்மையான முற்போக்கு ஆசான்கள் இங்கு ஆலமரமாய் விரிந்து நிறைக்க முடியும். இது எங்கள் வருங்கால சந்ததியினருக்கு நாங்கள் செய்யும் பேருதவி என்பதாகவே பார்க்கிறோம்.

நீங்கள் மக்களின் போராட்டங்கள் மீது வைக்கும் அவதூறுகளையும், முத்திரை குத்தல்களையும் களைவது எங்களை போன்ற அமைப்புகளின் தலையாய வேலை என்பதை தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை எங்களை போன்றவர்களுக்கு தெளிவாக உணர்த்திய பிறகு நாங்கள் எங்கள் கடைமைகளை செய்யவே முற்பட்டு இருக்கிறோம். உங்களை போன்ற போலி முற்போக்குவாதிகளின் முகத்தை கிழிப்பது எமது வேலை என்பதை மிகத்தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களை உங்கள் தளத்தில் எதிர்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறோம். ஆகவே நாங்கள் உங்கள் மீதான எங்கள் சனநாயக போராட்டத்தை கைவிடுகிறோம் என்று நீங்கள் தவறாய் புரிந்து கொள்ளகூடாது. அடிக்கடி கூட்டம் நடத்துங்கள், மக்கள் எதிரிகளை அவர்களிடத்தில் அடையாளம் காட்ட அது எங்களுக்கு உதவும்.

மே பதினேழு இயக்கம்

Leave a Reply