முருகதாசன் நினைவு நாளில் ஐ.நா அலுவலங்களை முற்றுகை இடுவோம்

- in பரப்புரை
ஐ.நா செயலகத்தின் முன் தீயிட்டு வீரமரணமடைந்த முருகதாசன் நினைவு நாள் 12 பிப்ரவரி 2013 அன்று ஐ.நா அதிகாரிகளின் கவனக்குறைவால் இனப்படுகொலை நடக்கவில்லை அவர்களின் மேற்பார்வையில் நடந்தது எனபதை சர்வதேச சமூதாயத்திற்கு வலியுறுத்தும் வகையில் உலகமெங்கும் இருக்கும் ஐ.நா அலுவலகங்களை முற்றுகையிடுவோம்.

இலங்கை இனப்படுகொலை செய்ய உதவிய பான் கீ மூன், ஜான் ஹோம்ஸ், மற்று விஜய் நம்பியார் போன்ற அதிகாரிகளின் மீது இனப்படுகொலை செய்த குற்றத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி உலகமெங்கும் இருக்கும் ஐ.நா அலுவலகங்களை முற்றுகையிட “உலகமெங்கும் ஒர் சர்வதேச சமூகமாக வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து முற்றுகையிட்டு நமது கோரிக்கைகளை வலியுறுத்த கோருவோம்.”

தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பினையும், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணையையும் தடுத்துவைத்து தமிழீழப் படுகொலையை செய்ய நேரடியாக துணைபோன ஐ. நா உயர் அதிகாரிகளை இனப்படுகொலைக்கான குற்றத்திற்காக விசாரிக்கவும் தமிழீழ விடுதலையை உடனடியாக அங்கீகரிக்க கோரியும் ஐ. நா அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம்.
பிப்ரவரி 12, 2009இல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு தமிழீழத் தோழன் முருகதாசன் ஐ. நா தனது கடமையை உடனே நிறைவேற்றி தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்து தன்னுயிரை ஈந்தார். ஜனவரி 29, 2009இல் உலகத் தமிழர்களை விடுதலைக்கான போராட்ட்த்திற்கு அழைத்து வந்த மாவீரன் தோழர்.முத்துக்குமார் ஐ. நாவின் உயர் அதிகாரி பான்–கி–மூன் என்பவரை நாம் நம்ப இயலாது என்று முன்னறிவித்து நம்மை எச்சரித்தான்.  ஆனாலும் நாம் சர்வதேசத்தினை நெருக்கடிக்குள்ளாக்கும் போராட்ட்த்தினை முன்னெடுக்க தவறினோம்.
ஐ. நா என்கிற முகமூடியை வைத்துக் கொண்டு சர்வதேச கருத்தியலை தமது பக்கத்திற்கு சாய்த்து நின்ற இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் சதியால் சர்வதேச கருத்துருவாக்கம் தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்து இனப்படுகொலையை தடுக்க இயலாமல் செய்தது. இந்தியாவின் தமிழின எதிர்ப்பு வெறியானது ஐ. நாவின் முக்கிய அதிகாரிகளை தமது திட்டத்திற்கு துணையாக வைத்து இனப்படுகொலையை செய்து முடித்தது. தற்போது விடுதலை கோரிக்கையை பணிய வைக்கவும், நீர்த்துப் போகவும் செய்கிற மறுவாழ்வு, நல்லிணக்கம், நல்வாழ்வு-வாழ்வுரிமை என்கிற வாதங்களை ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வைக்கிறது. இதற்கான இலங்கை எதிர்ப்பு நாடகங்களை சர்வதேச அரங்கிலும், ஐ. நாவிலும் இந்த நாடுகளின் கூட்டணி செயல்பாடுகள் நடத்துகின்றன.
இவற்றினை செய்து முடிக்க ஐ. நாவின் உயர் அதிகாரிகளாகவும், இனப்படுகொலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கெடுத்த அதிகாரிகளான விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ், பான் – கி- மூன் என்கிற அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக குற்றம் சாட்டி விசாரித்து தண்டித்தல் என்பது நடந்தால்தான் தமிழர்களுக்கு சர்வதேசம் செய்த துரோகத்தினையும், இலங்கை அரசின் இனப்படுகொலை திட்டத்திற்கு செய்த உதவிகளையும் பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த இயலும். இவர்களது அயோக்கியத்தனத்தினை ஐ. நாவின் உள்ளக ஆய்வு அறிக்கை ‘சார்லஸ் பெட்ரி’ என்பவர் தலைமையில்  நடத்தப்பட்டு வெளியாகி உள்ளது.  இந்த ஆய்வு அறிக்கையை மூடிமறைக்கவும், பான் -கி- மூன் , விஜய் நம்பியார், ஜான் ஹோல்ம்ஸ் போன்ற குற்றவாளிகளை காப்பற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவர்களது செயல்கள் கடுமையான குற்றத்தினை புரிந்தவை எனவும், இனப்படுகொலைக்கு துணை போனதாக அமையும் எனவும் அறியப்படுகிறது. இவர்கள் பின்னாலுள்ள நாடுகள் இவர்களை காக்க முயற்சிக்கின்றன. இந்த அறிக்கையில் வெளியான தகவல்களை, ஆதரங்களை சர்வதேசம் மறுக்கவோ, தவிர்க்கவோ முடியாது போகும் வகையில் இருக்கின்றன. இதனடிப்படையில் நாம் எடுக்கும் போராட்டம் நமது தமிழீழ விடுதலையை ’சர்வதேசத்தால் தவிர்க்க இயலாத’ ஒன்றாக மாற்றவேண்டும். இது நமது வரலாற்றுக்கடமை. 
இந்த நாடுகள் மற்றும் நபர்களின் கூட்டணிதான் தமிழீழப் போராட்டம் மற்றும் போராளிகளை ’பயங்கரவாதம்’ என்று பிரச்சாரம் செய்து தமிழீழத்தின் இறையாண்மையை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. இந்த அங்கீகார மறுப்பே நமது தாய் நிலமான தமிழீழத்தினை இலங்கை அரசின் படைகள் ஆக்கிரமிக்க உதவுகிறது. இலங்கை அரசின் ஆக்கிரமிப்பினையோ, தமிழீழத்தினை சிங்களமயமாக்குவதையோ, தமிழர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதையும், வாழ்வாதரத்தினை அழிப்பதையும் கண்டு கொள்ளாமல் ”இலங்கை அரசு, தமிழர்களின் வாழ்வினை மறுசீரமைப்பில் உலகிற்கே உதாரணமாய் இருக்கிறது” என்று ஐ. நாவின் மனித நேய மறுகட்டுமான உதவிகளுக்கான அதிகாரி ஜான் ஜிங் கடந்த ஆகஸ்டு1, 2012 இல் அறிவித்தார்.
இது போன்ற பல இலங்கை அரசு ஆதரவு நாடகங்களை ஐ. நாவின் மூலமாக நடத்தும் சர்வதேச ஆற்றல்களை தடுத்து நிறுத்தி தமிழர்களின் உரிமையான தமிழீழ விடுதலையை உறுதி செய்வதென்றால் இந்த அதிகாரிகள் அம்பலப்பட்டாக வேண்டும்.  வரும்  மார்ச் 2013, மாத ஐ. நா அமர்வில் சர்வதேச நாடுகள் தமிழர்களுக்கு ஆதரவாக நடப்பதாக  நாடகம் நட்த்துமானல் நமது இந்தப் போராட்டங்கள் பெரும் நெருக்கடியை அவர்களுக்கு அளிக்கும். இந்த அதிகாரிகளின் துணையே ராசபக்சே அரசின் திமிர் பிடித்த பாசிச போக்கிற்கு காரணம். ஆகவே அதன் அடிப்படையாக அமையும் இந்த அதிகாரிகளையும் அதன்பின்னுள்ள அரசுகளையும் அம்பலப்படுத்த போராடுவோம். இதுவே நமது விடுதலை போராட்டத்தில நமது பங்காக அமையும்.
விடுதலையை நோக்கிய பயணத்தில் இது மிக மிக முக்கிய மைல் கல்லாக அமையும் விதத்தில்  நாம் அனைவரும் கைகோர்த்து அடையாள போராட்டங்களை செய்யாமல் போர்க்குணத்துடன், தமிழீழ போராளிகளின் சளைக்காத தொடர் போராட்ட்த்தினைப் போல எதிர்களின் கூட்டணியை உடைக்கவும், அவர்களை பின்னடைய வைக்குமாறும் நாம் செயல்படவேண்டும். இதுவே நமது நோக்கத்தினை ஒரு அடி முன்னே நகர்த்தும் பணியாகும். தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற நகரங்களில் வருகின்ற பிப்ரவரி12ஆம் தேதி 2013 இல் ஐ. நா அலுவலகங்களை முற்றுகையிட அனைத்து கட்சி, இயக்க தோழர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இதே நாளில் இந்தியாவின் பிற நகரங்களில் ஐ. நா அலுவலகம் நோக்கிய போராட்ட்த்தினை முன்னெடுக்கவும் பிற மாநில, தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதே போராட்டம் ஒரே காலகட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் நடக்கும் பட்சத்தில் ஐ. நா அதிகாரிகளுக்கும் , அவர்கள் பின்னுள்ள இந்தியா உள்ளிட்ட அரசுகளுக்கு கடும் நெருக்கடியை உருவாக்கும். சர்வதேச அளவில் தேசிய இனப்போராட்டத்தினை ஒடுக்குவதற்கு துணை நின்ற ஐ. நாவின் செயலை கண்டிக்கும் விதமாகவும், அம்பலப்படுத்தும் விதமாகவும், போராடி பின் ஐ.நாவின் சூழ்ச்சியால் பலியிடப்பட்ட அந்த மக்களின் நினைவாகவும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே முருகதாசன் தீக்குளித்து ஐ. நா அலுவலகம் முன் உயிர் நீத்தான். அவனது தியாகம் அனைத்துச் சமூகங்களுக்குமானது. அதை அனைத்து ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களுக்குமான தினமாக மாற்றி ஐ.நாவினை எதிர்கொள்வோம். பிப்ரவரி12இல் உலகம் அதிர, அதிர ஐ.நா அலுவலக முற்றுகையை நடத்தி நாம் நமது போராட்டத்தினை ஆரம்பிப்போம்.
முத்துக்குமாருக்கும், முருகதாசனுக்கும் மற்றும் ஏனைய தியாகிகளுக்கும் நாம் செலுத்தும் வீரவணக்கமே இந்தப் போராட்டம். மைகோர்த்து சர்வதேச இனமாக தமிழினம் எழவேண்டும், இது வரலாற்று கட்டாயம். தமிழருக்கு கடைக்கோடியில் இன்னல் நிகழ்ந்தால் உலகெங்குமுள்ள தமிழினம் இவ்வாறு கைகோர்க்கும் என்பதை உருவாக்கிடுவோம்.
நாம் வெல்வோம்.
மே பதினேழு இயக்கம்
9600 781111

டில்லியில் Unicef அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டம்.

முருகதாசன் நினைவு நாளில் 12 பிப்ரவரி 2013 அன்று அமெரிக்காவில் நியு யார்க்கில் உள்ள ஐ.நாவின் தலைமை அலுவலகம் முன்பு தோழர்கள் முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்தில் இலங்கை தமிழ் சங்கம், USTAPC, TGTE, TAG, NCCT, WTO மற்றும் மே பதினேழு இயக்கத் தோழர்கள் கலந்துக் கொண்டனர்.


Leave a Reply