மகஇகவின் (வினவு) அவதூறுகளுக்கான எதிர்வினை

- in பரப்புரை
இளவரசன் கொலையை அடுத்து, நாங்கள் வெளியிட்டிருந்த ஒரு சுவரொட்டியின் வாசகத்தினை வைத்து (சுவரொட்டியின் நோக்கத்தினையும் முழுவதுமாக உள்வாங்காமல்) “சாதியிடம் சமரசம் செய்துவைத்திருப்பதுதான் மே17இன் சமூக அடிப்படை, பாமகவிடம் பயந்துவிட்டார்கள், வன்னிய மக்களின் கூட்டம் சேர்க்கமுடியாமல் போகும் என்று சமரசம் செய்கிறார்கள்” என்று வர்ணிக்கும் ம.க.இ.க.வின் விவாத நேர்மை மீது நமக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுதப்படுகிறது.
இது போன்ற நேர்மையற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மகஇகவினர் வைப்பது ஆச்சரியப்படக் கூடிய ஒன்றல்ல; இது முதன்முறையும் அல்ல. “ஜெயலலிதாவினை ‘ஈழத்தாய் என்று மே17 இயக்கம் சொன்னது’ என்பதாகக் கட்டுரை எழுதியவர்கள், அதற்கான ஆதாரத்தினை கொடுத்து விட்டு குற்றச்சாட்டினை முன்வையுங்கள் என்றபோது மழுப்பினார்கள். அதற்கான ஆதாரத்தினை அளிக்க முடியாவிட்டாலும், சுயவிமர்சனமேற்று அக்கருத்தினை நீக்கி இருந்திருந்தால் உண்மையான சனநாயக புரட்சிகர பண்பாட்டினை உடையவர்கள் என்று நாம் சொல்லலாம். அப்படி இதுவரை நடக்கவில்லை. போகிற போக்கில் அனைவரின் மீது சேறுவாரி வீசியெறிந்து விட்டுச் செல்வது எந்தவகை புரட்சிகரப் போக்கு என்று புரியவில்லை.
அனைத்து சனநாயக முற்போக்கு புரட்சிகர சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்று சதா அறைகூவல் விடுப்பவர்கள், சிங்கள சனநாயக சக்திகளை இணைத்து தமிழீழ மக்கள் போராட வேண்டுமென்பவர்கள், அப்படிப்பட்ட எந்த ஒரு முயற்சியையும் எந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்திலும் தமிழகத்தில் – (அல்லது இந்தியாவில்) செய்திருக்கிறார்களா என்பது சந்தேகமே. ‘ஆகப்பெரும்’ இயக்கமாக 35 ஆண்டுகளாக வளர்ந்திருக்கும் ஒரு புரட்சிகர இயக்கம் இங்குள்ள சனநாயக ஆற்றல்களை கண்டறியவோ, ஒன்றிணைக்கவோ முடியாமல் நிற்பதன் தோல்வியே தமிழீழப்படுகொலை, பச்சைவேட்டை, கூடன்குளம், முல்லைப் பெரியாறு, மூவர்தூக்கு, இளவரசன் கொலை உள்ளிட்ட சமூக அவலங்கள். அரசியல் உரிமைப் பிரச்சனைகளையும், சமூகப் பிரச்சனைகளையும், வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு இருக்கிற தமிழ்ச் சமூகத்தில் (அல்லது இந்தியச் சமூகத்தில்), பெரும் பாசிசமாக வளர்ந்து நிற்கும் இந்தியம், பார்ப்பனியம், ஏகாதிபத்தியம் என்கிற பெரும் ராட்சச ஆற்றல்களுக்கு எதிராக களம் அமைக்காமல் அனைத்து மாற்று இயக்கங்களையும் நேர்மையற்றவர்களாகவும், செயல்திறனற்றவர்களாகவும், தற்குறிகளாகவும் சித்தரிப்பதால் எதைச் சாதித்தார்கள் என்பதுவும் வினாவே!
இன்று எங்களிடத்தில் இருப்பதாக நீங்கள் சொல்லும் குறைபாடு நேற்று உங்களிடத்தில் இருந்திருக்கிறது. நாளை வேறொரு அமைப்பிடம் வெளிப்படலாம். பாமகவும், கொங்கு வேளாளக் கவுண்டரும் பார்ப்பனரும் முதலியார்-பிள்ளைமாரும் கைகோர்த்து தமிழ்த் தேசிய. தலித்திய, பெரியாரிய, மா-லெ இயக்கத்திற்கு எதிராக கூட்டணி அமைக்கும் போது நேர்மையற்ற, ஆதாரமற்ற, அவதூறுகளின் ஊடாக இங்குள்ள முற்போக்கு ஜனநாயக இயக்கங்களின் செயல்பாடுகளை உடைப்பது யாருக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை.
‘சத்திரியன்’ என்று இந்துத்துவ விவரணங்களைக் கட்டி அதனூடாக பெருமைகளையும், மனுதர்ம கட்டுமானங்களையும் பாமக எழுப்பிய காலத்தில் அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தது மே 17 இயக்கமே. இடஒதுக்கீடு என்று பேசி தமது வாக்குவங்கிகளை ஒன்றிணைக்க 2012 இல் முயற்சி எடுத்தார்கள். அது சாத்தியப்படாதபோது மக்கள்தொகை கணக்கெடுப்பில் “சத்திரியகுல வன்னியர்” என்று குறிப்பிடுங்கள் என்று இந்துத்துவ அடிப்படையோடும், கருத்தியலையும் பிரச்சாரம் செய்தபொழுது ம.க.இ.க.வினர் விமர்சனம் எழுப்பவில்லை. (மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமது சமூகமக்கள் அரசிடம் உரிமைக்குரலை எழுப்புவதற்காக ஒரே அடையாளத்தினை மேற்கொள்வது தவறல்ல. ஆனால் தமிழகம் முழுவதும் ஆங்கில-இந்தி-வடமொழி சொற்களை புறக்கணிப்போம் என்று போராட்டம் நடத்தியவர்கள் ’சத்திரியன்’ என்பது தமிழ்வார்த்தை என்று சொல்லி மனுதர்மப் படிநிலையை உயர்த்திப் பிடித்தே இடஒதுக்கீட்டிற்கு எதிரான உள்ளடக்கத்தினையும் வைத்தார்கள் என்பதுவே முரண்). ஆனால், பா.ம.க. வினர் சத்திரியர் என்கிற பதத்திற்கு மனுதர்ம விளக்கத்தினையும், புராண கருத்தியல் ஊடாக ஒரு சூப்பர்மேன் இமேஜை கட்டியதும், பார்ப்பானைப் போல பூணூல் போடுவதற்கு தகுதியுடைய ஒரே சாதி என்று பேசி, இந்திய பார்ப்பன தேசியத்தினை உயர்த்திப் பிடிக்கும் நிலைப்பாட்டினை எடுத்தபோதும் நாங்கள் நேரடியாக விமர்சித்துப் பேசினோம்.
அன்றிலிருந்து நடைபெற்ற பிரச்சாரத்தின் மூலமாக தங்களை ஒரு சாதி இந்து மாவீரர்களாக கட்டியெழுப்ப பாமக முயன்றது. இதை உணர்ந்தே இவர்களது பிரச்சாரத்திற்கு இந்த வருடம் தினமலர் ஒரு சித்திரை சிறப்பிதழையும் வெளியிட்டது. ’சோ’ ராமசாமி உட்பட பல பார்ப்பன இந்துக்களும், பிற சாதி இந்துக்களும் ஆதரவு நிலையை எடுத்தார்கள். இந்த கருத்துருவாக்கம் இந்துத்துவத்தை நோக்கியும், சாதியப் படி நிலையை உயர்த்திப்பிடித்தும் நகருகிறது என்று நாங்கள் சுட்டிக்காட்டி எச்சரித்த பொழுது எங்கள் தோழரின் வீட்டினைச் சுற்றி சுவரொட்டியும் பின்பு குடும்பத்தாருக்கு மிரட்டலும் விடுக்கப்பட்டது. அப்போது மெளனம் காத்து நின்றது ம.க.இ.க.. அன்று ஏன் சாதிவெறிக்கு எதிராக எதிர் வினையாற்றவில்லை?.
மே 17 இயக்கம் நடத்திய 2012 தமிழீழ நினைவேந்தல் இந்த சாதிக்குழுவினரின் எதிர்ப்பினையும் மீறியே நிகழ்ந்தது. போட்டியாக நிகழ்வுகளும், புறக்கணிப்புகளும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைவேந்தலுக்கும், மே17 இயக்க போராட்டங்களுக்கும் நிகழவே செய்கிறது. சாதி உணர்வு மேலோங்கிய பலர் எங்களுக்கு எதிர்ப்பு நிலையை இன்றும் எடுத்து எங்களை தனிமைப்படுத்த முயற்சிக்கவே செய்கிறார்கள். சில so-called முன்னாள் புரட்சிகர அமைப்புகள் கூட இவர்களுடன் இணைந்து எங்களை எதிர்த்து நிற்பதை ஆதாரத்துடன் பதிவு செய்ய இயலும். அனைவரின் மீது விமர்சனம் இல்லாமல் நாங்களும் இல்லை. ஆனால் விமர்சனங்களை மட்டுமே வைத்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க நாங்கள் இங்கு வரவில்லை. எமது அரசியல் வேலையே எமது ஆகப்பெரும் விமர்சனம்.
சாவு விழுந்த பிறகு புரட்சிகர முழக்கத்தினை எழுப்புவதும் பின்னர் அதை மறந்துவிட்டு அடுத்த வேலைக்கு நகருவதும், பிறகு அடுத்தகட்ட அடக்குமுறை நிகழும்போது மறுபடி முழக்கம் எழுப்பி, யாரை இதற்கு குற்றம் சொல்லி தான் தப்பிப்பது என்பது தானே இங்கு பொதுவாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
ஒட்டுமொத்த புரட்சிகர, முற்போக்கு, ஜனநாயக –பெரியாரிய-அம்பேத்காரிய தமிழ்த் தேசிய செயல்பாட்டாளர்களுக்கு எதிராகத் தானே பாமகவின் தலித் எதிர்ப்பு கூட்டணி கிளம்பியது. இவர்களை தனிமைப் படுத்தவேண்டுமென்றுதானே செயல்பட்டது. இதே போன்று சிறுத்தைகளும் பெரியாரிய –மார்க்சிய- தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு எதிராக கேள்விக்குரல் எழுப்பினர் (பின்னர் தோழர் திருமாவளவன் இதை மாற்றி அனைவரையும் இணைத்து போராட அழைத்தார்). இதே பணியைத் தானே நீங்களும் உங்களது பாணியில் ‘விமர்சிக்கிறோம்’ என்கிற பெயரில் நிகழ்த்துகிறீர்கள்?
மே 17 இயக்கம் பாமகவின் பெயரை சேர்த்து சுவரொட்டி வெளியிட்டு இருந்தால் ம.க.இ.க. உடனே கைகோர்த்து முன்னணி கட்டி இருக்குமா என்ன? (ஒருவேளை நாங்கள் தவறாகவே இருந்ததாக வைத்துக்கொண்டாலும் கூட பா.ம.க.வினரின் சாதிக்கூட்டணிக்கு எதிராக ஒரு வலுவான கூட்டமைப்பினை உருவாக்க பிற மார்க்சிய-லெனினிய குழுக்கள் தமிழகத்தில் இல்லையா என்ன?). அப்படி செய்ய முடியும் என்றால் நாயக்கன் கொட்டாய் நடந்த பிறகும் ஆபத்தினை உணர்ந்து ஏன் செய்யவில்லை? அன்றும் பாமகவினரை எதிர்த்து தானே மே 17 பேசியது, எழுதியது, போராடியது. இதனால் தானே பா.ம.க.வின் அருள் தனது இணையப் பக்கத்தில் தொடர்ந்து மே17க்கு எழுதி இருந்தார்.
‘சத்திரியன்’ என்று ஆரம்பித்த சாதி – இந்துத்துவப் பிரச்சாரம் ‘நாடகக் காதலாகி’ இன்று இளவரசன் மரணம் வரை நகர்ந்திருக்கிறது. இதன் நடுவில் தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டதும், எரிக்கப்பட்ட வீடு-உடைமைகளுக்காகப் போராடிய நாயக்கன் கொட்டாய் மக்கள் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டபோது ஒரு பெண் உயிரிழந்ததும், அதன் பின்னர் இவர்கள் பிரிக்கப்பட்டதும், திவ்யா இளாவரசனுக்கு எதிராக பேசவைக்கப்பட்டதும், இளவரசன் மரணமுமாக 10 மாதங்கள் சம்பவங்கள் நம் கண்முன்னே நிகழ்ந்தன. இதன் இறுதியில் நிகழ்ந்த இளவரசன் மரணத்திற்கு பொறுப்பாக பா.ம.க.வினரை குற்றம் சொல்லும் அதே நேரம் இந்த 10 மாதங்களில் அந்த இருவரைக் காப்பதற்கு எவ்விதமான கூட்டியக்கமும், செயல்பாடும் முன்வைக்கப்படாமல் இந்த இருவரையும் காக்க வக்கற்றவர்களாகத்தானே நிற்கிறோம் என்கிற குற்றச்சாட்டிற்கு யார் பொறுப்பு ஏற்பது? இரண்டு இளையவர்களை காக்க வக்கற்ற நாம் எப்படி ஒட்டுமொத்த சமூக நீதியை காக்கப் போகிறோமென்று அறைகூவல் விடுக்கச் சொல்கிறீர்கள்? நாம் செய்த தவற்றினை சுயவிமர்சனம் ஏற்காமல் அரசியல் அறைகூவல் விடுப்பது எப்படி நேர்மையாகும்?
எங்களது சுவரொட்டி நீங்களே கண்டறிந்ததைப் போல சுயவிமர்சன ரீதியிலான சுவரொட்டியே. மக்களுக்கான அறைகூவலோ, அறிவுரையோ அல்ல. இளவரசன் எங்களுக்கும்(மே 17) சேர்த்தே சொல்லிச் சென்றிருக்கிறான். இதை சுயவிமர்சனத்தோடு புரிந்துகொண்டு ஒரு நீண்டகால கூட்டுச் செயல்பாட்டினை முன்வைக்காமல், புரட்சிகர வீரவசனங்களை முன்வைக்க நாங்கள் விரும்பவில்லை. அது எங்களைப் பொருத்தவரை நேர்மையும் கிடையாது. குறிப்பிடும்படியான ஒரு வலிமையை கைக்கொள்ள என்ன நடவடிக்கையை நாம் அனைவரும் எடுத்தோம்?. நாயக்கன் கொட்டாயில் இருந்து இளவரசன் கொலைவரை நாம் நடத்திய போராட்டங்களை மறுஆய்விற்கு உட்படுத்தியே அடுத்த கட்டத்தினை நோக்கி நகரமுடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஒருவேளை நாங்களெல்லாம் கத்துக்குட்டிகள், தத்துவார்த்த ஆழமில்லாதவர்கள், புரட்சிகர செயல்திட்டமில்லாதவர்கள் என்றால் உங்களுடைய செயல்பாடு இளவரசன் கொலையைத் தடுக்குமளவு இருந்ததாக நம்புகிறீர்களா? எல்லோரையும் குற்றம் சொல்லும் நீங்கள், மற்ற எல்லோரையும் விட ஒரு படி முன்னே சென்று சாதித்தது என்ன என்பதைக் கூற முடியுமா?
நீதிமன்றத்திற்குத் தனியே வந்து சென்ற இளவரசனை நாங்கள் நேரில் சென்று துணைக்கு நிற்கவில்லை என்கிற குற்ற உணர்ச்சியே எங்களது சுவரொட்டியாக வெளிப்பட்டது. நாயக்கன்கொட்டாய் நிகழ்வு முடிந்தவுடன் ‘பா.ம.க.வினை விசாரணைக்குட்படுத்து, ஆதிக்க சாதிய அமைப்புகளை தடுத்து நிறுத்து’ என்ற முழக்கத்துடனான கூட்டு நடவடிக்கை தேவை என்று பல்வேறு இயக்கங்களுக்கு அழைப்பினை விடுத்தோம். மூன்று வருடங்களாக நாங்கள் அறிந்த தோழமை இயக்கங்களுடன் பேசினோம். ஆனால் ஒரு வலிமையான எதிர்ப்பியக்கத்தினை எங்களால் கட்ட இயலவில்லை. இரண்டு மாத முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
ஐ.நாவின் உள்ளக ஆவணத்தினை அம்பலப்படுத்துதல், அமெரிக்க – இந்திய – இலங்கை கூட்டு செயல்திட்டத்தினை அம்பலப்படுத்துதல், மாணவர் போராட்டத்தில் பங்கு என்று தொடர்ந்து நாங்கள் செயல்பட்டதால் இதில் பங்கேற்க முடியவில்லை எனும் பதில் இளவரசனை உயிருடன் கொண்டு வரப்போவதில்லை. நாங்கள் – மே 17 இயக்கத்தினர் இவ்விடயத்தில் தோற்றிருக்கிறோம். இதை ஒத்துக்கொள்வதில் எங்களுக்குத் தயக்கமில்லை.
//இளவரசன் – சாதிய பயங்கரவாதத்தை உணர்த்தியவன், தமிழ் சமூக மௌனத்தால் மரணித்தவன். இளவரசன் – நம் சமூகத்தின் பாராமுகத்தை வெளிப்படுத்தியவன்.// இதைத்தான் எமது சுவரொட்டி சொன்னது.
ஆனால் இந்த நிகழ்வுகளில், குறிப்பாக பரமக்குடி பயங்கரவாதத்திலிருந்து இளவரசன் கொலை வரை (இம்மானுவல் கூடல், தேவர் ஜெயந்தி, நத்தம், மரக்காணம், மாமல்லபுரம், இளவரசன் கொலை) என்று நீளும் சாதிய வெறியாட்டத்திற்கு மூன்று முகங்களை நாங்கள் காண்கிறோம்.
ஒன்று, அரசு. இரண்டு தீர்க்கப்படாத பிரதான முரண்கள், மூன்று அரசில் பங்கேற்கும் கட்சிகள். சாதிய முரண்கள் கூர்மைப்படுத்தப்பட்டு, போராடும் சமூகங்கள் பிளவுறுவதும், இதை அரசு நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரித்தல், வளர்த்துவிடுதல் என்பதும், அரசின் இந்த நிலைபாடு பா.ம.க. போன்ற அரசியல் கட்சிகள் வளர்வதற்கு சாதகமாக இருக்கின்றது என்பதுவுமே எங்கள் நிலைப்பாடு.
இந்தப் பின்னணியின் அடிப்படையிலேயே சமூக முரண்கள் யாரால், எந்த காலகட்டத்தில், யாருக்கு எதிராக இந்த அரசால் பயன்படுத்தப்படுகிறது என்பதை மா – லெ இயக்கங்களால் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக, ம.க.இ.க வினர் உட்பட சம்பவங்களை சம்பவங்களாக மட்டும் விவரிப்பதும், சமூகப் பிரச்சனைகளாக மட்டுமே பார்க்கவேண்டுமென நிர்பந்திப்பதுமாகவே விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த நிகழ்வுகளுடைய அரசியல் உள்ளர்த்தம் பெருமளவில் விவாதிக்கப்படாமலேயே நகர்ந்து சென்றிருக்கிறது. இந்த இரண்டு விடயங்களையும் மே 17 இயக்கம் வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் பதிவு செய்திருக்கிறது. மே 17 இயக்கத்துடன் எந்த உறவுமற்ற ம.க.இ.க – விற்கு இது தெரியாமல் போனது துரதிர்ஷ்டமே. சுவரொட்டியை மட்டும் கவனித்தவர்கள் எமது பிற பதிவுகளை கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள் என்பது நம்பக் கூடியதாகவும் இல்லை.
உலகமயமாக்கல் மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போதும், தனியார்மயத்தினை நடைமுறைப்படுத்தும் போதும், அரசு எதிர்ப்பு மக்கள் போராட்டங்களை வலுக்குறையச் செய்யவும், இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக தமிழ்த்தேசிய மக்கள் திரளும்போது பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் சமூக முரண்களை கூர்மையாக்கி திசை திருப்புதல் நடப்பதையும் எதேச்சையான நிகழ்வுகளாக நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், இவை அனைத்தையும் ம.க.இ.க – வினர் தனித்தனி நிகழ்வுகளாக மட்டுமே பார்த்து அதற்கான போராட்டத்தினையும் முழக்கத்தினையும் முன்வைக்க விரும்புகின்றனர். உங்களது புரிதல் இவ்வாறுதான் இருக்கும் என்றால், உங்களது அரசியல் நிலைப்பாடும் செயல்பாடும் அந்த அளவிலேயே நிற்கும் என்று நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
சமூக தளத்தில் இந்த சாதி முரண்களை எதிர்ப்பதில் நாயக்கன் கொட்டாய்க்குப் பிறகு நிகழ்ந்த இளவரசன் மரணம் வரையிலான காலகட்டத்தில் நாங்கள் தோற்றிருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் இந்த நிகழ்வுகளூடாக அரசு வென்றிருக்கும் ’அரசியல் நகர்வுகளை’ கவனிக்காமல் விட்டுச் செல்ல நாங்கள் விரும்பவில்லை. அதற்கான பலம் எங்களுக்கு இல்லாமல் இருந்தாலும் மக்கள் விரோத அரசியல் திட்டங்களை அம்பலப்படுத்துவதை நாங்கள் எங்களது பிரச்சாரத்தில் கடந்த காலத்திலும், நாயக்கன் கொட்டாய்க்குப் பிறகும், இன்று வரையிலும் செய்து வருகிறோம்.
இளவரசன் கொலை நடந்த அதே தினத்தில் வலிமை பெற்றுக்கொண்டிருந்த என்.எல்.சி போராட்டம் மாற்று இயக்கங்களுக்கு முக்கியத்துவமற்றுப் போனது, தமிழீழத் தமிழர்கள் மீதான 13 – வது திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்தியா தனது பிடியை தமிழர்கள் மீது கொடூரமாக திணிக்கும் காலகட்டத்தில் இந்த சதி தமிழகத்தில் பேசப்படாமல் போனது. கூடன்குளத்தில் இறுதிக் கட்டத்தினை நோக்கி மத்திய அரசு அணு உலை செயல்பாட்டினை நகர்த்தி இருக்கிறது. இந்த மூன்றும் இளவரசன் மரணம் நடந்த அந்த ஒருவாரத்தில் நிகழ்ந்திருக்கிறது.
இன்று பா.ம.க ஊடாக அரசு செயல்படுத்திய திட்டம், நேற்று வேறொரு அரசியல் ஆற்றல் ஊடாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. மக்களை உடைக்க, நாளை வேறொரு அரசியல் ஆற்றலை இந்த அரசு பயன்படுத்தும்.
இவ்வாறு தொகுத்து ஒரு அரசியல் புரிதலையும், முடிவினையும், நகர்வினையும் தமிழக மக்கள் மட்டுமல்லாமல், எங்களைப்போன்ற இயக்கங்களுக்கும் சேர்த்து ம.க.இ.க. முன்வைக்காமல் அனைத்தையும் தனித்த நிகழ்வுகளாகவும், அதற்குரிய தனித்த போராட்டங்களாகவும் கட்டமைக்கக் கோருகிறது.
மூவர் தூக்கிற்கு எதிரான போராட்டத்தை திசைதிருப்ப பரமக்குடி படுகொலையை அரச பயங்கரவாதமாக நிகழ்த்தியது.(தேவர் சாதிவெறி என்று நீங்கள் சொல்கிறீர்கள், சாதிய மோதல் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் சொல்கிறார். ஆனால் துப்பாக்கியால் சுட்டது ஜெவின் காவல்படை இல்லையா? இதுபோலத்தான் தாமிரபரணியும் நிகழ்ந்ததா? கொலை குற்றச்சாட்டில் இருந்து அரசுகளை காப்பாற்றிவிட்டு இரண்டு சாதிகளுக்கு இடையிலான பிரச்சனையாக மட்டுமே பார்ப்போம் என்கிறீர்களா?) பின்னர் கூடன்குளத்திற்கு திரண்ட தமிழக – கேரள மக்களை முல்லைப் பெரியாறு ஊடாக அரசு உடைத்தது. நாளை, நியூட்ரினோ திட்டத்திற்கு வேறொரு அரசியல் கட்சியினை அரசு பயன்படுத்தலாம். அச்சமயத்தில் ம.க.இ.க. வேறொரு கோரிக்கையினை முன்வைப்பார்களோ?.
ஏனெனில் இந்த சாதிய வெறியாடல் என்பது பா.ம.கவுடன் மட்டுமே ஆரம்பித்து அவர்களுடனேயே முடிந்துவிடப் போவதில்லை. வன்னியருடன் ஆரம்பித்து வன்னியருடன் முடியப் போவதில்லை. இளவரனுடன் ஆரம்பித்து இளவரசனுடன் முடியப் போவதில்லை. சமூகப் பிளவினை பயன்படுத்தி தனது உலகமயமாக்கல் – தனியார்மயக் கொள்கையை அரசு நிறைவேற்றுகிறது. இந்த திட்டத்தினுடைய ஒரு கருவியே பா.ம.க. இந்த பா.ம.க.வினுடைய ஒரு செயலே இளவரசன். பா.ம.க.வினைப்போல பல கட்சிகள் இங்கு இருக்கின்றன. இளவரசன் – பா.ம.க. என்று மட்டுமே நாம் சுருக்கிப் பார்த்து அரசியல் நடவடிக்கையை எடுத்து முடித்தால் அது எவ்வகையான அரசியல் என்று புரட்சிகர ஆசான்களாகிய உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அதற்காக பா.ம.கவினை விட்டுவிடலாம் என்று மே 17 சொல்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்டு அதற்கு ஒரு கட்டுரை எழுதி நேரம் செலவழிக்காதீர்கள். பா.ம.க.வினை தண்டிப்பதனைப் பற்றிய பிரச்சாரத்தில் மேற்சொன்ன அரசியல் புரிதலை மக்களிடம் கொண்டு செல்லுங்களென்று நாங்கள் முன்வைக்கிறோம். இதுவரை அப்படியான அரசியல் முன்வைக்கப்படவில்லை. எனவே தான் எங்களது சுவரொட்டியில் // இளவரசன் – சாதி, ஒடுக்கும் அரசின் பங்காளி என புரிய வைத்தவன்/// என்று சொல்லியிருக்கிறோம். அரசின் பின்புலம் இல்லாமல் எந்த ஒரு சாதிய வெறியாட்டமும் – பரமகுடி, மரக்காணம், நாயக்கன் கொட்டாய் போன்று நடக்கமுடியாது.
அரசு பா.ம.க.வினை தண்டிக்க விரும்பாது, அது மக்கள் விரோதமானது என்று சொல்லவே //இளவரசன் – அரசியல் அமைப்புச் சட்டம் தோல்வி அடைந்தது என்று உணர்த்தியவன்.// என்றோம். சாதி ஒழிப்பின் ஊடாக அரசியல் விடுதலையைப் பேசவேண்டுமென்பதற்கே // இளவரசன் – சாதி ஒழிக்கப்பட வேண்டியது, உரிமை மீட்கப்பட வேண்டியது என்று சொல்லிச் சென்றவன்.// என்று சொல்லி இருக்கிறோம்.
எமது சுவரொட்டியின் ஊடாக நாங்கள் தமிழ் மக்களிடம் பகிர்ந்த அரசியல் என்பது பரந்த அளவிலான அரசியல் சார்ந்ததே. (உங்களைப்போன்ற எல்லாம் வல்ல, ஆழ்ந்த அறிவு கொண்ட அரசியல் பண்டிதர்களுக்காக அல்லாமல் எங்களைப்போன்ற எளியவர்களுக்காக எழுதப்பட்டது)
அரசு, இந்த அரசுடன் பாராளுமன்றம் ஊடாக வினையாற்றக் கூடிய ஏதோ ஒரு இயக்கத்தினை கொண்டு வரலாற்றின் முரணையோ, பண்பாட்டின் முரணையோ, எல்லை சார்ந்த முரணையோ, இந்திய தேசியம் சார்ந்த வெறியையோ வெற்றியுடன் கையாண்டு வருகிறது. அதை மையமாகக் கொண்டே இளவரசன் நிகழ்வின் வாயிலாக நாங்கள் உணர்த்திய அரசியல். அது சாதிய பயங்கரவாதம் என்கிற பதத்திலிருந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தோல்வி என்பதிலிருந்தும், தமிழ்ச் சமூகத்தின் பாராமுகம் என்பதிலும் ஒரு வரலாற்றியல் கண்ணோட்டம் கொண்டதேயொழிய பா.ம.க.வை தப்பிக்க வைக்கும் தந்திரம் அதிலில்லை.
rural-stats-3
City-Stats
நீங்கள் பு.ஜ வில்/வினவில் ஒரு கருத்துக்கணிப்பின் ஊடாக குறிப்பிட்டதைப்போல 85% வன்னிய மக்கள் எதிர் நிலை கொண்டதாக இருக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட நிகழ்வை வன்னிய சாதி வெறியாகவோ, வேறு ஏதோ ஒரு சாதியை மையப்படுத்தியோ அரசியல் முடிவாக எடுக்க வேண்டிய அவசியமில்லை. இளவரசன் சாவிற்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதுவும், பா.ம.க. தண்டிக்கப்பட வேண்டுமென்பதற்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சாதிக்கெதிரான, அரசுக்கு எதிரான அரசியல் போராட்டம் என்பது அனைத்து சாதி-உழைக்கும் மக்களை கொண்டதே ஆகும்.
ஆனால் வன்னிய சாதிவெறி, தேவர் சாதி வெறி என்பது தனித்த பெயரிடப்படக்கூடிய ஒரு பாசிசமாக ஒரு பண்பாட்டு கருத்தியலாக கட்டமைக்கப்பட்ட தனித்த வெறியாக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்.
சிங்கள பெளத்த பேரினவாதம் என்று பெயரிடுவதற்கு ஒரு பாசிச கருத்தியல் பின்புலம் இருக்கிறது; போலியான வரலாற்று கட்டமைப்பு இருக்கிறது. இங்கு அவ்வாறு தனித்தனியாக வன்னிய, முதலியார், கவுண்டர், பிள்ளை, தேவர் என்று ஒவ்வொருவருக்கும் சாதியவெறி கருத்தியல் கட்டமைப்பு இல்லை. இங்கு இந்துத்துவ – மனுதர்ம சாதிவெறிக் கட்டமைப்பே இவர்களூடான கருத்தியல் கட்டமைப்பு. இவர்களின் சாதிவெறி அங்கிருந்தே வரவழைக்கப்பட்ட ஒன்று. சாதி இந்து வெறியாகத்தான் பார்க்கிறோமே ஒழிய ஒவ்வொரு சாதிக்கான தனித்த பண்புடன் கூடிய சாதிய வெறியை நாங்கள் பார்க்கவில்லை.
ஒரு சமூக மக்களிடம் இல்லாத ஒன்றை அல்லது பெருமளவிற்கான ஆதரவற்ற கருத்தாக்கத்தினை அவர்களின் பெயரின் ஊடாக சித்தரிக்க வேண்டுமென்று சொல்கிறீர்கள். ஒருவேளை சாதிவெறி என்பது இந்துத்துவ பார்ப்பனியத்திற்கு அப்பாற்பட்டதாக கருதுகிறீர்களோ என்னவோ?
உங்களது கட்டுரைகளிலிருந்து சில கருத்துக்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.
//“ஆலய நுழைவுப் போராட்டம் நடத்த வந்தார்கள். ஒரு லோடு செங்கல் எடுத்துத் தாக்கினோம். வாலைச் சுருட்டிக் கொண்டார்கள்” என்று ரெட்டியார் சங்கமும், “கலப்புத் திருமணம்தான் நம் முதல் எதிரி” என்று மறுமலர்ச்சி முஸ்லிம் லீகும் பேசியிருக்கின்றனர். இந்து மக்கள் கட்சியும் இதில் கலந்து கொண்டு, இந்து என்பவன் எவன் என்று காட்டியுள்ளது.// http://www.vinavu.com/2013/01/09/fight-against-caste-atrocity/
// வன்னியர் சாதியைச் சேர்ந்த வயதானவர் ஒருவர், “நானே வன்னியன் தான் சார். நான் சொல்றேன். இந்த நாயிங்களை நடு ரோட்டுல ஓட விட்டு சுட்டுக் கொல்லணும் சார்” என்று கோபத்துடன் தன்னுடைய சாதிவெறியர்களைச் சாடினார். காதல் என்பதும், திருமணம் என்பதும் தனிப்பட்ட நபர்களின் விருப்பங்கள் என்பதே மக்களின் கருத்தாக இருந்தது. தனிப்பட்ட இருவரின் பிரச்சினைக்காக 300 குடிசைகளை எரித்துள்ளதைக் கேட்டு மக்கள் ஆத்திரப்பட்டனர்; வன்னியர் சங்கத்தைக் கடுமையான வார்த்தைகளில் சாடினர்.//
//பொதுவான இந்தக் கருத்துக்களுக்கு ஒரு சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்தன. இவர்கள் காடுவெட்டியையும், ராமதாசையும் ஆதரித்தனர்; தருமபுரி குடிசை எரிப்பு சம்பவம் சரிதான் என்றனர். ஆனால், ஆச்சரியப்படும் விதத்தில் அவர்கள் யாரும் வன்னியர்கள் இல்லை. தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் – அதிலும் குறிப்பாக தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள்.//
//சீமானோ, மே 17 இயக்கமோ இப்படி தேவர் சாதிவெறி, வன்னிய சாதிவெறி என்று குறிப்பிட்டு கண்டிக்க முடியாததற்கு என்ன காரணம்? அப்படிக் கண்டித்தால் இவர்கள் திரட்டும் தமிழின உணர்வு கலைந்து விடும் என்று பயப்படுகிறார்கள். வன்னிய சாதி வெறி என்று கண்டித்தால். //
உங்களது கட்டுரைகளில் எத்தனை முரண்கள்…
கடந்த தேர்தல்களில் வன்னிய சமூக மக்களாலேயே புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சியை அந்த சாதி மக்களினுடைய அடையாளத்தினை வைத்து எதிர்க்கச் சொல்கிறீர்கள். பாமக அல்லது இது போன்றதொரு கட்சியானது பொதுவில் மக்களிடத்தில் இயல்பிலேயே இருக்கும் சாதிய மனோபாவத்தினை பயன்படுத்தியே அல்லது கூர்மைபடுத்துவதன் மூலமே தனது வலிமையை தேர்தல்களில் பெருக்கிக்கொள்ள விரும்புகிறது.. இந்த அடிப்படையிலேயே இப்பிரச்சனைகளை அணுகி பாமக போன்ற சாதிய கட்சிகளை எதிர்க்கமுடியும். இளவரசன் என்கிற ஒற்றை நிகழ்வு பல நூறு இளவரசன், திவ்யாக்களை சமூகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டி இருக்கிறது என்றால் பிரச்சனை பாமகவுடன் முடியவில்லை. பாமக மேலும் மேலும் மக்களால் புறக்கணிக்கப்பட்டாலும், இப்பிரச்சனை சமூகத்தின் மையத்தில் இருக்கும். நீங்கள் சொல்வதைப்போல பாமகவின் ஆதரவு தளமற்ற தேவர் சாதி மக்களிடத்தில் இவர்களது சாதிவெறிக்கு ஆதரவு இருக்கிறது எனில் இதை வன்னிய சாதிவெறி என்று மட்டுமே எப்படி குறிப்பிடமுடியும்.
இதில் பாமகவினை மே17 இயக்கம் அச்சம் காரணமாக எதிர்க்கவில்லை என அவதூறு பேசுவது நேர்மையான விவாதத்திற்கு வழிகோலாது. மாறாக முக நூல்களில் சாதிவெறியன்கள் பதியும் மூன்றாந்தர வாசகங்களாகவே இதைப் பார்க்கமுடிகிறது. அச்சம் அச்சமின்மையை வைத்து யாரும் அரசியல் செய்வதில்லை.
”வன்னியகுல சத்திரியர்” என்றதன் பார்ப்பனிய அர்த்தத்தினை மே 17 கேள்வி எழுப்பி அதனூடாக இங்குள்ள so-called சத்திரிய வன்னியர்கள் புறக்கணிக்க முடிவெடுத்து சொன்னபோதும், நினைவேந்தல் நிகழ்வில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் இதுவரை இரண்டுமுறை நிகழ்ந்தது. சாதிப்பற்று காரணமாக அமைப்பிலிருந்து ஒருசிலர் வெளியேற்றப்பட்டதும், பின்னர் அவர்களும், உங்களைப் போன்றே அவதூறுகளை பரப்பியது நிகழ்ந்தாலும் சமரசம் செய்துகொள்ளப்படவில்லை
(ஈழத்தமிழர் நினைவேந்தல் யாருக்கான நிகழ்வு என்ற அரசியல் பொருளைப் புரிந்து கொள்ளாத ம.க.இ.க விற்கு அதில் பெரும்திரளாக மக்கள் திரள்வது தான் பிரச்சனைபோலும். நீங்கள் சொல்வதைப்போன்றே பா.ம.க.வினை ஆதரிக்காத, சாதிவெறியை ஏற்றுக்கொள்ளாத வன்னியர்’களும் கலந்து கொள்கிறார்கள். பா.ம.க.வின் சத்திரிய சொல்லாடலை நாங்கள் எதிர்த்த பிறகும் வந்து கலந்து கொள்ளவே செய்கிறார்கள். அவர்களை எல்லாம் விரட்டிவிட வேண்டுமென்று சொல்கிறதா ம.க.இ.க. என்று தான் புரியவில்லை? சுவரொட்டி பற்றி நீங்கள் விமர்சனம் எழுப்பி இருந்தால், தவறு இருக்கும்பட்சத்தில் அதை சுயவிமர்சனத்தோடு ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால் ஒரு கட்டுரையாக வன்மத்தினையும், ஆதாரமற்ற கருத்தியல் கட்டமைப்பையும் வைப்பது எந்தவகையில் புரட்சிகர அரசியல் பண்பாடாகும்?
ஒரு சுவரொட்டியினூடாக சமரசவாதிகளாகவும், சாதியத்தினை ஆதரிப்பவர்களாகவும், பா.ம.கவினை எதிர்க்கத் திரணற்றவர்களாகவும் மே 17 இயக்கத்தினை சித்தரிக்க முடியும் என்றால், 2010 செப்டம்பரில் காசுமீரப் போராட்டம் தொடர்பான புதிய ஜனநாயகக் கட்டுரையில் “இந்திய ராணுவமே வெளியேறு” என்று வெளியிட்ட கருத்துப் படத்தினை வைத்து “ஏன் ம.க.இ.க ‘இந்திய அரசே வெளியேறு’ என்று சொல்லவில்லை” என்று உங்களை காசுமீர விடுதலைக்கு எதிரானவர்களாக நான்கு பக்க கட்டுரை எழுதிவிட முடியும். இவ்வளவு ஏன் அந்தக் கட்டுரையை முடிக்கும் போது http://www.vinavu.com/2010/09/15/kashmir-army/
indian-army-get-out
,// போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.// என்று சொல்கிறீர்கள்.
இந்த ஒரு ‘முசுலீம் தீவிரவாதம்’ வாசகம் அச்சு அசலாக இந்திய – இந்துத்துவ வார்த்தைப் பிரயோகமாகவே இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லி, உங்களது நீண்டகால காசுமீர் விடுதலை ஆதரவு நிலைப்பாட்டினை மறைத்து, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் ஆதரவாளராக காட்டிவிடலாமா?
சுவரொட்டி மட்டுமே மே 17 கருத்து தெரிவித்த வெளியல்ல. தொகுத்துப் பார்க்காமல் முன்முடிவுகளுடன் ஒரு இயக்கச் செயல்பாட்டினை குறை சொல்ல வேண்டுமென்றால் ம.க.இ.க.வினரையும் அவ்வாறு எளிமையாக விமர்சித்து பல நூறு கட்டுரைகளை எழுதிச் செல்லமுடியும். கட்டுரை எழுத நாங்கள் இங்கு வரவில்லை.
உங்களைப் போன்றதொரு நூற்றுக்கணக்கான உறுப்பினர் கட்டமைப்பும், பரந்துபட்ட அமைப்பு பலமும் இருக்கும் அமைப்புகள் எங்களைப் போன்றதொரு அமைப்பிடம் முரண்படுவதில் அரசுக்கு லாபம் என்பது அனைவருக்கும் தெரியும். ‘சாதியத்தினை எதிர்க்கிறேன், இது தப்பு’ என்று சொல்லக் கூடிய ரசிகர் மன்றத் தலைவராக இருந்தாலும் அவரையும் இணைத்து அரசியல்படுத்தி ஒரு பரந்த கூட்டுச்செயலையே விரும்புகிறோம் நாங்கள்.
பா.ம.க.வினர் இளவரசன் கொலைக்காக தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் எள்ளளவும் மாற்றுக் கருத்து இல்லை. இதை பல்வேறு தளங்களில், ஊடகங்களில் பதிவும் செய்திருக்கிறோம். இளவரசன் கொலை செய்யப்படுமளவு நிகழ்ச்சி நிரல்களை நடத்த உதவிய அரசா இதை நிறைவேற்றப்போகிறது என்பதுவே அடிப்படைக் கேள்வி. அந்த அரசினை கேள்விக்குள்ளாக்காமல் பா.ம.க.வினை மட்டுமே எதிர்க்கச் சொல்லி அரசினை காப்பாற்றப் போகிறோமா? (‘அரசே முதல் குற்றவாளியென்று’ ம.க.இ.க.வின் சென்னை ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, வழக்கறிஞர் ராஜூ குறிப்பிட்டு இருக்கிறார்கள்http://www.vinavu.com/2012/12/07/hrpc-arpattam-for-dharmapuri-report/ ).
இச்சம்பவத்தில் கோரிக்கையை நடைமுறையாக்குவதும், அரசை கேள்விக்குள்ளாக்குவதும், சாதிய மோதலூடாக உழைக்கும் மக்களைப் பிரித்து திசைதிருப்பி என்.எல்.சி தனியார்மயம் போன்ற பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்புவதிலிருந்து தடுப்பதையும் இணைத்தே கூட்டு செயல்திட்டங்களும் அரசியல் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். பாமக என்கிற பாசிச அரசியல் ஆற்றலைப் புறக்கணித்து, தனிமைப்படுத்தி, தோல்விக்குள்ளாக்க வேண்டும் என்கிற அரசியல் வேலைத்திட்டத்திற்காக இணைந்து நின்று செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் பதிவு செய்து கொள்கிறோம். சாதிய முரண்களை தீர்க்க, சாதி வெறியாட்டங்களை எதிர்கொள்ள ஒரு வலுவான நீண்டகால திட்டத்துடனான கூட்டமைப்பு செயல்பாட்டினை நாங்கள் வரவேற்கிறோம். அதில் எங்களை முழுமையாக இணைத்து செயல்படவே விரும்புகிறோம். புரட்சிகர இயக்கங்கள், தலித்திய-பெரியாரிய இயக்கங்கள் இதை மிகச்சிறப்பாக செய்திருக்கின்றன/ செய்கின்றன. எனவே இவர்களுடனான கூட்டுசெயல்திட்டங்களை முன்னெடுப்பதே தமிழகத்தில் புரையோடி நிற்கும் சாதிய வன்மத்தினையும், இதை வளர்க்கும் அரசினையும்-அரசியல் கட்சிகளையும் எதிர்க்கக்கூடிய வலிமையை பெற்றதாக அமையும் என்று உறுதியாக நம்புகிறோம். அம்மாதிரியான செயல்திட்டத்திற்கு காத்திருக்கிறோம் என்று இச்சமயத்தில் வெளிப்படையாக பதிகிறோம். சாதி முரண்களை தீர்க்காமல் அல்லது வெல்லாமல் அரசியல் விடுதலைப் போராட்டம் முழுமையடையாது என்பதை உறுதியாக நம்புகிறோம்.
ஒருவேளை புரட்சிகர ஆற்றலாக தனித்தே ஒட்டு மொத்த பொறுப்பினையும் நீங்களே சுமந்து செயல்பட முடிவெடுக்கிறீர்கள் என்றால், இந்த சமூகத்தினை காக்கும் மாபெரும் பணிக்காக உங்களை வாழ்த்தி வழியனுப்புகிறோம்.
2009 இனப்படுகொலையின்போது உங்களது அனைத்து ஆற்றலையும் திரட்டி, விடுதலைப்புலிகள் மீது இந்தியா நடத்திய போரினை தடுத்து நிறுத்த இந்தியாவின் புரட்சிகர அரசியல் சக்தியான ம.க.இ.க தனது சொந்த நாட்டின் அயோக்கியத்தனத்தினை எதிர்த்து களமாடி இந்தியாவினை உலகிற்கு அம்பலடுத்தியதும், இந்திய ராணுவத் தளவாடங்கள் அங்கே செல்லாமல் தடுத்து மக்கள் திரள் போராட்டங்களை இந்தியா முழுவதும் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளை கொண்டு நடத்தி தடுத்திட்ட செயல்பாடும் எங்கள் கண்முன் (!?) நிற்கிறது. கிட்டதட்ட நீங்கள் அடிக்கடி சொல்வது போல சிங்கள மக்களையும் இணைத்து தமிழீழ மக்கள் விடுதலை போராட்டத்தினை நடத்த வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்துவது போல, இந்திய அரசின் தமிழீழப் போரினை தடுக்க, இந்தியா முழுவதும் உள்ள மலையாள, தெலுங்கு, கன்னட, மராத்திய, குஜராத்திய, காசுமீர, வங்காள, பீகாரி உள்ளிட்ட தேசிய இனமக்களை அணிதிரட்டி இந்தியாவின் பயங்கரவாதத்தினை பின்னுக்குத் தள்ளிய உங்களது அரசியல் நிகழ்வுகளையும் கவனித்து (!?) அதற்கான நன்றியுடனேயே நாங்கள் இன்றும் இருக்கிறோம். நீங்கள் இவர்களை இணைத்து இந்தியாவின் விரிவாதிக்கத்தினை பின்னுக்கு தள்ளியதைப் போல தமிழீழ மக்களும் அதே நேரத்தில் சிங்கள மக்களை இணைத்துக்கொண்டு சிங்கள அரசினை பின்னுக்கு தள்ளாததாலேயே தமிழீழப் படுகொலை நிகழ்ந்தது என்கிற துயரம் உங்கள் நெஞ்சினை அடைத்துக் கொண்டிருக்கிறது என்பதையும் அறிவோம். சிங்கள மக்கள் அளவிற்கு ஜனநாயக அரசியலை தமிழீழ மக்களும் கற்றுக்கொள்ள நீங்கள் ஆவண செய்யுமாறு ஒரு வேண்டுகோளையும் தாழ்மையுடன் இத்தருணத்தில் முன்வைக்கிறோம்.
உங்களது 35 ஆண்டுகால அரசியல் பணியை நன்கு அறிந்த நாங்கள், புதிய ஜனநாயகம்/வினவு கட்டுரைப் புரட்சிகளோடு நின்றுவிடாமல், இன்னுமொரு இளவரசன் சாவு இல்லாத தமிழ்ச் சமூகத்தினை உண்டாக்கிடுவீர்கள் என்று மிக மிக உறுதியாக நம்புகிறோம். பா.ம.க.வினை எதிர்த்து தனித்து நின்று களமாட நீங்கள் முடிவெடுத்த வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் உங்களை வாழ்த்தி வழியனுப்ப எங்களுக்கு அனுமதி தாருங்கள். திருவரங்கம் ஆலய நுழைவு, தாமிரபரணி கொக்கொ கோலா, போபால் விசவாயு விபத்து என்று தொடர்ச்சியான போராட்டத்தினை இது நாள்வரை கட்டமைத்து போராடிக் கொண்டிருக்கும் நீங்கள் இதையும் அவ்வாறே மேற்கொள்வீர்கள் என நம்புகிறோம். முத்துக்குமார் தியாகம், தமிழினப் படுகொலை, செங்கொடி தியாகம் என நடந்தவை அனைத்தும் எமது மாற்று அரசியல் தோல்வியின் குறியீடுகளாகப் பார்த்து சுயவிமர்சனத்தோடு ஆய்விற்குட்படுத்தும் அரசியலை நாங்கள் நம்புகிறோம். அதுவரை நாங்கள் செய்யும் பிழைகளுக்கு எளியவராகிய எங்களை மன்னித்தருள்வீராக. 
– மே பதினேழு இயக்கம்

Leave a Reply