கடந்த வருடம் டிசம்பர் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை ஜேர்மனியில் உள்ள பிரெமன் நகரில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது! இத் தீர்ப்பாயத்திற்கு மே17 இயக்கத்தின் சார்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி அவர்களும் அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. உமர் அவர்களும் நேரடியாகச் சென்று முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை சம்மந்தப்பட்ட பல ஆதாரங்களை வழங்கியிருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வாதாரங்கள் பற்றியும், நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் அம்சங்கள் பற்றியும் போர்க்குற்ற விசாரணை செய்யப்பட்டால் தமிழர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றியும் மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. உமர் அவர்கள் திசைகாட்டி இணையத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.
◆ ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசும் அதன் இராணுவமும் சேர்ந்து நடத்திய இனப் படுகொலை, மனித உரிமை மீறல்கள் குறித்து மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பாயத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி இலங்கை அரசு மீது சர்வதேச நாடுகள் அழுத்தங்கள் கொடுக்குமா? அல்லது எப்போதும் போலவே பல காரணங்களைச் சொல்லி இலங்கை அரசு தப்பித்துக் கொள்ளுமா?
மக்கள் தீர்ப்பாயத்தின் வேலை என்பது குற்றவாளிகள் தப்பிக்கிறார்களா இல்லையா என்பதை கண்காணிப்பது அல்ல. சர்வதேச நாடுகள் சரியாக அணுகாத விடயங்களைக் கவனத்தில் எடுத்து அந்த விடயம் சரியான திசையில் செல்ல கருத்துருவாக்கம் செய்வது தான் அவர்களது வேலை, அதை அவர்கள் சரியாக செய்திருக்கிறார்கள். இவர்களுடைய தீர்ப்பை ஐநாவின் மனித உரிமைகள் அவையிலும் வரும் மார்ச் மாதத்தில் சமர்ப்பிக்கப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். வழக்கம் போல இந்தியா இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகல் நமக்கு எதிரான நிலைபாட்டையே எடுக்கும் என்பது நமக்கு தெரிந்த விடயம் தான், ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தின் மூலம் அமெரிக்காவை இறங்கி வரவைத்ததை போல் இந்த ஆண்டும் தமிழகத்தில் எழுச்சியான போராட்டம் நடைபெற்றால் இந்த விடயம் சரியான பாதையில் பயணிக்க வாய்ப்பிருக்கிறது.
◆ முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது இனப்படுகொலை என்று மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ள நிலையில் அமெரிக்கா போர்க்குற்ற விசாரணை கொண்டுவந்தால் அது இலங்கை அரசை எப்படி ஆட்கொள்ளும்?
இந்த போர்குற்ற விசாரணை என்பது இலங்கை அரசை ஆட்கொள்வதற்காக கொண்டுவரப்படுவது இல்லை மாறாக அவர்களை காப்பாற்றும் நோக்கத்துடனேயே கொண்டுவரப்படுகிறது. இலங்கை அரசாங்கத்திற்கு தெளிவாகத் தெரியும் இன்னும் சில ஆண்டுகளில் போர்குற்றத்திற்கான சர்வதேச விசாரணை வரப்போகிறதென்று, அதனால் இலங்கை அரசாங்கம் தனது ராணுவத்தின் முக்கிய தளபதிகளை இந்த உதாரணத்திற்கு 58 படையணியின் தளபதி சர்வேந்திர சில்வாவை ஐநாவின் அமைதிகாப்புப் படையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பின்னர் பல்வேறு பொறுப்புக்கு மாறிக்கொண்டிருக்கிறார். இவருக்கு இராஜதந்திரப் பாதுகாப்பு இருக்கிறது. அதனால் இவர்களை போர்குற்ற விசாரணை என்பது எந்தவித நெருக்கடியையும் ஏற்படுத்தாது என்பது இலங்கை அரசாங்கத்திற்கு தெரியும். மேலோட்டமாக பார்த்தால் இலங்கைக்கு அழுத்தம் போல் தெரியலாம் . ஆயினும் இது இலங்கைக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்த போவதில்லை என்பதை உறுதியாக சொல்லலாம். அமெரிக்கா ,இலங்கையை அரசை மிரட்டி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக மட்டுமே போர்க்குற்ற விசாரணை என்ற மாயையை கொண்டு வருகின்றது என்பது சர்வதேசத்துக்கும் தெரியும் , இலங்கை அரசுக்கும் தெரியும் .தமிழர்கள் நாமும் இதனை தெளிவாக புரிந்து காய்களை நகர்த்த வேண்டும் .
◆ மக்கள் தீர்ப்பாயத்தின் அறிவிப்பின் படி இது ஒரு மாபெரும் திட்டமிட்ட இனப் படுகொலைதான் எனில் அது இலங்கை அரசை எப்படி ஆட்கொள்ளும் எனவும் சற்று விபரிக்க முடியுமா?
இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை என்று வந்தால் நிச்சயம் இலங்கை அரசு பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகக்கூடும். அடிப்படையில் இனப்படுகொலைக்கு விசாரணை என்று வந்தால் அந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள் மட்டும் அல்ல அந்த இனப்படுகொலைக்கான காரணிகளும் விசாரிக்கப்படும், எனவே தற்ப்பொழுதைய அதிபரான ராஜபக்சே மற்றும் அவர்களது சகோதரர்கள் மட்டுமல்லாமல் இதற்க்கு முன்பு அதிபராக இருந்த ரணில், சந்திரிகா, ஜெயவர்த்தனா உள்ளிட்ட அனைவரின் மேலும் இந்த விசாரணை நடத்தப்படும், எனவே இவர்கள் அனைவரும் தமிழர்களுக்கு எதிரான நிலைபாட்டினை எடுத்திருக்கிறார்கள், தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள் என்பது தெரியவரும். எனவே இனப்படுகொலைக்கான விசாரணை என்பது இலங்கையின் ஆட்சியாளர்களை, கொள்கை வகுப்பாளர்களை, இந்த இனப்படுகொலையை நிகழ்த்தியவர்களை, அதற்கு துணைபுரிந்த நாடுகளை தண்டிப்பதற்கான வழிமுறையாக இருக்கும்.
◆ முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது போர்க்குற்றம்தான் போரில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என சில சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன அவ்வாறு விசாரணை என்று வருமெனில் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்து, சிறைவைக்கப்பட்டு சில வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்டு சில அச்சுறுத்தல்கள் காரணமாக இலங்கையில் வாழ முடியாமல் இலங்கை அரசிடமிருந்து தப்பி புலம்பெயர் நாடுகளில் பாதுகாப்பு கோரி வாழ்கின்ற விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களை அது பாதிக்குமா?
நிச்சயமாக பாதிக்கும் .போரில் ஈடுபட்ட இருதரப்பையும் விசாரிப்பது என்பது தான் போர்குற்ற விசாரணையின் அடிப்படை, எனவே இருதரப்பையும் விசாரிப்பது என்றால் நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல் இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்களை ஐநா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராஜதந்திர பொறுப்புகளில் இலங்கை அரசாங்கம் நியமித்திருக்கிறது. அவர்களை விசாரிக்க முடியுமே தவிர ராஜதந்திர பாதுகாபுகளில் உள்ளமையால் கைது செய்ய முடியாது, ஆனால் தமிழர் தரப்பில் , இலங்கை அரசின் தடுப்பில் இருந்து விடுதலையாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் முன்னாள் போராளிகள் , புலம்பெயர்ந்து வாழும் முன்னாள் புலி உறுப்பினர்கள் ,புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உள்ளிட்ட தமிழீழ ஆதரவாளர்களை விசாரணை என்ற பெயரில் கைது செய்ய முடியும், இதன் மூலமாக புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் ஈழத்திற்கு ஆதரவாக நடத்தப்படும் அனைத்து நகர்வுகளையும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்க முடியும் .
◆ இராணுவ அதிகாரிகள் தூதர்களாக நியமிப்பட்டுள்ளது இலங்கை தான் செய்ததை மறைமுகமாக ஒப்புக் கொள்வதாக ஏன் சர்வதேச நாடுகள் கருதக் கூடாது?
முடியாது ஏனெனில் இவர்கள் இந்த இனப்படுகொலையில் பங்குவகித்தார்கள் என்று இவர்கள் அனைவருக்குமே தெரியும், அமெரிக்கா தனது படைகளுக்கு தீவிரவாதத்தை ஒடுக்குவது எப்படி என்ற தலைப்பில் ஒரு பயிற்சியை அளித்தது அந்த பயிற்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்குபெற்றது 58 படையணியின் தளபதியாக இருந்து ஐநாவிற்க்கான அதிகாரியாக நியமிக்கப்பட்ட சர்வந்திர சில்வா. எனவே சர்வதேச நாடுகள் இவர்கள் செய்த இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் அறிந்து தான் இருக்கின்றனர். எனவே இந்த நாடுகள் இவர்களை காப்பாற்றும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவார்களே தவிர நிச்சயம் எதிராக செயல்பட மாட்டார்கள்.
◆ முள்ளிவாய்க்காலிலே நடைபெற்ற இனப் படுகொலையை இந்திய முன்னின்று நடத்தியதென பல்வேறு ஆதாரங்களை மக்கள் தீர்ப்பாயத்தில் மே – 17 இயக்கம் சார்பாக நீங்கள் அளித்துள்ளீர்கள் அந்த ஆதாரங்கள் எவ்வகையானது? அது இந்திய அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமா?
கண்டிப்பாக நிறுத்தும், இதுவரை இந்தியா இந்த இனப்படுகொலையில் பங்கெடுத்தது என்பது பல்வேறு தரப்பினருக்கு தெரிந்தே இருந்தாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத அளவில் இந்திய அரசாங்கம் செயல்பட்டு வந்தது. பல்வேறு அரசுகள் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டது என்பது வெளிப்படையாக தெரிந்திருந்தது, ஆனால் இந்தியா எந்தெந்த விதத்தில் செயல்பட்டது என்பது தெரியாமல் இருந்தது, இதனை தான் மே 17 இயக்கத் தோழர்கள் கடந்த நாலரை ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட்டு பல்வேறு ஆதாரங்களை அங்கே வெளியிட்டிருந்தோம். பல்வேறு விதமான ஆதாரங்களை அங்கே வெளியிட்டிருந்தோம் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒன்று இராணுவ ரீதியிலான உதவிகள் மற்றொன்று ராஜதந்திர ரீதியிலான உதவிகள். இராணுவ ரீதியிலான பயிற்சி என்பது ஆயுதங்கள் கொடுத்தது அவர்களுக்கு பயிற்சி அளித்தது, களத்தில் நின்று அங்கே நேரடியாக போரை நிகழ்த்தியது. இராஜதந்திர ரீதியிலான உதவிகள் என்பது, இந்த இனப்படுகொலையை நிறுத்தக்கோரி வந்த பொழுது அந்த அழுத்தங்களை தடுத்தது, போருக்கு பின் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஏற்படும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை மக்கள் தீர்ப்பாயத்தில் நாங்கள் வெளியிட்டிருந்தோம். இப்பொழுது முழுமையாக அவற்றை இங்கு சொல்லமுடியாது விரைவில் அந்த ஆவணங்களை பொதுமக்களின் மத்தியில் நாங்கள் வெளியிடுவோம் அப்பொழுது இந்திய அரசாங்கம் மிகப்பெரிய அழுத்தத்தை சந்திக்கும் என்பது எங்களது எதிர்ப்பார்ப்பு.
◆ இந்த இனப்படுகொலையில் இந்தியா இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் ஐநா பங்குபெற்றிருக்கும் சூழலில் இந்த போர்குற்ற விசாரணை நேர்மையாக நடைபெறாது என்று உணரமுடிகிறது.தீர்வை தரக்கூடிய அமைப்பான ஐநாவும் இந்த இனப்படுகொலையில் பங்குபெற்றிருப்பதால் அவர்களை தாண்டிக்க வழி ஏதும் இல்லை என்பதுடன் யாரிடம் தீர்வை எதிர்பார்க்க முடியும் என கருதுகின்றீர்கள் ?
ஒட்டுமொத்த ஐநாவும் இந்த இனப்படுகொலையில் பங்குபெற்றதா என்றால் இல்லை. ஐநாவில் உயர்பொறுப்பில் இருந்த பான்கிமூன், விஜய் நம்பியார், ஜான் ஹோம்ஸ் உள்ளிட்ட சில அதிகாரிகள் தான் இந்த இனப்படுகொலை போரில் நேரதியாக பங்கு பெற்றிருக்கிறார்கள், எனவே இவர்களை தவிர்த்து ஐநாவில் மிக நேர்மையாக இருக்கக்கூடிய பல அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆக இந்த ஐநா எனும் அமைப்பானது 1994 ருவாண்டா இனப்படுகொலைக்கு பின் சீர்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது போல் இப்பொழுது தவறு செய்த அதிகாரிகளை நீக்கி நேர்மையான அதிகாரிகளை கொண்ட அமைப்பாக மாறவேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பாக இருக்கிறது.இதற்காக தொடர் அழுத்தங்களை நாம் கொடுத்து கொண்டே இருக்க வேண்டும் .
◆ மக்கள் தீர்ப்பாயத்தின் விசாரணைகளின்படி அங்கு நடைபெற்றது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலைதான் என அறிவித்துள்ள நிலையில். இத்தீர்ப்பு சர்வதேச சமூகத்தில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா ?
இதற்கு முன்பு மக்கள் தீர்ப்பாயம் ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு அதற்கு தீர்ப்பினை வழங்கும்போது அது சர்வதேச அளவில் ஒரு கருத்தை உருவாக்கி இருக்கிறது உதாரணத்திற்கு முதன்முதலில் வியட்நாம் போரின் அமெரிக்கா படைகளின் அத்துமீறல்கள் குறித்து வெளிவந்த பிறகுதான் அமெரிக்கா அரசை பின்வாங்கச் செய்தது, இதுபோல் ஈழத்தை பொறுத்தவரை கூட 2010 தில் டப்ளினில் நடந்த தீர்பாயத்திற்கு பிறகு ஐநாவிற்கு ஒரு அழுத்தம் ஏற்பட்டு அதற்க்கு பின் தான் மூவர் குழு என்ற நிபுணர் குழுவை விசாரணைக்கு அமர்த்தியது. எனவே இதுபோல் இப்பொழுது ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
◆ தேசிய இனங்கள் பிரிந்து போவதற்கான உரிமையை ஐ.நா. வழங்குகிறது. அதன்படி, இந்த இனப்படுகொலைக்கு பின் ஈழத் தமிழர்கள் தனி நாடு அமைப்பதற்கான ஐநா ஒத்துழைக்குமா, அதற்கான நகர்வாக மே 17 இயக்கம் எவ்விதமான நகர்வுகளை மேற்கொள்ளும் ?
ஐநாவின் விதிகளில் அக்கவுண்டப்பிலிட்டி அதாவது பொறுப்பேற்பது என்பதற்கான விளக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள் அதாவது குற்றவாளிகளைத் தண்டிப்பது மட்டுமல்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கான தீர்வை அம்மக்களின் பங்களிப்போடு வழங்கவேண்டும் என்று தெளிவாக இருக்கிறது, இதனை 2010 இல் அமைக்கப்பட்ட மூவர் குழு மிகத்தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த அக்கவுண்டப்பிலிட்டி என்ற வார்த்தையை அமெரிக்கா பயன்படுத்தியிருந்தாலும் அது குற்றவாளிகளை தண்டிக்கவேண்டும் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தி இருக்கிறது. ஆனால் ஐநாவின் விதிகளில் இருக்கும் அக்கவுண்டப்பிலிட்டிக்கான அடிப்படையில் பொதுமக்களின் பங்களிப்போடு தான் இந்த விடயத்திற்க்கான தீர்வை வழங்கப்படவேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம். அதாவது ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை நோக்கித்தான் எங்களது நான்கரை ஆண்டு கால போராட்டங்களை கட்டமைத்து வருகிறோம். இப்பொழுது கூட வரும் பிப்ரவரி 12 அன்று முருகதாசன் நினைவுநாளில் உலகெங்கும் பல்வேறு இடங்களில் உள்ள ஐநா அலுவகங்களை முற்றுகையிட்டு ஈழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி போராட்டம் நடத்தவிருக்கிறோம்.
◆ உங்களுடைய மே17 இயக்கத்தின் சார்பாக உங்களின் செயற்பாடுகள் தமிழகத் தமிழர்களை மட்டுமல்லாது உலகெங்கும் வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மத்தியிலும் பெரும் நம்பிக்கையினையை உருவாக்கியிருக்கின்றது. குறிப்பாக மக்கள் தீர்ப்பாயத்தில் நீங்கள் வழங்கிய ஆதாரங்களையும் உங்களின் இன உணர்வு சார்ந்த செயற்பாடுகளையும் வைத்து நோக்குகையில் ஈழத்தமிழர்களின் மனங்களில் பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கும் இவ் வேளையில் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் போர்க்குற்ற விசாரணையில் உங்களின் நிலைப்பாடு எத்தகையதாக இருக்குமென கூற முடியுமா?
போர்குற்ற விசாரணை என்று வந்தால் முதலில் இதில் பாதிக்கப்படப் போவது யாரென்று தான் நாம் பார்க்கவேண்டும். இருதரப்பையும் விசாரிக்க வேண்டும் என்று இவர்கள் கூறினால் விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் செயல்பாட்டாளர்கள் ஆகியவர்களையும் விசாரிக்க வேண்டிவரும். ஏற்கனவே தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் இந்த விசாரணையின் மூலம் உலக நாடுகள் முழுவதும் புலிகள் இயக்கம் தடை செய்யப்படும் சூழல் ஏற்படும், இதன் மூலம் தமிழீழ அரசாங்கத்தின் நிர்வாக பிரிவில் பணிபுரிந்தவர்கள், புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்படும் சூழல் ஏற்படும். எனவே தமிழீழத்திற்கான ஆதரவாளர்கள் கைது செய்யப்பட வேண்டுமா என்பது எங்கள் முன்னிருக்கும் கேள்வி. இதனடிப்படையில் போர்குற்ற விசாணை என்று வந்தால் எங்கள் இயக்கம் மிகக்கடுமையாக எதிர்க்கும். இனப்படுகொலைக்கான விசாரணையை தவிர்த்து வேறு எந்த விசாரணையையும் எங்கள் இயக்கம் கடுமையாக எதிர்க்கும்.
◆ முள்ளிவாய்க்கால் யுத்ததினால் மிகவும் பாதிப்புக்குள்ளான மக்கள் இன்றும் கூட புனர்வாழ்வு இல்லாமல் மிகவும் வறுமையோடு வாழ்வினை நகர்த்தி வருகிறார்கள். இவர்களுக்காக நீங்கள் சர்வதேச மட்டத்தில் எவ்வாறு அழுத்தங்களைக் கொடுக்கப் போகிறீர்கள், உங்கள் மே17 இயக்கம் சார்பாக எந்த வகையிலான உதவிகளை நீங்கள் முன்னெடுக்கப் போகிறீர்கள்?
இந்த விடயத்தில் கூட அரசியல் தீர்வை தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஈழத்தில் புனர்வாழ்வு இல்லாமல், சரியான வாழ்வாதாரம் இல்லாம் அவதியுறும் சூழலில் இவை அனைத்தையும் சரி செய்வதற்கு இலங்கை அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் சிங்கள அதிகாரிகளையும், சிங்கள ராணுவத்தையும் தமிழர் பகுதிகளிலிருந்து வெளியேற்றி, தமிழர் தரப்பிலிருந்து ஒரு இடைகால நிர்வாக சபையை அமைக்க வேண்டும், இந்த தமிழர்களால் நிர்வாகிக்கப்படும் அமைப்பு தமிழர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு சர்வேதேச நாடுகளின் உதவியோடு செயல்பட வேண்டும், இப்படியான நிர்வாக சபை அமைக்க வேண்டும் என்று தான் நாங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக கூறிக்கொண்டிருக்கிறோம், இதனை சர்வதேச நாடுகளின் பார்வைக்கு எடுத்துச்செல்லும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்.
◆ நீங்கள் மே17 இயக்கம் தொடங்கி நான்கரை வருடங்களாகின்றன, இந்த நான்கரை வருடப் பயணங்களில் உங்கள் இயக்கம் சந்தித்த, சாதித்த அனுபவங்கள் பற்றிக் கூற முடியுமா?
நாங்கள் சந்தித்த சாதித்த விடயம் என்று கூறுவதைவிட எங்களுடைய செயல்பாடுகள் எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையே நாங்கள் பார்க்க விரும்புகிறோம். ஒவ்வொருமுறையும் ஈழ போராட்டத்தினை வேறு திசைக்கு மாற்ற சிலர் முயன்றபொழுது நாங்கள் தமிழீழ தமிழர்களின் அடிப்படை கோரிக்கையான தமிழீழத்திற்கு எதிரான நிலைபாட்டினை எதிர்ப்பதை அடிப்படையாக வைத்திருக்கின்றோம், இதன்மூலம் எங்களை பற்றி அவதூறு பரப்பியவர்கள் கூட இப்பொழுது எங்களை புரிந்துக்கொண்டு நாங்கள் முன்வைக்கும் கருத்தை, நாங்கள் செல்லக்கூடிய திசையை சரியானது என்று ஏற்றுக்கொண்டு எங்களுடன் பயணிப்பதை நாங்கள் எங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கின்றோம்.