பாலைவனமாகும் காவிரி டெல்டா – மீத்தேனின் அழிப்பு அரசியல்
நிலத்தின் அடி ஆழம் வரை, ஆழ் துளைகளிட்டு, கிணறுகள் அமைத்து, பாறைகளுக்கிடையிலும், நிலக்கரிகளுக்கிடையிலும் இருந்து மீத்தேன் எனும் வாயுவை எடுத்து வியாபாரம் செய்ய, பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் எனும் அடிப்படையில் கடந்த திமுக ஆட்சியில், குஜராத்தின் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்திடம் ஒப்பந்தம் பதிவாகியது. இது தேர்ந்தெடுத்த இடம் தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகளைத்தான். இந்த அழிவுப் பொருளாராதாரத் திட்டத்தினை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் தாய் தமிழகத்தில் இன்றும் நிகழ்ந்து கொண்டுள்ளது. இது ஒரு மக்கள் விரோத, விவசாய அழிப்புச் செயலென, டெல்டா வீதிகளில் போராடிய நிலையிலேயே தனது உயிரை இழந்தார், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள்.
இந்த மீத்தேன் குறித்தும், அதனின் அபாயங்கள் குறித்தும், இதனின் தமிழர் அழிப்புச் செயல்களை விளக்கியும் மீத்தேனின் அழிப்பு அரசியலை தோலுரிக்கிறது, நிமிர் வெளியீடாக, மே-17 இயக்கத்தின் தயாரிப்பில், சரவணன் தங்கப்பாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள, ‘பாலைவனமாகும் காவிரி டெல்டா’ எனும் ஆவணப்படம். இது சமீபத்தில் தஞ்சையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையில் வெளியிடப்பட்டது.
போராட்டக் களத்தில் உயிர் துறந்த போராளி.நம்மாழ்வார் அவர்களுக்கு இதனை சமர்ப்பித்தலோடு படம் ஆரம்பமாகி, போராட்டக் களத்தில் நம்மாழ்வார் அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கும் ஒரு காணொளியோடு படம் நிறைவைப் பெற்றுள்ளது.
“நீரின்றி அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே!
நீரும் நிலனும் புணரீ யோரீண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே”
எனும் புறநானூற்று வரிகளோடு தனது திரையை விரிக்கிறது படம்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் மீத்தேன் திட்டத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் ஒரு காணொளியும், குஜராத் ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனத்தின், பிரசாந்த் மோடியின் இத்திட்டம் குறித்தான பேச்சோடும் படம் மீத்தேனின் செயல் திட்டங்களையும், இன்னபிற முழுமைகளையும் பேசத் தாவுகின்றது.
நிலக்கரி இடுக்கிலிருந்து மீத்தேன் எடுக்கும் ‘சி.பி.எம்’ முறைதான் இங்கு பயன்படுத்தப்படப் போகின்றது. முதலில் 6000-அடிகளுக்கு ஆழ் துளைகளிட்டு, அதனிலிருந்து பல்லாயிரம் அடிகளுக்கு பக்கவாட்டுத் துளைகளை இடுவர். இந்தத் துளைகளின் வழியே நச்சு இரசாயனங்களை மிக அதிக அழுத்தத்தோடு செலுத்தி, பாறைகளை வெடிக்கச் செய்து, அதிலிருந்து வெளிப்படும் மீத்தேன் இந்த இரசாயனங்களோடு கலந்து குழாய் வழியே வெளியேறும். இதிலிருந்து மீத்தேனை பிரித்து எடுப்பர்கள் என்ற வண்ணம் இந்த திட்டத்தின் செயல் வடிவத்தினை சற்று சுருங்கச் சொல்லிவிட்டு அப்படியே இதனின் அபாயங்களை மெல்ல மெல்ல விவரிக்கின்றது திரை.
கும்பகோணம் வட்டத்தில்: கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்வாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி, விட்டலூரும்,
குமாரமங்கலம் வட்டத்தில்: நாச்சியார் கோவிலும்,
திருவிடை மருதூரில்; மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டையும்
ஒரத்தநாட்டு வட்டத்தில்: குலமங்கலத்திலும்,
குடவாசலில்;குடவாசல்,சித்தாடி,மேலப்பாளையம் மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக் குடி, பத்தூர், மஞ்சக்குடி, வடவேர், செல்லூரிலும்,
வலங்கைமானில்; சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தபுரம், கீலவடமல், ராசேந்திர நல்லூர், நார்த்தாங்குடி, கோயில்வெண்ணி, ஆதனூர் கண்டியூரிலும், நீடாமங்கலத்தில்; பூவனூர், கீழவாந்தச்சேரி, அரிச்சபுரம், அனுமந்தபுரம், அன்னவாசல், காளாச்சேரியிலும், மன்னார்குடி வட்டத்தில்; கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவந்தூர், சவளக்காரன், மூவர் கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடும் ஆகிய பகுதிகளில்தான் மீத்தேன் எடுக்கும் திட்டம் முதலாவதாக செயல்பட உள்ளதாகவும், இது தற்சமயம் ஐம்பது கிணறுகள் எனவும், வருங்காலத்தில் இரண்டாயிரம் கிணறுகள் தஞ்சை டெல்டா பகுதிகளில் உருவாக்கப்பட உள்ளதாகவும் புள்ளி விவரங்களை விவரித்து ஆவணப்படுத்துகிறது காட்சிகள்.
இதற்காக காவிரி மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழகத்தின் நீர் நிலையங்களிலிருந்தும் நீர் உறிஞ்சப்படும் எனவும், இது தொடர்ந்தால் நீர் ஆதாரம் முற்றிலும் அழிந்துபோகும் அபாயம் உள்ளதென நீரின் அழிவை பலவிதமான காட்சி ஆதாரங்களோடு சொல்கிறது. ஒரு மீத்தேன் கிணற்றிலிருந்து மீத்தேன் எடுக்க மட்டும், 400-டேங்கர் லாரி மணலும், நீரும் வேண்டுமெனவும், இவைகளை எப்படி டெல்டா பகுதிகளில் மட்டுமே எடுக்க முடியுமெனவும், ஒன்றிற்கே இந்நிலை எனில் இரண்டாயிரம் எனில் தாய் தமிழக இருக்குமா என்கிற நியாயமான கேள்விகளையும் படம் முன்வைக்கிறது. நீருக்கு இந்நிலை எனில் மணலுக்கு என்ன நிலை என விளக்குகின்றது. இதுமட்டுமல்லாது மீத்தேன் எடுக்க வேண்டுமெனில் தொடர்ந்து நிலத்தடி நீரை வெளியேற்றியாக வேண்டும் என்பதனால், நிலத்தடி நீர் குறைந்து தரை கீழிறங்கும் அபாயமும், கட்டிடங்கள் இடிந்து, கடலோர கிராமங்கள் கடலில் கலக்கும் கோரமும் நிகழும் எனவும் எச்சரிக்கிறது ஆவணமாக.
மீத்தேன் எடுத்து நிலத்தையும், மண்ணையும் பாழ்படுத்தி பாலைவனமாக்குவது ஒருபுறமெனில், இதில் பயன்படுத்தப்பட்ட நச்சுக் கழிவுகளை வெளியேற்றி எப்படி பாதுகாக்கப் போகிறார்கள் என்ற கேள்வியோடு, இதற்கு இதுவரை எந்த நாடும் சரியான வழிமுறையை கையாளவில்லை எனவும், இதுபோன்ற நச்சுக்கள் நீர் ஆதாரங்களோடு கலந்து, மக்கள் பயன்பாடுகளுக்கு குழாய் வழியே வெளியேறி பலவிதமான அழிவுகள் நிகழும் எனவும் சொல்கிறது. இப்படித்தான் அமெரிக்காவில் ஒருநாள் அதீத மழை பெய்து இந்த நச்சுக் கழிவுகளெல்லாம், பலவாறு கலந்துவிட்டன. இதனால் அங்கு பலருக்கும் புற்றுநோய், பிறவிக் கோளாறுகள் தொற்றிக் கொண்டன. இந்த மீத்தேனானது எளிதில் தீப்பற்றக் கூடியது. ஆகையால் மக்களின் பயன்பாட்டு நீரில் இது கலந்தால், நிலைமை என்னவாகும் என்ற வினவலோடு, மீத்தேன் கலந்த நீரில் தீப்பற்றி எரிவதை சோதனை செய்து நிரூபிக்கும் காட்சிகள் திரையாகின்றன.
இப்படி மணல், நீர் இரண்டையும் கடந்து, இத்திட்டத்திற்க்காக நிலத்தின் குறுக்கே பதிக்கப்படும் குழாய்களைப் பற்றி சொன்னால் அதன் அபாயம் நீளும் எனவும், ஒருமுறை தனது நிலத்தில் குழாய் பதிக்க அனுமதித்துவிட்டால், அப்புறம் ஆயுள் முழுவதும் குழாயை நிலத்தார்தான் பாதுகாக்க வேண்டும், இதில் சிறு கோளாறு என்றால் கூட அத்தனை பழியும் நிலத்தின் உடைமையாளர் மீது சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை முதல் தூக்குவரை இடுவதற்கு சட்டமந்தா உள்ளதாகவும் காட்சிகளில் எடுத்துப் பேசப்படுகிறது.
இதெல்லாம் மீத்தேன் திட்டத்தின் அபாயங்களாகப் பார்க்கப்பட்டாலும், இவைகளையெல்லாம் இந்த அரசு ஏன் ஆதரிக்கின்றது என்கிற பார்வையை இன்னும் கூர்திட்டி இது ஒரு தமிழின விரோதச் செயலென விளக்கமளிக்கிறது. இந்தத் திட்டம் குறித்த ஆய்விற்காக தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் எம்.எஸ்.சுவாமிநாதனும் உள்ளாராம். இவர்தான் நமது விவசாயத்தின் பாரம்பரிய விதைகளை வெளிநாடுகளுக்கு விற்று, நவீன அமோக விளைச்சலென்று சொல்லி நவீன ரக விதைகளைப் புகுத்தியவராம். மேலும், மீனவர்களின் வாழ்வாதரங்களுக்கு எதிராக மசோதா தாக்கல் செய்தது, கடலோர நிலப்பரப்பை சூறையாடுவது, 2009-இறுதி ஈழப்போரில் வடக்கின் வசந்தம் என குறிப்பிட்டு இராஜபக்சேவிற்கு துணைநின்ற இராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் எனவும் படம் விவரித்து, இப்படிப்பட்ட தமிழின எதிர்ப்பு நிலை கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆய்வை எப்படி நம்ப முடியும் ஆகவே, இந்த விடயத்தில் தமிழக அரசின் முதலமைச்சரையும் சந்தேகிக்க உள்ளது எனக் கூறியதோடு, தமிழக முதல்வர் சென்ற ஆட்சியின்போது தேர்தல் பிரச்சாரத்தில் மீத்தேனை எதிர்த்துப் பேசியதும், தான் இவைகளைத் தடுப்பேன் எனக் கூறியதையும் காட்சிப்படுத்தியுள்ளனர். இதேபோல கூடங்குளம் எதிர்ப்புப் போராளிகளை அழைத்துப் பேசி தான் இவைகளை ஆதரிக்கமாட்டேனெனக் கூறியதையும், பின்னர் ஆட்சிப் பொறுப்பில் வந்தவுடன் அப்போராளிகளை ஒதுக்கியதனையும் நினைவிற்குள் கொண்டுவந்து, துணைக்கு இடிந்தகரை போராளியான சுந்தரி எனபவரின் கருத்துக்களையும் பதிவு செய்துள்ளனர்.
எப்படி தற்போதைய முதல்வரை கேள்வி எழுப்பியுள்ளனரோ, அதேபோல திட்டத்தினை கொண்டுவந்த திமுக அரசையும், காங்கிரஸ் அரசையும், இதற்கு எதிர்விப்பு தெரிவிக்காது மெளன ஆதரவிலிருக்கும் பாஜக-வினையும் நம்புவதற்கு இல்லை எனவும், மாற்றை நயம்பட சொல்லிச் நகர்கிறது. அதேசமயம் ஆளும் தற்போதைய அதிமுக அரசினை இவர்கள் சாடியுள்ள விதம், மிகவும் மென்மைப் போக்காக உள்ளது என்பதை குறை விமர்சனத்தில் சேர்க்கலாம். டி.ஆர்.பாலு, எம்.எஸ் சுவாமிநாதன் போன்றோரை பகிரங்கப்படுத்தியயவர்கள், ஏன் முதலமைச்சர்.ஜெயலலிதா அவர்களை மட்டும் மென்மையாகக் கடந்து போகின்றனர் என்பது மனது எழுப்பும் கேள்வி.
தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் பலவிதமான அழிப்புச் செயல்களால் போராட்டக்காரர்கள் ஒன்றிலிருந்து ஒன்று தாவிக் கொண்டே போக, முந்தியவைகள் மறந்துவிடப்படுகின்றன. அரசும் திசை திருப்புவதின் மூலம் தனது மக்கள் விரோதத் திட்டங்களை செயல்படுத்திவிடுகின்றது. ஆனால் இந்த இடத்தில் படக் குழுவினர் ஒரு பொதுக் குறீயீட்டை, ஈழ இறுதிப் போரில் மக்கள் கொல்லப்படும் காட்சிகளையும், பாலச்சந்திரன் கொல்லப்பட்டக் காட்சிகளையும் சொல்லுவதன் மூலம் முன்வைக்கின்றது. அது இவைகளுக்கெல்லாம் தீர்வு தனித் தமிழர் தேசம் என்பதாக உள்ளது. இடிந்தகரையானாலும் சரி, மீத்தேன் ஆனாலும் சரி இது தமிழர் அழிப்பு செயல்கள்தான் என படத்தில் சிலரின் கருத்துக்கள் வலுப்பெற்று சொல்லப்படுகின்றது. தங்கள் நிலங்களை இழந்து, வறுமையில் மாளப்போகும் மக்களுக்கு அரசு மாற்று என்ன வைத்துள்ளது எனவும், ஈழத்தில் எப்படி கொன்று குவித்து விரட்டி அடித்தார்களோ, அதேபோலத்தான் இங்குள்ளவர்களை வாழ வழியற்றவர்களாக்கி வெளியேற்றப் போகிறார்கள் என்கிற ஒன்றையும் படத்தின் காட்சிகள் முன்வைக்கின்றன.
ச.காந்தி (தமிழ்நாடு மின்பொறியாளர் சங்கம்), த.ஜெயராமன் (மீத்தேன் எதிர்ப்பு கூட்டியக்கம்), வ.சேதுராமன் (இணைச் செயலாளர் தமிழ்நாடு அறிவியல் குழுமம்), கணேச மூர்த்தி (டெல்டா புலிகள்), திருநாவுக்கரசு (தாளாண்மை இயக்கம்), ரா.லெனின் (பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்), பாரதிச் செல்வன் (மருத்துவர்), சுந்தராஜன் (பூவுலகின் நண்பர்கள்), பெ.மணியரசன் (தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி), உமர் (மே-17 இயக்கம்), குடந்தை அரசன் (விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி), போன்றோர் இந்த ஆவணப்படத்தில் தங்களின் மீத்தேன் எதிர்ப்புக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் ஒரு பத்திரிக்கை பேட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கான வீரியமான காட்சியாக இது அமைந்துள்ளது.
வேங்கடப் பிரகாசின் பின்னணியில், விஜயகுமார் மற்றும் முத்துக்குமாரின் படத்தொகுப்பில், நவீன் பவுல்ராஜ்ஜின் பாடலில், யாழ் பிரபாகரனின் இசையில், ரூபன் லோபஸின் ஒளிப்பதிவில், அருண்குமார், மற்றும் மதரா.கழுகுமலையின் கருத்தாக்கத்தில், நிமிர் வெளியீட்டில், மே-17 இயக்கத்தின் சார்பில், சரவணன் தங்கப்பாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது இந்த ஆவணப்படம்.
40-நிமிடங்கள் காட்சி ஓடுகிறது. இறுதியில் உத்வேகமான பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படத்தில் பலவிதமான அரசியல்கள் பேசப்படுகிறது. அதேசமயம் சொல்ல மறந்த கதையாக சிலவைகள் விடப்பட்டும் உள்ளன. ஆனாலும் அதீதம் சொல்ல வேண்டியவைகள் இடம்பெற்றுத்தான் உள்ளன.
மீத்தேன் எதிர்ப்புப் போராட்டக் களத்தில் இந்த ஆவணப்படம் நிச்சயம் ஒருவித போராட்டக் கருவியாகப் பயன்படும் என்பதில் மாற்றமில்லை. இதற்காக இக்குழுவினர் அதிக சிரமங்களை மேற்க்கொண்டும், காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு மீண்டது போன்ற வலிகளையும், பொருளாதார நலிவுகளையும், எட்டு மாத காலச் செலவுகளையும், மே-17 இயக்கத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் இப்பட வெளியீட்டின் போது குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நல்ல போராட்ட யுக்திகளை சிரமேற்று செய்திருக்கும் படக் குழுவினருக்கு பாராட்டுக்கள்!
– ஷஹான் நூர், கீரனூர்.
http://keetru.com/index.php/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/26735-2014-06-23-23-56-26