சமீபத்தில் இலங்கை மீதான ஐநாவின் விசாரணை அறிக்கையை ஆறுமாத காலம் தள்ளிவைப்பதாக ஐநாவின் மனித உரிமை ஆணையம் அறிவித்திருந்தது. ஏன் ஐநா அவை இப்படி ஒரு முடிவை எடுத்தது.இந்த காலதாமத்திற்கு பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன்
ஈழம் – சர்வதேச சதி வலை – ஐநா அறிக்கை தாமதமும் அதன் பின்னணியும் என்று மே 17 தோழரின் கட்டுரை கீற்றுவில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஈழத்தமிழரகளை வைத்து சர்வதேச நாடுகள் ஆடும் வஞ்சக ஆட்டத்தையும் அதன் நோக்கத்தையும் பாதிக்கப்பட்ட தமிழர்களாகிய நாம் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதுவே நம்மை சமரசமற்ற அடுத்த கட்ட போராட்டத்திற்கு அழைத்துச்செல்லும்.
ஆகவே தோழர்கள் அவசியம் இதனை படிக்கவும்.
ஈழம் – சர்வதேச சதி வலை – ஐநா அறிக்கை தாமதமும் அதன் பின்னணியும்
தமிழனுக்கு துரோகம் இழைக்கவேண்டுமென்று சொன்னால் உலகநாடுகள் பலவும் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும், பல நாடுகளினால் உருவாக்கப்பட்ட ஐநா உள்ளிட்டவையும், மனித உரிமை அமைப்புகள் என்று சொல்லப்படுகின்ற குறிப்பாக சர்வதேச மன்னிப்பு சபை (AMNESTY INTERNATIONAL), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HUMAN RIGHTS WATCH) சர்வதேச நெருக்கடி சபை (INTERNATIONAL CRISIS GROUP) போன்ற அமைப்புகளும் ஒர் அணியில் திரட்டு அதை செவ்வனே செய்து முடிக்கும். இதைத்தான் நாம் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்படும்போது பார்த்தோம். அதை மீண்டும் ஒருமுறை சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு நீருபித்து காட்டியிருக்கிறது.
கடந்த 2014ஆண்டு ஐநா அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் இறுதி கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறலை விசாரிக்க ஐநாவின் மனித உரிமை மன்றம் மார்டி அத்திசாரி (Martti Ahtisaari) என்பவர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது.இந்த குழுவின் அறிக்கையை ஐநாவின் மனித உரிமை மன்றம் வரும் 2015’ மார்ச் மாதம் ஐநா அவையில் நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும். ஆனால் அந்த அறிக்கையை இப்போது வெளியிடப்போவதில்லை என்றும் ஆறு மாதகாலம் தள்ளி வைக்கபோவதாகவும் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசேன் (Zeid Ra’ad Zeid al-Hussein) தற்போது தெரிவித்துள்ளார்.
இது தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றவாளிகளை தப்பிக்க வைக்க நடக்கும் முயற்சியாகத் தான் பார்க்க முடியும்.ஐநாவின் இந்த செயல் என்பது ஏதோ ஐநாவின் மனித உரிமை மன்றத்தினால் மட்டுமே நிகழவில்லை.இதற்கு பின்னால் இருந்து இந்த முடிவை எடுக்க வைக்க நிர்பந்தித்தவர்களை தமிழர்கள் நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அதுவே நம்மை அடுத்த கட்ட போராட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.
ஐநா அவையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் அதன் பின்னனியும்:
சர்வதேச அளவில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விரும்பிய அமெரிக்கா இந்தியா இங்கிலாந்து சீனா போன்ற நாடுகள் ஒவ்வொன்றும் தனது நலன் சார்ந்து இலங்கையோடு உறவு வைத்துக்கொண்டது. இவர்கள் அனைவருக்கும் இலங்கையில் தனித்த தேசிய இனமாக இருந்த தமிழர்களின் விடுதலை போராட்டம் இடைஞ்சலை கொடுக்க. அந்த விடுதலை போராட்டத்தை அழிக்க விடுதலை கேட்கும் மக்களை இலங்கையோடு சேர்ந்து 2009ல் இனப்படுகொலை செய்தனர். ஆனால் இவர்களால் மக்களை தான் அழிக்கமுடிந்ததே ஒழிய விடுதலைக்கோரிக்கையை அழிக்க முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் விடுதலை கோரிக்கையை அழிக்க நினைத்த மேற்குலகம் குறிப்பாக அமெரிக்க மற்றும் இந்தியாவும் 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐநா மன்றத்தில் தொடர்ச்சியாக தனது நலன் சார்ந்து தீர்மானங்களை கொண்டு வந்தது.
குறிப்பாக இலங்கையின் மீது சர்வதேச விசாரணை வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஒரு வேளை வந்துவிட்டால் அது 60 ஆண்டுகளுக்கான போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. (60அண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் அது இனப்படுகொலை என எளிமையாக நிருபிக்கமுடியும் மேலும் தமிழீழம் அமைத்து தரவேண்டிய அவசியமும் ஏற்படும் என்பதற்காகவும்) முதலில் உள்நாட்டு விசாரணை என்றது. பின் 2002 முதல் 2009வரை மட்டுமே விசாரணையென்று சுருக்கியது .இதன் பிண்ணணியில் இருந்தது இந்தியாதான்.
இதற்கிடையில் இராசபக்சேவின் சீனா பாசம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு பெரும் தலைவழியை கொடுக்க இனி இராசபக்சே நமக்கு (மேற்குலகம் மற்றும் இந்தியாவுக்கு) தேவையில்லையென்று நினைத்த அமெரிக்கா இந்தியாவுடன் சேர்ந்து 2014ல் இலங்கை மீது சர்வதேச விசாரணை என்றும் சொல்லியது. அதோடு நில்லாமல் அது.
1. புலிகளையும் விசாரிக்க வேண்டுமென்றும்
2. இலங்கையில் நடந்தது ஒரு மதச் சிறுபாண்மையினருக்கான மோதல் என்ற ஒரு அபத்தத்தை வரையறுத்தது.தமிழர்களை ஒரு தனித்த தேசிய இனம் என்பதை திட்டமிட்டு மறைத்தது.இது போன்ற ஒன்றை தான் இதுவரையில் திர்மானங்களாக முன்வைத்து வந்தது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது. ஜனவரி 8’2015 அமெரிக்கா மற்றும் இந்தியா விரும்பிய படி இலங்கையில் இராசபக்சே அரசு மாறி 2009 இனப்படுகொலையின் போது இராசபக்சே அரசில் பங்கு வகித்து சரணடைய வந்த தமிழர்களை சுட்டுக்கொல்ல கோத்தபயவுடன் சேர்ந்து உத்தரவிட்ட மைத்திரிபால சிறிசேனா அரியணைக்கு வந்தவுடன் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கிறார். இதன் விளைவாக அமெரிக்காவும் சரி இந்தியாவும் சரி மிகத்தீவிரமாக இலங்கைக்கு ஆதரவாகவும் அதே நேரத்தில் தமீழீழக் கோரிக்கையை அழிக்கவும் அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்திருக்கிறது. இதன் ஒரு பகுதிதான் தற்போது ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் அறிவித்திருக்கும் அறிவிப்பு.
ஐநா மனித உரிமை ஆணையாளர் அறிவிப்பும் அதன் பிண்ணனியும்:
ஐநா மனித உரிமை ஆணையாளரின் இந்த அறிவிப்புக்கு பின் அமெரிக்க இந்தியா போன்ற நாடுகளும் மற்றும் ஐநாவின் பொதுசெயலாளர் பான் கீ மூன் போன்றவர்களின் நிர்பந்தமும் இருக்கின்றன. இதனை கடந்த சில நாட்களாக இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் நடக்கும் சில நிகழ்வுகளை கவனித்தாலே நமக்கு எளிதாக புரியும்.
இலங்கையில் புதிதாக மைத்ரிபால சீறிசேன பொறுப்பேற்றவுடன்(இந்த ஆட்சிமாற்றத்திற்கு பின்னால் இருந்து வேலை செய்தது இந்தியா தான் என்பது முந்தைய அரசின் குற்றச்சாட்டு. இதை இதுவரை இந்திய அரசும் மறுக்கவில்லை என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.) இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரா முதன்முதலாக ஜனவரி 18’2015 அன்று அரசுமுறை பயணமாக சென்ற நாடு இந்தியா தான். அப்போது இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கை அரசு 13வது சட்ட திருத்தத்தை கண்டிப்பாக நிறைவேற்றவேண்டுமென்றும் அதற்கு பதிலாக வருகிற மார்ச் மாதம் நடக்கப்போகிற மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக இந்தியா இருக்குமென்றும் சுஷ்மா சுவராஜ் மறைமுகமாக சொல்கிறார்.இதை அவரின் அறிக்கையின் வாயிலாகவே அறியமுடியும். அதுhttp://www.thehindu.com/news/national/sri-lanka-to-start-ties-with-india-on-a-clean-slate/article6797229.ece
//இலங்கையின் மீது வரும் எந்த சர்வதேச அழுத்தத்தையும் இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது. இலங்கை அரசு ஒரு உள்நாட்டு விசாரணையை தொடங்க வேண்டுமென்றும் கூறுகிறார்.//
இது ஒருபுறம் நடக்க அமெரிக்கா இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் சீனாவை இலங்கையிலிருந்து நீக்கவும் தனது ஆதிக்கத்தை இலங்கைக்குள் நிலைநிறத்தவும் வேகமாக காய்நகர்த்துகிறது.இதனை அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களின் அறிக்கையின் மூலமே அறிந்துகொள்ள முடியும். அதன்படி அமெரிக்காவின்கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும் இலங்கை விசயத்தை கையாளுவதற்க்காக 80களில் அமெரிக்காவினால் நியமிக்கப்பட்டவரும் அரசின் முன்னாள் வெளியுறவு துறையில் இருந்த தீசிஸ் ஸ்சாப்பர் அமெரிக்கா இலங்கை விசயத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டுமென்று ஒரு கட்டுரையை ஜனவரி 27 அன்று எழுதுகிறார். http://southasiahand.com/…/sri-lanka-after-the-election-up…/ அதில்.
//இலங்கையின் ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி அமெரிக்காவும் இந்தியாவும் சில இராஜந்திர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும், இதற்கு பயனையாக வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கா இலங்கைமீதான எந்தவொரு தீர்மானத்தினையும் வைக்கக்கூடாது. அதையும் மீறி ஐநா மனித உரிமை ஆணையம் ஏதாவது தீர்மானத்தை முன்மொழிந்தால் அதனை இந்தியாவோடு சேர்ந்து தடுக்க வேண்டும். இதற்கான ஆதரவை அனைத்து நாடுகளும் வழங்க செய்யும் வேலையையும் அமெரிக்காவும் இந்தியாவும் செய்யவேண்டும்.இலங்கையின் மனித உரிமை மீறலை அமெரிக்கா தனது கட்டுபாட்டில்தான் வைத்திருக்க வேண்டும்.இதனை இலங்கையும் அமெரிக்காவுமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது சர்வதேச மட்டத்திலும் பாதிக்கபட்டவர்கள் மட்டத்திலும் எழும் குரலை அடக்க இந்தியா இலங்கையோடு பேசி நல்லிணக்க ஆணைக் குழுவினால பரிந்துரைக்கப்பட்ட சில பரிந்துரைகளை நிறைவேற்றச் செய்ய வேண்டும்.இதனை இந்தியா ஆரம்பித்துவிட்டது என்றே நினைக்கிறேன்.இப்படி செய்வதன் மூலம் இலங்கையில் பொருளாதார அளவில் மேற்குலக நாடுகள் (அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்) தங்களது ஆதிக்கத்தை செலுத்த முடியும்//
இவரின் இந்த அறிக்கையினை அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்கள் பலரும் அரசுக்கு வழிமொழிந்தனர்.இப்படி அரசின் கொள்கை வகுப்பாளர்கள் அனைவரும் ஒரே மாதிரி எழுதி வந்த வேளையில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியவுக்கான துணை செயலாளர் நிஷா பிஸ்வால் ஜனவரி 31, பிப்.1 மற்றும் பிப். 2 என மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்தார். இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதலில் வந்த வெளிநாட்டு உயரதிகாரி அமெரிக்காவை சேர்ந்த பிஸ்வால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இலங்கைக்கு வருகைதந்த அவர் இலங்கையில் அதிபர் சிறிசேனா இரணில் விக்கரம்சிங்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் தலைவர்கள் என்று பலரையும் சந்தித்தார்,இந்த சந்திப்பில் முக்கியமாக அவர் சொன்னது
//இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்காவிற்கு சுமூகமான சூழல் ஏற்பட்டிருப்பதால், ஐ.நாதீர்மானத்தினை முன்னுக்கு கொண்டுவந்து பிரச்சனைகளை வளர்க்க விரும்பவில்லை என்று பேசினார்.//
http://www.newindianexpress.com/…/…/02/04/article2652351.ece.
இதன்மூலம் கடந்த காலங்களில் அமெரிக்க தீர்மானத்தின் மூலமாக கொண்டு வரப்பட்ட விசாரணையின் அறிக்கை இந்த வருடம் மார்சில் வெளிவருவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதனை தான் பிஸ்வால் மறைமுகமாக சுட்டிக் காட்டிவிட்டு சென்றார். அதன்பின் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவின் பிப் 12’2015 அமெரிக்க பயணம் இதனை உறுதி செய்தது. அங்கு அவர் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் ஜான்கெர்ரியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஜான் கெர்ரி
//இலங்கையில் 30ஆண்டுகளாக இருந்து வந்த தமிழர்களின் பிரச்சனை வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி மாற்றத்தால் முடிவுக்கு வந்தது. இதனை தான் அமெரிக்கா விரும்பியது என்றார்.//
http://www.asiantribune.com/node/86401
அதாவது தமிழர்களுக்கு தீர்வு என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமே என்று பேசினார். இது தான் அமெரிக்காவின் நோக்கம் என்றும் இதனை தான் அமெரிக்க தீர்மானங்கள் முலம் செய்ய நினைக்கிறது என்றும் கடந்த மூன்று வருடங்களாக மே 17 இயக்கம் சொல்லிவந்தது. ஆனால் இதை பற்றியெல்லாம் பேசமால் மே17 இயக்கமாகிய எங்களை குறைசொல்வதிலேயே பலரும் ஈடுபட்டிருந்தனர் அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்களோ தெரியவில்லை.இதனை மட்டும் அமெரிக்க செய்யவில்லை ஒரு படி மேலே சென்று அந்த விசாரணை அறிக்கை வெளியிடக்கூடாது என்று பல்வேறு அமெரிக்க அதிகாரிகளை வைத்து ஐநா அவைக்கு நிர்பந்தம் கொடுத்தது.
அதன் ஒரு பகுதிதான் அமெரிக்காவின் வெளிவிவகார செய்தி தொடர்பாளர் ஜேன் சாகி பிப்.13’2015 அன்று கொடுத்த அறிக்கை.அந்த அறிக்கையானது ஐநாவுக்கு மறைமுக நிர்பந்தம் கொடுக்கிற அறிக்கையாகவும் இருந்தது.அது
//ஐநா அவை இலங்கையில் இறுதி கட்டத்தில் நடந்த போர்குற்றங்களை விசாரிக்க ஆணையம் அமைத்து அதன் அறிக்கையானது வரும் ஏப்ரலில் வெளியிட இருக்கிறது. ஆனால் எங்களை( அமெரிக்காவை) பொறுத்தவரையிலும் சரி எங்களின் நேசநாடுகளை பொறுத்தமட்டிலும் சரி இலங்கையில் வளர்ச்சி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீள்குடியேற்றமே போதுமானது.அதனை இந்த அரசு செய்யும் என்று நம்புகிறோம்,எனவே இதனையும் ஐநா அவை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று பேசினார்.//
http://www.asiantribune.com/node/86411
தமிழர்களின் பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே ஒரு தலைபட்சமாக சிங்களவர்கள் பக்கம் நிற்கும் தமிழனப்படுகொலையில் குற்றவாளியான பான் கீ மூன் இதனை உடனே ஏற்றுக்கொள்கிறார்.அதன்படி இலங்கையின் உள்நாட்டு விசாரணையை ஆதரிக்கிறார். அதாவது ஐநா சபையின் உறுப்பான மனித உரிமை மன்றம் சர்வதேச விசாரணையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய இருக்கும் போது அதனை மறுத்து உள்நாட்டு விசாரணையை சர்வதேசத் தரத்துடன் செயல்படுத்துங்கள் என்று ஐநாவின் பொதுசெயலாளரே அறிவிக்கிறார்.
இப்படி அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கூட்டு சதியினாலும் ஐநாவின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் நிர்பந்ததினாலும் ஐநா விசாரணை அறிக்கையினை ஆறுமாத காலம் தள்ளிவைக்கிறோமென்று ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் இப்போது அறிவித்திருக்கிறார். இதனால் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ளகூடும் என்ற பாதிக்கப்பட்டவர்களின் குரல் நியாயமானதே அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் அறிவித்திருக்கிறார்.
இப்படி ஐநாவே ஒரு தலைபட்சமாக இருக்கும் போது இதனை கண்டித்திருக்க வேண்டிய சரவதேச மனித உரிமை அமைப்புகள் இலங்கையோடு சேர்ந்துகொண்டு இதனை ஆதரித்திருக்கிறது எனபது தான் துயரம்.அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்ற இலங்கை வெளியுறவு அமைச்சர் அங்கே பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல். குறிப்பாக (http://www.ipsnews.net/2015/02/sri-lanka-seeks-u-s-u-n-backing-for-domestic-probe-of-war-crimes-charges/) மனித உரிமை கண்காணிப்பாகம் (HUMAN RIGHTS WATCH) என்ற அமைப்பின் ஆசியாவிற்கான இயக்குனர் பிராண்ட் ஆடம்ஸ் (BRAD ADAMS) இலங்கை அமைச்சரை சந்தித்தபின் நாங்கள் சரத் பொன்சேகா அங்கம்வகிக்கும் அரசின் விசாரணை நேர்மையாக இருக்கும் என்று நம்பவில்லை இருந்தாலும் ஒரு வாய்ப்பை இந்த புதிய அரசுக்கு கொடுக்கிறோமென்று கூறுகிறார்.அதேபோல சர்வதேச மன்னிப்பு சபையின் (AMNESTY INTERNATIONAL)தெற்காசிய பிராந்தியத்தின் துனை இயக்குனர் டேவிட் கிரிவ்த்ஸ் (DAVID GRIFFITHS) இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணையை வரவேற்கிறோம் அதேநேரத்தில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களை பற்றியும் விசாரிக்க வேண்டுமென்று கூறுகிறார்.
இதனையும் சிலர் நியாயப்படுத்தக்கூடும் வரும் செப்டம்பரில் எப்படியாகினும் அறிக்கையை தாக்கல் செய்துவிடுவார்கள் அதற்குள் அமெரிக்காவை இந்தியாவை ஐநாவை ஏன் மனித உரிமை அமைப்புகளையெல்லாம் பற்றி எழுதலாமா என்று. அவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் காலம் கடத்துவதே குற்றத்தை மூடி மறைக்கவே ஆகும். மேலும் உள்நாட்டு விசாரணை ஒன்றையும் புதிய இலங்கை அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் இதனுடன் இணைத்து பார்க்கவேண்டும். இன்று காலம் தாழ்த்தியவர்கள் நாளை உள்நாட்டு விசாரணை அறிக்கையை இலங்கை வெளியிடுகிறது அதுவரை நாம் வெளியிடதேவையில்லை என்றும் அடுத்து உள்நாட்டு விசாரணை அறிக்கையின் படி இலங்கை நடவடிக்கை எடுக்க உறுதி கொடுக்கிறது எனவே மேலும் அவர்களுக்கு காலநீடிப்பு வழங்குவோம் என்று சொன்னாலும் நாம் ஆச்சிரியப்படுவதிற்கில்லை.எனவே இந்த சர்வதேச சதிகளை புரிந்து கொண்டால் ஒழிய நம்மால் அடுத்தகட்டத்திற்கு நகரமுடியாது.
விடுதலையின் பாதையை தமிழர்களாகிய நாமே தீர்மானிப்போம்…
தமிழீழத்தை வெல்வோம்.
– சு.கி.கொண்டல், மே 17 இயக்கம்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27934-2015-03-02-12-01-08