தமிழக அரசே! புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று!

தமிழக அரசே! புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று! – மே பதினேழு இயக்கம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும், ஒப்பந்த பணியாளர்கள் எனும் கொத்தடிமை கூலி முறையை தவிர்த்து 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்பவும், கடந்த காலங்களில் போராடிய அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் போன்ற 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக தமிழகமெங்கும் பிப்ரவரி 2 முதல் தொடர் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை முதலமைச்சர் கவனத்தில் கொள்ளாமல், போராடுபவர்கள் மீதான அதிமுக அரசின் கைது நடவடிக்கையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அரசு ஊழியர்கள் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். 2019 ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தின் போது, போராடிய 5000-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை ரத்து செய்வது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, பிப்ரவரி 2 முதல் தொடர் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று அரசு ஊழியர்கள் சங்கம் அறிவித்திருந்தது. ஆனால் போராட்டத்தில் பங்கேற்காத அதிமுக ஆதரவு சங்கங்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசாணை வெளியிட்டார்.

அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பிற முக்கிய கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாமல், போராட்டத்தில் பங்கேற்காத அதிமுக அரசு ஆதரவு சங்கங்களை அரசு முன்னிறுத்துவது, போராடும் அரசு ஊழியர்களின் கோரிக்கை மனுவை கூட முதலமைச்சர் அவர்கள் நேரில் பெற்றுக்கொள்ள மறுப்பது போன்ற காரணங்களால், அறிவித்தப்படி 02-02-2021 முதல் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையிலும் முதலமைச்சர் அவர்களின் கோரிக்கை மனுவை பெற சந்திக்க மறுப்பதோடு, போராடுபவர்களை கைது செய்து ஒடுக்கும் வேலையை அரசு செய்து வருகிறது. சென்னையில் போராடிய கிட்டதட்ட 60 அரசு ஊழியர்களை கைது செய்து கடந்த மூன்று நாட்களாக மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கும் வரை காவல்துறை விடுவித்தாலும் வீட்டிற்கு செல்வதில்லை என்று உறுதியோடு போராடி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இவ்வாறாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை அதிமுக அரசு நாள்தோறும் கைது செய்து வருகிறது.

போராடும் அரசு ஊழியர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அரசு ஊழியர்களின் நியாயமான, நீண்டகால கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. அரசு ஊழியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவினை தெரிவிப்பதுடன் அவர்களின் கோரிக்கைக்கு உறுதுணையாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் அரசு ஊழியர்களின் உரிமைக்கு ஆதரவாக நிற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884072010 

Leave a Reply