அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்!

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வீடுகளை சேதப்படுத்திய சாதிவெறி வன்முறை கும்பலை கைது செய்!
– மே பதினேழு இயக்கம்

தேர்தல் வாக்குப்பதிவின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னமான பானையை தூக்கிப் போட்டு உடைத்ததுடன், ஒடுக்கப்பட்ட மக்களின் பகுதிக்குள் சென்று பல வீடுகளை சாதிவெறி கும்பல் அடித்து நொறுக்கியுள்ளனர்.

எட்டு வழிச்சாலை, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக அணிதிரட்டப்பட்டிருக்க வேண்டிய மக்களை சகமக்களுக்கு எதிரான வன்மமான அரசியலாக திருப்புவது கோழைத்தனமானது.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை அழிக்கும் சூழ்ச்சியில் பாஜக-ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஈடுபட்டுள்ளது.
இவற்றால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் இந்த சாதி வெறி கும்பலின் வீரம் மூலைக்குப் போய் ஒளிந்து கொள்ளும்.

சாதிவெறி என்றுமே அரசாங்கத்திற்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் துணைசெய்யும் அரசியல் கருவி. ஹைட்ரோ கார்பன் மண்டலம், மீத்தேன் திட்டம், நெய்வேலி சுரங்கம் போன்ற மத்திய இந்திய அரசின் திட்டங்களில் பாழாகும் ஏழை பாட்டாளிகள் சாதிகடந்து ஒன்றாக திரண்டு தங்கள் அரசியல் வலிமையை பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே ‘சாதிய வெறி’ அரசின் துணையோடு வளர்த்தப்படுகிறது.

தங்களின் அரசியல் லாபத்திற்காக சாதிவெறியை தூண்டி விட்டு, வன்முறையில் குளிர்காயும் சக்திகளை தமிழர்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் மாண்பினை அழித்து, அமைதியை குலைக்கும் வகையில் சாதிய வன்மத்தினை உருவாக்கும் கும்பல் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

இந்த மனிதகுல விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட கும்பலும், அவர்களைத் தூண்டிவிட்டவர்களையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply