அனைத்துலக பெண்கள் நாள் – மார்ச் 8

அனைத்துலக பெண்கள் நாள் – மார்ச் 8

பெண் விடுதலை என்பது ஒரு சமூகத்தின் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உலகெங்கிலும் பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டங்கள் தான் வெற்றிகளை சந்தித்திருக்கின்றன. பெண்களின் எழுச்சிமிக்க போராட்டங்களே பெண்களுக்கான பல்வேறு உரிமைகளை பெற்றுத் தந்திருக்கின்றன. பெண் விடுதலையை தவிர்த்த சமூக விடுதலை என்ற ஒன்று இருக்க முடியாது.

இந்திய சமூகத்தில் பெண் விடுதலை எப்போது நிகழும் என்பதைப் பற்றி தந்தை பெரியார் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

”இந்தியப் பெண்கள் கல்வி, சொத்து, திருமண வாழ்க்கைகள் ஆகிய எந்தத் துறையிலும் சுயேச்சையில்லாதவர்களா-யிருக்கின்றனர். நவீன நாகரிகம் என்றால், பிரிட்டிஷ் பெண்களைப் போலவும், அமெரிக்க சிங்காரிகளைப் போலவும் உடை உடுத்துவதும், அலங்கரித்துக் கொள்வதும்தான் எனக் கருதியிருக்கிறார்களே தவிர, இரஷ்யப் பெண்களைப்போலவும், துருக்கிப் பெண்களைப்போலவும், போலீஸ், இராணுவம், விமானம் ஓட்டுதல் போன்ற காரியங்களையும் ஆண்களைப் போலவே செய்ய வேண்டும் என்ற நினைப்பே நமது படித்த பெண்களுக்குக்கூட இருப்பதில்லை.”

”தற்காலப் படிப்பு ஆண்களை எப்படித் தொடை நடுங்கிகளாகவும், வெறும் புத்தகப் பூச்சிகளாகவும் ஆக்கிவிட்டதோ, அதைப்போலவே நம் பெண் மக்களையும் வெறும் அலங்காரப் பொம்மைகளாகவும், புல் தடுக்கிகளாகவும் ஆக்கிவிட்டது.”

”நம் பெண்களுக்கு நவீன மேல்நாட்டுக் கல்விகூட ஒருவித முன்னேற்றத்தையும் அளிக்கவில்லையென்பது கண்கூடு.

நம்முடைய ஆட்சிமுறையில் அடிப்படையான, புரட்சிகரமான மாறுதல் ஏற்பட்டாலொழிய, இந்தியப் பெண்களைச் சுயேச்சையுள்ள ஜீவன்களாக ஆக்குவது முடியாத காரியமேயாகும்.”

”பெண்கள் முன்னேற்றத் துறையில் இரஷ்யா, துருக்கி போன்ற பெண் இனப்புரட்சி நாடுகளை இந்தியா பின்பற்றினாலொழிய, நம் பெண்கள் என்ன கல்வி கற்றாலும், எவ்வளவு சொத்துரிமை பெற்றாலும், வெறும், நகை பீரோவாகவும், உடை ஸ்டாண்டாகவும்தான் இருப்பார்கள். பெண் உலகில் தலைகீழான புரட்சி ஏற்படக்கூடிய முறைகள் நமக்குத் தேவை. அதுவரையில் துரௌபதையைப் பற்றியும், சீதையைப் பற்றியும் பேசியும் எழுதியும் வருகின்ற ஆமைத் தன்மைதான் இருக்கும். பெரோவிஸ்காயா போன்ற இரஷ்ய வீரப்பெண்கள் நம் நாட்டில் தோன்றவே முடியாது. நளாயினிகள் போன்ற தன்மானமற்ற அடிமைகள்தான் தோன்ற முடியும்.”

– விடுதலை, 18 நவம்பர் 1946

இந்திய சமூகத்தில் பெண்களின் விடுதலை எது என்பதை மிகச் சரியாக, சமரசமின்றி முன்வைத்தவர் தந்தை பெரியார். அவரின் கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதன் மூலமே சமூக விடுதலையினை உறுதி செய்ய முடியும்.

உழைக்கும் பெண்களின் விடுதலையினை முன்னிலைப்படுத்தியதே தமிழ்த்தேசியம் என்ற உறுதிமொழியுடன் பயணத்தை தொடர்வோம்.

சமூக சுரண்டல், கலாச்சார சுரண்டல், முதலாளித்துவ சுரண்டல் என அனைத்து சுரண்டல்களையும் எதிர்த்து வீழ்த்துவதே பெண் விடுதலையை உறுதி செய்யும்.

மக்கள் உரிமைப் போராட்டங்களில் பெண்களின் திரட்சியே பெருமாற்றத்தினை உருவாக்கும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply