தொடரும் ஆணவப்படுகொலைகள்: தற்போது பரந்தாமன் – சிவானி

- in சாதி

நந்தீஷ் – சுவாதி ஆணவப்படுகொலையின் வடு மறையாத நிலையில் மற்றுமொரு ஆணவப் படுகொலை!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ள இறையூர் பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர் பரந்தாமனும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கந்துவட்டி தொழில் செய்துவரும் இடைநிலை சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த சிவானியும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்துள்ளனர்.

பெண் கடத்தப்பட்டதாகவும், பள்ளிச் சான்றிதழ் என்ற ஒன்றை சோடித்து, பெண் இன்னும் 18 வயதினைத் தாண்டாதவர் என்று புகாரினை அளித்து பரந்தாமனை சிறையில் அடைத்திருக்கிறார்கள் பெண்ணின் குடும்பத்தினர். ஆனால் சிவானியோ தான் பள்ளிக்கே செல்லவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

சிறையிலிருந்து கடந்த மாதம் வெளியில் வந்த பரந்தாமனுக்கு, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியான கொலை மிரட்டலை கொடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 4-1-2019 அன்று புனேயில் உள்ள விடுதி ஒன்றில் பரந்தாமன் மர்மமான முறையில் தூக்கு போடப்பட்டு இறந்து கிடந்தார். இது உறுதியாக கொலைதான் என்பதை பரந்தாமன் குடும்பத்தாரும், அந்த ஊரைச் சேர்ந்தவர்களும் தெரிவிக்கிறார்கள். நீதி கேட்டு போராடியவர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் தொடர்ச்சியாக ஆதிக்க சாதி குடும்பத்திற்கு சாதகமாகவே செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.

ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்காமல் கடந்து கொண்டிருப்பதன் விளைவாக ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இத்தகைய படுகொலைகளின் ரத்தக் கறை தமிழக அரசின் கைகளில் தான் படிந்திருக்கிறது.

ஆணவப் படுகொலை செய்யும் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு, சலுகைகள், மானியங்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற எதுவும் வழங்கப்படக் கூடாது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அவர்களின் குடும்பத்தினரை சமூகப் புறக்கணிப்பு செய்திடும் வகையில் தனிச்சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும்.

பரந்தாமன் மரணத்திற்கு நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆணவப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தொடர்ச்சியாக நடக்கும் ஆணவப்படுகொலைகளை தடுத்திட முயலாமல் அமைதி காத்து வரும் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கினை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் உடனடியாக இயற்றிட வேண்டும் என்ற கோரிக்கையினை வலுப்படுத்த ஜனநாயக இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்திட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply