தமிழ்ப் பற்றாளர் தோழர் தமிழ். இளவரசன் கைதிற்கு மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்

- in அறிக்கைகள்​, மே 17

தமிழ்ப் பற்றாளர் தோழர் தமிழ். இளவரசன் கைதினை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்!

அரியலூரில் தோழர் தமிழ்.இளவரசன் ‘தமிழ்களம்’ என்ற புத்தக விற்பனை நிலையம் மூலம் தமிழ்ச் சமூகத்துக்கு அவசியமான பல்வேறு புத்தகங்களை தொகுத்து விற்பனைச் செய்து வருகிறார். மேலும் மரபுவழி விவசாயத்தை ஊக்கப்படுத்துவதிலும், புத்தகக் கண்காட்சிகள் நடத்துவதிலும், தமிழர் உரிமை சார்ந்த பிரச்சனைகளுக்காக போராடுவதிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அரியலூரின் சிமெண்ட் ஆலைகளுக்கு எதிராகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு எதிராகவும், இயற்கையைப் பாதிக்கும் மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களிலும் தன்னை இணைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார். தமிழர்களுக்கான போராட்டக் களங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் எல்லா இயக்கங்களுடனும் இணைந்து செயல்படுபவர் ஆவார்.

கடந்த 22-12-2018 அன்று தோழர் தமிழ்.இளவரசன் மீது அரியலூர் நகர காவல்துறை தமிழ்நாட்காட்டி விற்றதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கத் தூண்டினார் என்று பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளது. அந்த நாட்காட்டியில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் இருந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது கண்டனத்திற்குரிய ஒன்றாகும். கருத்துரிமைக்கு எதிரான காவல்துறையின் இச்செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கணடிக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டதற்கு இரண்டு நாட்களில் தோழர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒருபக்கம் தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலை இயங்கக் கூடாது என அரசாணை வெளியிட்டு மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொள்கிறது. மறுபுறம் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்புச் செயல்பாட்டாளர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி, ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது, தமிழக அரசு. இதன் பின்னணியில் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் நேரடியாக பணம் பெற்று கட்சி நடத்தும் பாஜகவின் மோடி அரசு இருப்பதை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட தோழர் தமிழ். இளவரசனை உடனே விடுதலை செய்ய தமிழ்நாடு அரசினையும், காவல்துறையையும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

Leave a Reply