எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்

- in அறிக்கைகள்​, மே 17

தமிழ்ச் சமூகம் கொண்டாடவேண்டிய எழுத்தாளர் பிரபஞ்சன் தான் எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.

கொண்டாடவே முடியாத எழுத்தாளர்கள் இருக்கிற தமிழக படைப்பு சமூகத்தில், நாம் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர்கள் ஒரு சிலரில் முக்கியமானவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.

தனக்கு வாய்க்கப்பெற்ற எழுத்து என்னும் கருவியை தன் வாழ்நாள் இறுதி வரையிலும் மானுட அறத்திற்காகவேபயன்படுத்தியவர்.

தனது எழுத்தின் மூலம் இந்த சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆதரவாக நின்றார். அவரது சிறுகதை ஆனாலும் சரி அவரது கட்டுரை தொகுப்பு ஆனாலும் சரி அனைத்திலும் அவர் ஒடுக்கப்பட்டவர்களின் நியாயத்தை பேசுபவராக மட்டுமே நின்றிருந்தார்.

தான் எழுதுவதை மட்டுமே எழுத்து என்றும் மற்ற அனைவரையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு சூழலில் தனக்குப் பிடித்த எழுத்துகளை எழுதுபவரை அது தனக்கு முன் பின் அறிமுகமில்லாத வராக இருந்தாலும் அவரைப் பற்றி அவர் எழுத்தைப் பற்றி போகுமிடமெல்லாம் பேசும் அபூர்வ குணம் படைத்த மனித நேயர்.

2009இல் தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையின் போது கள்ள மவுனம் சாதித்த பல தமிழ் எழுத்தாளர்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கு அதிகாரம் உடைய தனி நாடு தான் ஒரே தீர்வு என்று பேசியவர்.

தமிழ் சமூகத்தில் இருப்பவர்களுக்கு எழுத்தாளர்களை கொண்டாடவே தெரியவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கு மத்தியில் “எழுத்தாளர்கள் தனது எழுத்தில் சமூகம் பற்றியும் எழுத வேண்டும்.அப்பொழுது தான் இந்த சமூகம் அவர்களை கொண்டாடும்” என்று தைரியமாக சொன்ன சமூககாதலன்.

பல்வேறு நூல்களை எழுதியிருந்தபோதும் தான் விரும்பி எழுதியது பாண்டிச்சேரியின் குடிமக்களின் வரலாற்றை எழுதியதுதான் தனக்கு நெருக்கமானது என்று சொன்னவர். அந்த படைப்புக்காகவே சாகித்திய அகாடமி விருதையும் பெற்றவர்.

தன் காலமெல்லாம் மானுட அறம் குறித்தே எழுதியும் பேசியும் வந்த பிரபஞ்சன் அவர்கள் தன் எழுத்தையும் பேச்சையும் நிறுத்திக்கொண்டு விட்டார். ஆனால் அவர் எழுதிய எழுத்துக்கள் அவர் புகழை தொடர்ந்து இந்த தமிழ்சமூகத்தில் அவரை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்

Leave a Reply