ஓசூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ் மற்றும் சுவாதி ஆணவப் படுகொலை

- in சாதி

”இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்” என்று இன்னும் எத்தனை நாள் இந்தக் கொடுமைகளை மவுனமாகக் கடக்கப் போகிறோம்?

ஓசூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட நந்தீஷ் மற்றும் சுவாதியை ஆணவப் படுகொலை செய்து ஆற்றில் வீசியிருக்கிறது சாதிவெறி கும்பல்.

ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டபள்ளி பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தின் இளைஞர் நந்தீஷ் மற்றும் வன்னியர் சாதியைச் சேர்ந்த பெண் சுவாதி ஆகியோர் 4 ஆண்டுகளாக காதலித்து வந்து, பின்னர் சாதியின் காரணமாக வீட்டில் ஏற்றுக் கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த செப்டம்பர் மாதம் பதிவுத் திருமணம் செய்து கொண்டு ஓசூரில் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நவம்பர் 10 அன்று இரவு பெண்ணின் வீட்டார் மற்றும் உறவினர்கள் நந்தீஷ் மற்றும் சுவாதி இருவரையும் அழைத்துச் சென்று கொலை செய்து, அவர்களின் உடலைக் கயிற்றால் கட்டி கர்நாடகாவின் மாண்டியா பகுதியில் ஆற்றில் வீசியிருக்கிறார்கள். இந்நிலையில் நந்தீஷ் மற்றும் சுவாதி இருவரின் உடலும் கர்நாடகாவில் காவிரி ஆற்றில் கரை ஒதுங்கியுள்ளது.

மிருகங்கள் கூட செய்யத் துணியாத மிகக் கோரமான காட்டுமிரண்டித்தனத்தினை சாதி வெறி பிடித்த கும்பல் செய்திருக்கிறது. நாகரீகமடைந்த சமூகம் என்று சொல்லிக் கொள்ள எந்த தகுதியும் இல்லாத அளவிற்கு தமிழ் சமூகத்தினை இந்த ஆணவப் படுகொலைகள் கேவலப்படுத்தியிருக்கின்றன.

எட்டு வழி சாலைக்கு உன் சொந்த சாதிக்காரனின் நிலத்தைப் பிடுங்கிய போது எங்கே போனது சாதிவெறி. கார்ப்பரேட்டுகளிடமும், பாசிச அரசிடமும் மண்டியிடும் கீழ்த்தரமான வேலையை செய்வதற்கு என்ன சாதிப் பெருமை வேண்டியிருக்கிறது. எட்டு வழி சாலைக்கு நிலம் பிடுங்கும்போது கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளிடம் உன் சொந்த சாதி மக்கள் கதறி அழுவதை வேடிக்கை பார்க்கும் போது, எதை கிழிப்பதற்கு உன் சாதிப் பெருமையை வைத்துத் திரிகிறாய்?

சாதி ஆணவப்படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் நிறைவேற்றிட வேண்டும் என இளவரன், கோகுல்ராஜ், சங்கர் என ஒவ்வொரு கொலையின் போதும் மனிதநேயவாதிகள் கூவிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த சட்டத்தை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் இந்த அரசினை சாதி வெறிக்கு துணை போகும் அரசு என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது?

நந்தீஷ்-சுவாதி கொலைக்கு காரணமான சாதிவெறி கும்பல் கடுமையான தண்டனைக்கு உட்பட்டாக வேண்டும். சாதிய மனோபாவத்தினை வளர்க்கிற, ஒடுக்கப்பட்டோர் அல்லாத அனைத்து சாதிய சங்களும் தடை செய்யப்பட வேண்டும்.

சாதிய ஆணவக் கொலைகளை தடுத்திட தனிச் சட்டத்தினை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும்.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply