சிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை

சிங்கள அரசியல் போட்டிகளின் ஊடாக சிதைக்கப்படும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான கோரிக்கை

ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு, இலங்கையின் பிரதம அமைச்சராக ராஜபக்சேவை மைத்ரிபால சிறிசேனா அறிவித்த காரணத்தினால் மிகப்பெரும் அரசியல் குழப்பம் இலங்கையில் ஏற்பட்டது. ராபக்சேவை ஆதரிப்பதா அல்லது ரணில் விக்ரமசிங்கேவை ஆதரிப்பதா என்கிற குதிரை பேர போட்டியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இறக்கிவிடப்பட்டது. எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தமிழர்கள் திட்டமிட்டு தள்ளப்படுகிறார்கள்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள், வேறு வழியில்லாமல் இலங்கையின் நாடாளுமன்ற ஜனநாயகத்தினை நம்பி வாக்களித்தனர். ஆனால் தமிழர்களின் வாக்குகளை மீறி பாராளுமன்றத்தை மாற்றி அமைத்து தற்போது நடக்கிற ஆட்டங்கள் இலங்கையின் அரசியல் சாசனத்திற்குள் தமிழர்களுக்கு தீர்வு இல்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

2009 முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நடத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பின்னும் இன்னும் பல்வேறு வடிவங்களில், தமிழர்கள் மீதான இனஅழிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ராஜபக்சேவோ, மைத்ரிபாலாவோ,ரணிலோ தமிழர்களுக்கு எந்த தீர்வினையும் கொடுத்துவிட வில்லை. இனப்படுகொலையை நடத்திய சிங்களப் பேரினவாத அரசின் ஒரு சிங்கள சிப்பாய் கூட இன்று வரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நாடகத் தீர்மானத்தில் ஒரு அம்சத்தைக் கூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. வரும் 2019 மார்ச் மாதத்தில் இலங்கை அரசு அந்த தீர்மானத்தின் மீது முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற நிலையில், அதைப் பற்றிய எந்த விவாதத்தையும் நிகழ்த்தாமல், இலங்கையின் ஜனநாயகத்தைப் பற்றி ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக ரணில் – மைத்ரிபால அரசு தமிழர் விரோத அரசு என்று அம்பலப்பட்டு நின்றிருக்கிறார்கள். ஐ.நா தீர்மானத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட எந்த விடயத்தையும் நிறைவேற்றாத இலங்கை அரசினை கேள்விக்குள்ளாக்காத மேற்குலக நாடுகள், தங்களின் கைப்பாவையான ரணில் ஆட்சி மாறிவிட்டால் இலங்கையில் ஜனநாயகம் இருக்காது என்று தமிழர்விரோத நாடகம் ஆடுகின்றன. அமெரிக்க-இந்திய-சீன ஆக்கிரமிப்புப் போட்டிகளின் ஊடாக நடத்தப்படும் இந்த அதிகார ஆட்டத்திற்குள் தமிழர்களின் விருப்பத்தினை பேச வைத்து, தமிழர்களின் அரசியல் விடுதலை கோரிக்கையினை பலியாக்கப் பார்க்கிறார்கள்.

தமிழர்கள் இந்த நேரத்தில் பேச வேண்டியது தங்களுக்கு ரணில் முக்கியமா அல்லது ராஜபக்சே முக்கியமா என்பதைப் பற்றியல்ல. இனப்படுகொலை விசாரணை அமெரிக்க-மேற்குலக-இந்திய கூட்டணியால் மறுக்கப்படுவது பற்றியும், அரசியல் விடுதலைக்கான தீர்வு தாமதப்படுத்தப்படுவதைப் பற்றியும்தான். தமிழர் கடலில் திரிகோணமலையில் நடக்கிற மனிதகுல விரோத, தமிழர் விரோத அமெரிக்கா-இந்தியா-ஜப்பான்-சிங்கள கூட்டுப் பயிற்சிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டும்.

இனவாத இலங்கையின் தேர்தல் ஜனநாயகத்தினை நம்பி வாக்களித்தால் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை என்பதை இந்த பத்து ஆண்டுகள் உறுதி செய்திருக்கின்றன. இதையே தான் கடந்த 70 ஆண்டுகளாக இலங்கையின் அனைத்து ஆட்சிகளிலும் பார்த்து வருகிறோம். இலங்கையின் தேர்தலினை புறக்கணித்துவிட்டு, தமிழர்கள் தங்கள் அரசியல் தீர்வுக்கான அரசியல் போராட்டங்களை துவக்குவதே சரியான வழியாக இருக்க முடியும். தமிழர்கள் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை கோரிக்கையினை வலிமையான ஒற்றைக் கோரிக்கையாக முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.

அமெரிக்க-இந்திய பொறிக்குள் சிக்காமல் தமிழர்கள் சுயசார்போடு நின்று, சிங்களப் பேரினவாத இலங்கையின் தேர்தலினை புறக்கணித்து, இனப்படுகொலைக்கு நீதிகேட்கும் வலிமையான போராட்டங்களினை உலகம் முழுதும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கையினை மே பதினேழு இயக்கம் தமிழீழத் தமிழர்களிடமும், புலம்பெயர் தமிழர்களிடமும் முன்வைக்கிறது.

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply