கேரள பெருவெள்ளத்தினை தேசியப் பேரிடராக அறிவித்திடு! – மே பதினேழு இயக்கம்

கேரள பெருவெள்ளத்தினை தேசியப் பேரிடராக அறிவித்திடு! – மே பதினேழு இயக்கம்

கேரளாவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரிடரினை தேசியப் பேரிடராக மத்திய அரசு அறிவிக்காமல் இருப்பது மிகப் பெரும் துரோகமாகும். இதுவரை கடந்த பல நூற்றாண்டுகளாக இல்லாத வெள்ள பாதிப்பினை கேரள மக்கள் சந்தித்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் 164 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள். உண்மையான கணக்கு என்பது இன்னும் அதிகமாக இருக்கும். 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் கேரள மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

கேரளப் பேரிடரினை தேசியப் பேரிடராக அறிவிக்காமல் உச்சகட்ட அரசியல் விளையாட்டினை மத்திய அரசு நிகழ்த்தி வருகிறது. மக்களின் உயிர் இழப்பினில் அரசியல் செய்து கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க மத்திய பாஜக அரசு நினைப்பது மிகவும் அபத்தமானதாகும்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போதும், அதன் பின்னர் வர்தா புயல் ஏற்பட்டு சென்னை பெரும் பாதிப்பினை சந்தித்த போதும், மத்திய அரசு இதே மாதிரியான நிலைப்பாட்டினையே எடுத்தது. மிகக் குறைவான நிவாரண நிதியையே மத்திய தொகுப்பிலிருந்து வழங்கியது. ஒக்கி புயல் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போன போதும் தேடுதல் பணிகளை வேகமாக நிகழ்த்தாமல் எத்தனை மீனவர்கள் மரணத்திற்கு தள்ளப்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம். தென்னிந்திய மாநிலங்களில் நிகழும் பேரிழப்புகள் எதனையும் இந்தியாவின் இழப்பாக வட இந்திய ஊடகங்கள் காட்டுவதில்லை. வட இந்தியர்கள் பயணிக்கும் விமான நிலையங்கள் மூழ்கினால் தான் இந்தியாவின் ஊடகங்களுக்கு தென்னிந்திய மாநிலங்கள் கண்ணுக்கு தெரிகின்றன.

மராட்டிய சிவாஜி சிலையினையும், படேல் சிலையினையும் அமைப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட மக்களின் உயிருக்கு இந்திய மத்திய அரசு கொடுப்பதில்லை. மராட்டிய சிவாஜி சிலைக்கு 4000 கோடியும், படேல் சிலைக்கு 3000 கோடியும் ஒதுக்கும் மத்திய அரசு, கேரளாவின் பேரிடருக்கு போதுமான நிதியினை ஒதுக்க மறுப்பதென்பது மனிதாபிமானமற்ற அயோக்கியத்தனமாகும். கேரள மக்களிடமிருந்து மத்திய அரசு வரியாகப் பெறும் ஒவ்வொரு 1 ரூபாய்க்கும் வெறும் 25 பைசா தான் திருப்பி கேரள மக்களின் நலனுக்காக அளிக்கப்படுகிறது. கேரள மக்களிடம் இத்தனை பெரிய சுரண்டலை செய்யும் மத்திய அரசு, பேரிடருக்கு கூட முறையான நிதியின ஒதுக்காமல் இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. (https://www.thenewsminute.com/article/united-states-south-india-can-southern-collective-get-us-better-deal-delhi-46501)

கேரள மக்களுக்கு முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கொடுக்காமல் பலி கொடுத்த மத்திய அரசு, தற்போது அந்த மக்களிடம் எழும் கோபத்தினை திசைதிருப்ப பாஜகவின் IT விங்கினை பயன்படுத்தி முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான பிரச்சாரத்தினை செய்து வருகிறார்கள். இது மிகவும் அயோக்கியத்தனமானதாகும். கேரள மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே மோதலை உருவாக்கி அரசியல் செய்ய நினைக்கும் அற்பத்தனத்தினை பாஜகவினர் செய்து வருகிறார்கள்.

கேரளாவின் இழப்பு யாருக்கோ நடக்கிறது என நாம் அமைதியாக இருக்க முடியாது. இது நம் சகோதரர்களுக்கு, நம் அண்டை சகோதர தேசிய இனத்திற்கு நடப்பது. கேரளாவுக்கான நிதியை ஒதுக்குவதற்கும், தேசியப் பேரிடராக இதனை அறிவிப்பதற்கும் மத்திய அரசினை நோக்கி இந்த நேரத்தில் நாம் குரலெழுப்புவது மிகவும் அவசியமாகும்.

கேரள வெள்ள பாதிப்பினை தேசியப் பேரிடராக அறிவித்திட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. 

– மே பதினேழு இயக்கம்
9884072010

Leave a Reply