இலங்கையில் முஸ்லீம்களின் மீதான தாக்குதலும் ’ஹிந்து’வின் துரோகமும்

இலங்கையில் முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதலும் ஹிந்து பத்திரிக்கையின் பச்சை துரோகமும்

இன்றைய (14.03.18) ஆங்கில ஹிந்து பத்திரிக்கையில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவுஃப் ஹக்கீமின் பேட்டி வந்திருக்கிறது. அதில் அவர் ”இனவெறி சக்திகளின் செயல்கள் இலங்கையில் இன்னும் இருக்கிறது இன்னும் சொல்லப்போனால் தற்போது அது தீவிரமடைந்துள்ளது. அவர்கள் வேண்டுமென்றே முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தவும், அவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரங்களையும் குறி வைத்து அழித்து வருகின்றனர். அவர்களின் இந்த வேலைகளுக்கு சிங்கள் அரசியல்வாதிகள் தங்களுடைய ஆதரவை வழங்குகிறார்கள்” என்று முஸ்லீம்களின் மீதான தாக்குதலுக்கு இனவெறி அரசின் மததாக்குதல் தான் காரணமென்று சொல்லுகிறார். ஆனால் ஹிந்து பத்திரிக்கையோ அந்த பேட்டிக்கு தலைப்பாக

“இது சிங்கள-முஸ்லிம் மோதல் அல்ல, இது முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு மதத் தாக்குதலாகும்: இலங்கை அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் It was not a Sinhala-Muslim clash, it was a mob attack on Muslims: Sri Lanka Minister Rauff Hakeem என்று தலைப்பிட்டு இருக்கிறது. http://www.thehindu.com/…/it-was-not-a…/article23229464.ece…

திட்டமிட்டு அங்கு நடக்கும் சிங்கள – முஸ்லீம் சண்டையை எதோ மதபிரச்சனையாக மாற்றி, அதை ஒன்றுமில்லாமல் மடைமாற்றும் வேலையை ஹிந்து பத்திரிக்கை தெளிவாக செய்கிறது. இதே போன்ற வேலையை தான் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக செய்து சிங்கள இனவாதத்தை சர்வதேசத்திடம் மறைத்தது. அதன் வெளிப்பாடு தான் 2009இல் மிகப்பெரிய தமிழினப்படுகொலையை சிங்களம் நடத்த காரணமாக இருந்தது.

மேலும் இந்த தாக்குதல் என்பது ஏதோ மதத்தை முன்னிறுத்தி நடத்தப்படும் தாக்குதலாக மட்டுமே ஹிந்து பத்திரிக்கை காட்டுகிறது. ஆனால் உண்மையில் பிப்ரவரி 26ஆம் தேதி அம்பாறையில் நடந்த இந்த தாக்குதல் என்பது சிங்கள குடியேற்றங்களை கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.

இலங்கை நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து அம்பாறை நகரத்தில் அதிகமாகத் தமிழர்களும், முஸ்லிம்களுமே வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் சிங்கள அரசாங்களின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால், அம்பாறை நகரம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து முற்றாகக் கை நழுவியது. தற்போது நகரில் சொற்ப அளவில் வசிக்கும் முஸ்லிம் மக்களையும் தொந்தரவு கொடுத்து வெளியேற்றும் நகர்வே நடைபெற்று உள்ளது. அதன் தொடர்ச்சி தான் அடுத்து கண்டியில் நடத்திருக்கிறது. அம்பாறை காட்டிலும் கண்டியில் மிகப்பெரிய கலவரத்தை சிங்கள பெளத்த வெறியர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஆகவே முஸ்லீம் மக்களுக்கு எதிராக சமீபத்தில் நடத்தப்படும் தாக்குதலென்பது திட்டமிட்ட ஒரு இனவெறி நடவடிக்கையே ஆகும். இதனை உடனடியாக சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு இலங்கை அரசின் இந்த இனவெறி போக்கையும் அதற்கு துணைபோகும் ஹிந்து பத்திரிக்கையையும் கண்டிக்க வேண்டும். இல்லையேல் 2009இல் தமிழர்களுக்கு நேர்ந்த கதிதான் முஸ்லீம்களுக்கும் ஏற்படும்.

Leave a Reply