சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடமாற்றம் – மாணவர்கள் போராட்டம்

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதை எதிர்த்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 2008-ஆம் ஆண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை காரணமாக காட்டி, நீதியரசர் சண்முகம் தலைமையிலான குழு, சென்னை உயர்நீதிமன்ற
வளாகத்தில் செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரியை, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் ஆகிய இரு இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு வளாகங்களுக்கு இடமாற்றம் செய்ய பரிந்துரைத்துள்ளது. சென்னை சட்டக்கல்லூரியில் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களே அதிகளவில் பயில்கின்றனர். அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பயிற்சி மேற்கொள்வதை தடுத்து, அருகிலுள்ள தனியார் சட்டக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதி உண்டாகும்படி இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. இதனை எதிர்த்தே சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இப்போராட்டத்தில் 01-03-2018 அன்று கலந்துகொண்டு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவை தெரிவித்ததோடு, மாணவர்களின் போராட்டம் வெற்றிபெற மே பதினேழு இயக்கம் உறுதுணையாக இருக்குமென உறுதியளித்தது.

 

Leave a Reply