வேலாம்புதூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குடும்பத்தின் மீது சாதிவெறி வன்முறை

விழுப்புரம் மாவட்டம், வேலாம்புதூர் கிராமத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குடும்பத்தின் மீது, நிலப்பிரச்சனையின் காரணமாக,ஆதிக்க சாதிக் கும்பல் காட்டுமிராண்டித்தனமான வன்முறையை ஏவி இருக்கிறது. அக்குடும்பத்தின் விதவைத் தாய், எட்டு வயது மகனையும் படுகொலை செய்த சாதிவெறிக் கும்பல், 14 வயது மகளை கூட்டு வல்லுறவு செய்துள்ளது. மனிதமற்ற இந்த ’சாதிவெறி’ சீக்குபிடித்த சமூகத்தின் மனநிலையை அப்பட்டமாக காட்டுகிறது. இந்த மாதிரியானவர்களைக் கொண்ட சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பது அவமானகரமாக இருக்கிறது. சாதிக்கு முட்டுகொடுத்துக் கொண்டிருக்கும் கும்பல்களை கடுமையாக எதிர்கொள்ளாமல் இது போன்ற மனிதத் தன்மையற்ற, காட்டுமிராண்டித்தனமான மனிதர்களை தடுத்து நிறுத்த இயலாது..

சாதிப்பெருமைகள், சாதிய வன்மங்களை பெருமைகளாக பேசித்திரிபவர்கள், சாதிகளை தங்களது வாக்குவங்கி அரசியலாக மாற்றி பாதுகாப்பவர்கள், தங்களது பொருளாதார சுரண்டலுக்கான அதிகாரமையமாக்குபவர்கள், சாதி சொன்னால் மட்டுமே ‘தமிழனாக’ அங்கீகரிப்பதாக சொல்லும் போலிகள் என அனைவரும் இந்த காட்டுமிராண்டித்தனத்தை வளர்த்தெடுப்பதில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து செல்கின்றனர்.

சாதியப் பற்று, சாதிய வெறி எந்த வடிவத்தில் வந்தாலும் அது வன்மத்தையே கக்குகிறது. சுரண்டலும், ஆதிக்க உணர்வும் சாதியத்தின் இரு கண்களாக இருப்பதை இன்னும் நாம் உணர்ந்து கொள்ளமுன்வரவில்லையெனில் நாம் எவ்வகையிலும் நாகரீகமடைந்தவர்களாகிவிட முடியாது. அனைவரும் ஒரே குரலில் இந்த சாதிவெறி வன்முறைக்கு எதிராக திரளவேண்டும்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply