இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள்

- in அறிக்கைகள்​, மே 17

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் கொடுமைகள்

குஜராத்தில் உள்ள BJ அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை உயர் கல்வி (MS-General Surgery) பயின்று வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர் மாரிராஜ் தொடர்ச்சியான அடக்குமுறைகளை சந்தித்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள ராமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிராஜ். வறுமையான குடும்பத்திலிருந்து, கடைநிலை சமூகத்திலிருந்து படித்து மேலே வந்த இளைஞனை வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குகின்றன இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள். காலம்காலமாக அடிமைப்பட்டு கிடந்த நீ எப்படி மருத்துவம் படிக்கலாம் என்பதைத் தான் இந்த கல்லூரிகளைச் சேர்ந்த சாதிய வெறி பிடித்த பேராசிரியர்கள் கேட்காமல் கேட்கிறார்கள். AIMS மருத்துவக் கல்லூரி தமிழக மருத்துவ மாணவன் சரவணன் உயிரை பலிகொண்டது. டெல்லி ஜே.என்.யூவில் தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் உயிர்போனது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் ரோகித் வெமுலா, தற்போது சென்னை கவின் கலைக் கல்லூரியில் மாணவர் ஜோயல் பிரகாஷ் என்று தொடர்ச்சியாக உயர்சாதி மனோபாவத்தின் கோரப் பிடிக்கு அடித்தட்டு மாணவர்கள் பலியாகிறார்கள். குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இத்தகைய வன்கொடுமைகள் அதிகம் நிகழ்கின்றன.

மாரிராஜ் தொடர்ந்து பல்வேறு எடுபிடி வேலைகள் செய்வதற்கும், மற்ற மாணவர்களுக்கு டீ வாங்கி வருவது, வகுப்பறையை விட்டு வெளியேற்றப்படுவது, அவரை புறக்கணித்து ஓரம்கட்டுவது என பல்வேறு வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். உளவியல் ரீதியான சித்ரவதைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்தும் அந்த நிறுவனத்தின் மீதோ, பேராசிரியர்கள் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு உயர் கல்லூரிகள் முதற்கொண்டு IIT கள் வரை இத்தகைய சாதிய கொடுமைகள் தொடர்கின்றன. நவீன அக்ராகரங்களாகவே பெரும்பாலான IIT கள் செயல்படுகின்றன.

தொடர்ச்சியாக மன ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவர் மாரிராஜ் கடந்த வாரம் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களின் சாதிய வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட நாம் குரல் எழுப்ப வேண்டியது அவசியம். இனி ஒரு ரோகித் வெமூலாவையோ, ஜோயல் பிரகாசையோ, சரவணனையோ, முத்துக் கிருஷ்ணனையோ நாம் இழந்துவிடக் கூடாது. குஜராத்தின் இந்த அழுக்குப் படிந்த வர்ணாசிரம் நீதியினை மறைத்திடத்தான் வளர்ச்சி என்ற பொய் கட்டமைக்கப்படுகிறது.

மாணவர் மாரிராஜ் மீது சாதிய ரீதியான நவீன தீண்டாமைக் கொடுமைகளை நிகழ்த்தி வரும், சாதி வெறியர்களான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்திட தமிழக ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பிட வேண்டும். தமிழக மாணவர் மாரிராஜிற்கு துணை நிற்போம். சாதிய அழுக்கினை கல்வி நிறுவனங்களிலிருந்து அகற்றுவோம். இந்துத்துவ காவி பார்ப்பனிய கும்பல்களின் பிடியிலிருந்து கல்வி நிறுவனங்களை மீட்போம்.

-மே பதினேழு இயக்கம்

Leave a Reply