மே 17 இயக்கம் ஏற்பாடு செய்த இன உணர்வாளர் தோழர் மணிவண்ணன் நினைவஞ்சலி மற்றும்அணுவுலை அறிவோம் நூல் அறிமுக நிகழ்வு …இடம் பாளையங்கோட்டை

- in பரப்புரை
15.06.2013 அன்று மாலை மே 17 இயக்கம் திருநெல்வேலியில் ஏற்பாடு செய்து நடந்த அணு உலை அறிவோம் என்ற நூல் அறிமுக விழாவானது  பாளையங்கோட்டை ஆதிதிராவிடர் மகாஜனசபை அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று நூலை அறிமுகம் செய்து வைத்து மூத்த பத்திரிக்கையாளர் தி.க.சி அவர்கள் பேசியதாவது: 

அடுத்த மாதம் கூடங்குளத்தில் முதலாவது அணுஉலையில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும், 2-வது அணுஉலை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்படும் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. தேர்தலுக்காக இவ்வாறு கூறிக்கொண்டே இருக்கிறார்கள். எத்தகைய அவதூறுகள் வந்தாலும் இந்த அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் வெற்றிபெறும்.

அந்த நம்பிக்கையை அணுஉலை அறிவோம் என்ற நூலில் உள்ள செய்திகளும், புகைப்படங்களும் ஏற்படுத்துகின்றன.  இதை மாணவர்கள், பேராசிரியர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இதில் கூறப்பட்டுள்ள விசயங்களை தொலைநோக்கு பார்வையுடன் அணுகவேண்டும். அணுஉலை எதிர்ப்பு போராட்டம் என்பதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு போராட்டம், தாமிரவருணி பாதுகாப்பு போராட்டத்துடன் இணைத்து பார்க்கவேண்டும். மக்கள் திரள் போராட்டங்களால் மக்கள் விரோத திட்டங்களை நிறுத்த முடியும் என்றார் அவர்.

இந்நிகழ்வில் பேராசிரியர் சாமுவேல் ஆசீர்ராஜ் தலைமை வகித்தார்.பேராசிரியர் தொ. பரமசிவன், கவிஞர் லிபி ஆரண்யா உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். மே 17 இயக்கத்தைச் சேர்ந்த லெனாகுமார் வரவேற்றார். நூலாசிரியர் ஜெ. பிரபாகரன் நன்றி கூறினார்.  மே 17 இயக்கத்தைச் சேர்ந்த தி. புருசோத்தமன் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் சில நாட்களுக்கு முன் மறைந்த இனமான இயக்குனர் மணிவண்னன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.





Leave a Reply