- in பரப்புரை
***ட்ரோஜான் குதிரையும், தமிழர்களும்*** புருசோத்தமன்.தி, ஒருங்கிணைப்பாளர்,மே பதினேழு இயக்கம் 

’ட்ராய்’ நகரினை முற்றுகையிட்ட மாபெரும் கிரேக்கப்படை நீண்ட நாட்களாக அந்த நகரத்தினை வெல்லமுடியாமல் கடற்கரையில் நின்றது. சில நாட்கள் அமைதிகாத்த கிரேக்கப்படைகள் சென்றுவிட்டன என்று நம்பிய ’ட்ராய் படைகள்’ கடற்கரையில் ஒரு பெரிய மரக்குதிரை இருப்பதைக் கண்டார்கள். அதன் அருகிலே ஒரே ஒரு கிரேக்கவீரன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.


தன்னை தனியே விட்டுவிட்டு கிரேக்கப் படை சென்று விட்டதாக ‘சினான்’ என்கிற அந்த கிரேக்கப் படைவீரன் சொன்னான். ‘ ஏதேன்’ என்கிற கடவுளின் கோவிலுக்கு செய்யப்பட்ட அழிப்பிற்கு பரிகாரமாக இந்தக் பெரிய மரக்குதிரையை ’பரிசுப்பொருளாக’ கிரேக்கர்கள் விட்டுச் சென்றிருப்பதாக ‘ட்ராய்’ நகர மக்களிடம் சொன்னான். இதை நம்ப மறுத்த ட்ராய் நகரின் மதகுருமார் ‘லகூன்’ Laocoön எனும் ஒருவர், “கிரேக்கர்களிடம் இருந்து பரிசுப்பொருளை கொண்டு வருபவரையும் நம்புவதற்கில்லை” (I fear Greeks, even those bearing gifts) என்றார். எச்சரித்த மதகுருமார் அன்றிரவே கொலை செய்யப்பட, பிறரின் எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு ‘ட்ரோஜான் குதிரை’ யாராலும் வெல்ல முடியாத இரும்புக்கோட்டையான ‘ட்ராய்’ நகரத்திற்குள் இழுத்து வரப்பட்டது.

சரியான நேரம் அறிந்து குதிரைக்குள் ஒளிந்திருந்த கிரேக்க வீர்ர்களிடம் ஒற்றைக் கிரேக்கவீரன் ’சினான்’ சமிக்கையை கொடுக்க, இரும்புக் கோட்டையாக இருந்த ‘ட்ராய்’ நகரத்திற்குள் முட்டாள்தனத்தினால் இழுத்து வரப்பட்ட ட்ரோஜான்-குதிரையில் இருந்து வெளிப்பட்ட நயவஞ்சக வீரர்கள், உறக்கத்திலிருந்த ‘ட்ராய்’ நகர மக்களை வேட்டையாடினார்கள். எதற்கும் அசையாத இரும்புக்கோட்டை சில கணத்தில் வீழ்ந்தது.

இதுவே பின்னாளில் “கிரேக்கனின் பரிசுப்பொருளை நம்பாதே” என்னும் சொலவடையானது.

“அமெரிக்காவின் மோசடித் தீர்மானத்தினை” ஆதரித்து ஈழ விடுதலைக்கு குழிபறிக்க முனைந்த கும்பலிடமிருந்து 2013 ஆரம்பத்தில் போராட்டத்தினை காக்க முடிந்தது. அவர்களை அப்பொழுதே அம்பலப்படுத்திய பொழுது பெரும்பாலோனோர் அமைதிகாக்கவே செய்தனர். அப்பொழுதும், அதன்பிறகும் அந்தக் கும்பலிடம் எந்த ஒரு விமர்சனமுமற்று உறவு கொண்ட இயக்கங்களை, கட்சிகளை இன்று “அடிமைகளின் மாநாட்டிற்கு இந்தியா செல்லக்கூடாது” என்கிற திமுக-காங்கிரஸ்-இந்தியா விரித்த வலையில் நன்கு அறிந்தோ – அறியாமலோ தமிழ்ச் சமூகத்தினை மாட்டிவிட முயன்றிருக்கிறது. தமிழ்ச் சமூகம் போராடும் திசையையும் கோரிக்கையையும் தாமே முடிவு செய்ய வேண்டுமென்கின்ற இந்தியாவின் செயல்திட்டத்தினை கடந்த 4 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்த முனைந்தவர்கள் தற்பொழுது வெற்றி பெறும் இடத்தில் இருக்கிறார்கள். ‘ட்ரோஜான்’ குதிரையை தமிழ்த் தேசியப் போராட்டத்திற்குள் இழுத்து வர உதவியவர்கள், அந்தக் குதிரையை நகரத்தின் மையத்தில் விட்டுச் சென்றவர்களைப் பற்றி ஏதும் பேசாமல் இன்று மெளனம் காக்கிறார்கள்.

நகருக்குள் வந்த ’சினான்’ என்கிற தனித்த கிரேக்க வீரன் இந்திய அரசிற்கு ’சைகைக் குறிப்புக் காட்ட’, நாம் இன்று வேட்டையாடப்படும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ’சினானை’ ஆதரித்த ட்ராய் நகரவாசிகளின் தலைவர்களிடத்தில் கோபம் கொள்ள என்ன இருக்கிறது நமக்கு. அவர்களது முட்டாள்தனத்தினாலேயே அனைவரும் அழிந்தார்கள் என்கிற வரலாறு உருவாவது அவர்களுக்கு எந்த வகையில் பெருமையளிக்கப் போகிறது?. அனைத்தும் அழியும் வரை மெளனம் காக்கப் போகிறார்களா அல்லது தாம் செய்த பிழைகளுக்குப் பொறுப்பேற்று களம் காணப் போகிறார்களா என்பதை நாங்கள் கவனிக்கத் தவறமாட்டோம்.

அமெரிக்கத் தீர்மானத்தினை ஆதரித்து திசை திருப்ப முயன்றவர்களும் அந்த ’சினான்’ போன்றவர்கள் தான். ’சினான்’ ஒரு போர்வீரன் தான். அவனைப் போலவே இவர்களும் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் ‘கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் தான். ஆனால் போர்வீரனாய் இருந்தாலும் ‘சினான்’ யாருக்கு ஆதரவாக நின்றான் என்பதுவே வரலாறாக நிற்கிறது.

அமெரிக்கத் தீர்மானத்தினை ஆதரிக்கிறோமென்று சொல்லி ‘ட்ரோஜன் குதிரையை’ தமது தலைநகருக்குள் இழுத்து வரவேண்டுமென்று குரல்கொடுத்த செயல்பாட்டாளர்களை என்னவென்று சொல்வது? அவர்களைப் பார்த்து பரிதாபப்படவே முடிகிறது. போர்க்களத்தில் தமது இரு கரங்களையும் இழந்தாவது ஆயுதங்களைப் பெறவேண்டுமென்று முடிவெடுப்பவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே.

சினானின் உதவியாலும், இவனை நம்பி நகரத்திற்குள் குதிரையை இழுத்துவரச் சொன்னவர்களின் முட்டாள்தனத்தினாலும், இன்று ‘ட்ரோஜான்’ குதிரை நகரத்தின் மையத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. திறக்கப்பட்ட மரக்குதிரையிலிருந்து எதிரிப்படைகள் தமிழ்ச் சமூகக் கோட்டையை நிர்மூலமாக்கும் போரினை துவக்கி இருக்கிறார்கள். ’சினான்’ நம்பவைத்த சக அமைப்புகள் காக்கும் கள்ள மெளனம் ‘ட்ரோஜான் குதிரையின்’ வன்மத்தினை விட மோசமானது. நகரின் மையத்தில் நடந்து கொண்டிருக்கும் நிர்மூலத்திற்கு இவர்களும் நேரடியாக துணைபோனவர்கள் என்றே வரலாறு எழுதப்படும்.

திமுக-இந்தியா என்கிற ‘ட்ரோஜான்’ குதிரையை பரிசுப் பொருளாக இன்று தமிழ்த் தேசியப்ப் போராட்டத்திற்குள் அழைத்து வந்தவர்களைப் பற்றி நீண்ட நாட்களுக்கு முன்பாகவே எச்சரித்திருந்தோம். அவ்வாறு எச்சரித்த காரணத்தினாலேயே மே17 இயக்கம் “உளவாளி இயக்கம், தொண்டு நிறுவனம்” என்கிற குற்றச்சாட்டிற்கு ஆளானது. ‘’ட்ரோஜான்’ குதிரையை சந்தேகித்து எச்சரித்த அந்த ஒற்றை நபரான ‘லகூன் –Laocoön’ எவ்வாறு புறக்கணிக்கப்பட்டு பலியிடப்பட்டாரோ அவ்வாறே மே பதினேழு இயக்கமும் புறக்கணிப்பு-அவதூறு அரசியலால் வேட்டையாடப்பட்டது. அனைத்து இயக்கத்திடமும் மே17 இயக்கம் சந்தேகத்திற்குரிய இயக்கம் எனும் பொய்ப் பிரச்சாரம் எந்த ஒரு ஆதாரமும் இன்றி பரப்பப்பட்டது. பரப்பியவர்கள் வேறெவரும் அல்ல, ஒற்றை கிரேக்க வீரனாக நின்ற ‘சினான்’ என்பவனே. எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல் தமது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சினானின் வார்த்தைகளை நம்பி ‘லகூன்’ புறக்கணிக்கப்பட்டதும் தமிழ்ச் சமூகத்தின் சமகால வரலாறு.

தனது ஒவ்வொரு நகர்வினையும், ‘சினான்’ தனது பேச்சு லாவகத்தினால் மறைத்து பிறரை ஏமாற்றிய சந்தர்ப்பங்கள் கடந்த 4 வருடங்களாக ‘ட்ராய்’ நகருக்குள் நிகழ்ந்தது. நான்கு ஆண்டுகளாய் இந்த நிகழ்வுகளை பலரிடம் எச்சரித்தும் மெளனமே பதிலாகக் கிடைத்தது. ஒருசிலர் அனைத்தினையும் கேட்டு விட்டு,சினானிடம் அதிக நெருக்கத்தினை ஏற்படுத்தி பலமேடைகளில் ஏற்றவும் செய்தனர். ‘ட்ராய்’ நகரத் தந்தைக்கு மாலை அணிவிக்கும் பெருமையும் சினானுக்கு கிட்டியது ஆகப்பெரும் நகைமுரண்.

இன்று அவனது பேச்சினை நம்பி ஏமாந்த ‘ட்ராய்’ நகரின் தலைமைப் படையதிகாரிகள், அரசன், அமைச்சர்கள் இந்த ‘ட்ரோஜன்’ குதிரையை தமிழகத்தின் மாற்று இயக்கங்களின் மத்தியில் ‘தமிழ்த் தேசியத்திற்கான பரிசுப்பொருளாக’ இழுத்து வந்து நிறுத்தி இருக்கிறார்கள். வெளியே ‘தமிழ்த் தேசியக் குதிரையாகவும்’, உள்ளே திமுக எனும் படைவீரனாகவும், கைகளில் இந்திய தேசியம் எனும் ஆயுதங்களுடனும் ‘ட்ரோஜான்’ காத்திருக்கிறது. ட்ராய் நகரினை வீழ்த்த ஒரே ஒரு ட்ரோஜான் போதுமானதாக இருந்தது. தமிழ்ச் சமூகம் அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடாது என்பதால்தானோ என்னவோ மேலும் இரண்டு-மூன்று ட்ரோஜான்களை உருவாக்கி நகருக்கு வெளியே இன்றும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அவைகளைப் பற்றியும் அறிவித்துமாயிற்று. வழக்கம் போல மெளனமே பதிலாக இருக்கிறது. இனிமேலும் தமிழ்ச் சமூகம் விழித்துக் கொள்ளுமா எனத் தெரியாது. ஆனால் மே பதினேழு இயக்கத்தின் எதிர்ப் போராட்டம் கடந்த 4 வருடங்களைப் போலவே இனியும் தொடரும். களத்தினை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்க முடியாது. சமரசம் தற்கொலைக்கு சமம்.

‘இலங்கை காமன்வெல்த் குழுவில் இருந்து நீக்கப்படவேண்டும்’, ‘மாநாடு இலங்கையில் நடத்தப்படக் கூடாது’ என்கிற நேர்மையான தமிழ்ச் சமூகக் கோரிக்கைகளை தவிர்த்துவிட்டு, ‘இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது’ என்று கோரிக்கையை திசை திருப்பிய ‘கூட்டமைப்பு’ இதற்காக பதில் சொல்லக் கடமைபட்டவர்கள். பட்டினிப் போராட்டம் என அழைக்கப்பட்ட இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே, இப்போராட்டத்தினை நிர்வகிக்க, பரப்ப, விரிவுபடுத்த, கோரிக்கையை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட, ‘இலங்கையில் காமன்வெல்த் எதிர்ப்பு கூட்டமைப்பில்’, மே பதினேழு இயக்கத்தினை சேர்க்கக்கூடாது என்று தோழர்.தியாகு உட்பட முடிவெடுத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மே17 இயக்கத்தினை புறக்கணித்ததைப் பற்றி கேள்வி கேட்காமல் அமைதி காத்த கூட்டமைப்பின் பிற இயக்கத் தோழர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

மே பதினேழு இயக்கம் சேர்க்கப்பட்டிருக்குமானால் ’கோரிக்கைகளை திசைதிருப்பிவிட அனுமதிக்க மாட்டார்கள்’ எனும் எங்கள் மீதான உங்களின் நம்பிக்கைகளுக்கும் கோடானுகோடி நன்றிகள். ஒருவரின் நேர்மையை, உடனடியாக ஆழப்புரிந்து கொள்பவர்கள் நேர்மையான எதிரிகளும், துரோகிகளுமே. இந்த இரண்டில் நீங்கள் எந்த பொறுப்பினை வகிக்கிறீர்கள் என எமக்குத் தெரியாது. எமக்கான பணி காத்துக் கிடக்கவே செய்கிறது. காமன்வெல்த் மாநாட்டு எதிர்ப்பினை விட முக்கியமாக 13வது சட்டத் திருத்தமும், மாகாணத் தேர்தலை மையப்படுத்தாத அரசியல் விவாதமே இங்கு அரங்கேறியதன் அடிப்படை காரணம், தமிழீழ ஆதரவு ஆற்றல்களை பொதுவாக்கெடுப்பு நோக்கிய பயணத்தினை தடுத்து நிறுத்தி திசை திருப்பவே.

இந்த சதியை உடைப்பதற்காகவே எமது ‘இந்தியா-இங்கிலாந்து அலுவலகங்கள் முற்றுகை’ 25ஆம் தேதி திட்டமிடப் பட்டிருக்கிறது. 13வது சட்டத்திருத்தம் ஏமாற்று, பொதுவாக்கெடுப்பினை உடனே நடத்து, காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தாதே என்கிற முதன்மை முழக்கங்களுடன் இந்திய அலுவலகத்தினையும், காமன்வெல்த்தின் பின்புலமாக இருக்கும் இங்கிலாந்து தூதரகத்தினையும் முற்றுகை இடுகிறோம்.

தமிழீழத்தினை நேசிக்கும் நேர்மையான தோழர்களை பங்கேற்க அழைக்கிறோம். திசைதிருப்பல் அரசியல்களை விரட்டியடிக்கும் அரசியல் வலிமை தமிழீழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது என்று இந்திய அரசிற்கும், திமுகவிற்கும் உணர்த்தும் அவசியம் நமக்கு இருக்கிறது.

கோரிக்கைகளை காயடிக்கும் ‘ திமுக-அதிமுக-இந்தியா’வின் கூட்டணியை முறியடிக்கும் மனவலிமை உள்ளவர்கள் மட்டும் எமது போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கள்ள மெளனம் காத்தவர்களை நாங்கள் அழைக்கவில்லை. ‘ட்ராய்’ நகரினை மீட்கும் ஒரு மாபெரும் பொறுப்பில் ஒரு சிறு பகுதியை நாங்கள் மேற்கொள்கிறோம்.

‘ட்ரோஜான்’ குதிரையையும், அதில் இருந்து வெளிப்படும் நயவஞ்சக வீரர்களையும் எதிர்த்து களமாட அனைத்து ‘ட்ராய்’ நகர மக்களையும் அழைக்கிறோம். ‘சினான்’ தொடர்ச்சியாக ஆக்கிரமிப்பு கிரேக்க வீரர்களுக்கு சைகைகளை காட்டவும், மேன்மேலும் குதிரைகளை நகரத்திற்குள் அழைத்து வருவதற்கு அனுமதிக்காமல் தடுக்கவும் செய்யும் பொறுப்பு நம் அனைவருக்குமானது.

‘ட்ரோஜான் குதிரையை’ முதன்முதலில் கண்டறிந்த மே பதினேழு இயக்கம் வேட்டையாடப்படுவதற்குள் ‘ட்ராய்’ நகரம் விழித்துக் கொள்ளட்டும், அல்லது மே பதினேழு இயக்கம் வேட்டையாடப்பட்ட பின்பாவது நகரம் காக்க அனைவரும் விழிக்கட்டும்.

Leave a Reply