- in பரப்புரை

ஈழம் – ஐ.நா விசாரணைக் குழுவும், அரச சார்பு தொண்டு நிறுவன அதிகாரிகளும் 

கடந்த மார்ச் 2014 இல் ஐநா மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்க சார்பில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட “இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்” (Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka) என்ற தலைப்பிலான தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச விதிமீறல்கள் குறித்து, இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பினை விசாரிக்க ஐநா மனித உரிமை ஆணையம் ஒரு விசாரணைக் குழுவினை கடந்த ஜூன் மாதத்தில் உருவாக்கியது. இக்குழு உருவாக்கப்பட்ட சில தினங்களில் விசாரணைக் குழுவினை இலங்கைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்தது. இதற்கிடையில் இலங்கைக்கு வெளியிலிருந்தே விசாரணையை மேற்கொள்ள முடியும் என்று மனித உரிமை ஆணையம் அறிவித்தது.
விசாரணைக் குழுவின் விதிமுறைகள்
விசாரணைக் குழுவின் கால அளவென்பது, இலங்கை அரசின் LLRC மேற்கொண்ட கால அளவான பிப்ரவரி 21, 2002 முதல் 15 நவம்பர் 2011 வரை என்று மனித உரிமை ஆணையத்தின் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.( The period under investigation is that covered by the LLRC, that is, from 21 February 2002 until 15 November 2011, when it presented its report to the President of Sri Lanka). இக்கால அளவிற்கு அப்பாற்பட்ட சம்பவங்களை தெரிவிப்பதும் விசாரணை புரிதலுக்கு உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைக்கான விதிமுறைகள் LLRC குழுவின் அதே விதிமுறைகளை உள்ளடக்கியதே என்று மனித உரிமை ஆணைய ஆவணம் தெரிவிக்கிறது.
Martti Ahtisaari of Finland, Silvia Cartwright of New Zealand and Asma Jahangir of Pakistan
Martti Ahtisaari of Finland, Silvia Cartwright of New Zealand and Asma Jahangir of Pakistan
விசாரணைக் குழு நிபுணர்களாக மூன்று பேர் மனித உரிமை ஆணையத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். மார்த்தி அத்திஸாரி, சில்வியா காட்ரைட், அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மூவரைப் பற்றி பார்ப்பதற்கு முன், இலங்கை விவகாரத்தில் சர்வதேச அளவில் ஒரு கொள்கை வடிவமைப்பாளராக செயல்பட்டு வரும் ஒரு NGO அமைப்பினைப் பற்றி பார்க்க வேண்டியது அவசியமாகிறது.
இண்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் (International Crisis Group):
Anti Conflict Movement மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனமாக அறியப்படும் இந்த அமைப்பு 1995இல் அமெரிக்க மற்றும் மேற்குலக அதிகாரிகளின் துணையுடன் உருவாக்கப்பட்ட்டது. இதன் நிறுவனர்களில் ஒருவரான மல்லோச் பிரெளன் என்பவர் உலக வங்கியின் துணை அதிபராக இருந்தவர். இந்த அமைப்புக்கு நேரடியாக நிதி வழங்கும் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஏனைய மேற்குலக அரசுகளும், ஷெல், செவ்ரான்( Shell & Chevron) போன்ற எண்ணெய் நிறுவனங்களும், ராக்ஃபெல்லர் போன்ற நிறுவனங்களும் முக்கியமானவை. இந்நிறுவனத்துக்கான நிதியில் 47% அரசுகள் மற்றும் அரசு சார் கார்பரேட் நிறுவனங்களிடமிருப்து வந்தாலும் இது தன்னை அரசு சாரா நிறுவனம் என்று கூறிக் கொள்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்கா, மேற்குலக அரசுகள் மற்றும் அவர்களின் கார்பரேட்டுகளின் நலன் சார்ந்த கொள்கைத் திட்டங்களை மற்ற நாடுகளின் மீது திணிப்பதை வேலைத்திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் உலகின் முக்கியமான 50 பகுதிகளை பிரச்சினைக்குரிய பகுதிகளாக அறிவித்து தனது நிறுவனத்தினை அந்த நாடுகளில் அமைத்து, தமது உறுப்பினர்களை பணியில் அமர்த்தியிருக்கிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் அதிகார பதவியில் இருந்தவர்களும், மற்றும் ஐ.நா வின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்களும் ஆவர். இப்போது இந்நிறுவனத்தின் அதிபராக பொறுப்பேற்றிருக்கும் ஜீன் மேரி குஹென்னோ என்பவர் ஐநாவின் அமைதிகாப்பு துறையின்- கீழ் பாதுகாப்பு செயலராகவும், பிரெஞ்சு-அமெரிக்க ஃபவுண்டேஷனின் இயக்குனராகவும் இருந்தவர். இதற்கு முன்னர் 2009ம் ஆண்டு முதல் தற்போது வரை ICG அதிபராக இருந்த லூயி ஆர்பர், ஐநாவின் மனித உரிமைகள் ஆணையராக பணியாற்றியவர். 2000 முதல் 2009 வரை இதன் அதிபராக இருந்த கரத் ஈவன்ஸ் என்பவர் ஆஸ்திரேலியாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக இருந்தவர். மேலும் ஐநாவினால் பரிந்துரைக்கப்ப்ட்ட R2P(Responsibility to Protect) குளோபல் செண்டரின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். கிழக்கு தைமூரின் எண்ணெய் வளத்தினை ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு பெற்று தருவதற்காக, கிழக்கு தைமூரினை இந்தோனேசியாவின் பிராந்தியப் பகுதியாக அறிவித்து கிழக்கு தைமூர் இனப்படுகொலைக்கு வித்திட்டவரும் இவர் தான். ஈழம் விவகாரத்தில் ஐ.நாவின் R2P விதிமுறையின் தோல்வி குறித்து விவாதிக்கும் கூட்டத்தில், அந்த விதிமுறை இலங்கை விவகாரத்துக்கு பொருந்தாது என பேசியவரும் இவர்தான். இவரின் இந்த பேச்சைக் கண்டித்து அதற்கு பதிலளிக்கும் கட்டுரையை மே 17 இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டது .( http://www.theweekendleader.com/Opinion/2418/the-‘voice-of-america’-in-the-eelam-imbroglio.html)
இந்தியாவின் வெளியுறவு செயலராக இருந்தவரும், இந்திய தொழிற் நிறுவனங்களின் கூட்டமைப்பான FICCI (Federation of Indian Chamber of Commerce and Industry) அமைப்பின் இந்திய-அமெரிக்க கொள்கை வகுப்பு குழுவின் தலைவராக இருக்கும் லலித் மன்சிங்கும் ICG இன் உறுப்பினராக உள்ளார். FICCI ன் மூலம்தான் 2010ம் ஆண்டு போருக்கு பின் இலங்கையின் வர்த்தகத்தை பலப்படுத்தும் நோக்குடன் பல MNC நிறுவனங்களை அழைத்துச் சென்று IIFA என்கிற இந்திய திரைப்பட விருது விழா நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அகிம்சை, நல்லிணக்கம் என்ற பெயரில் அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு பயங்கரவாதப் பட்டம் கட்டுதலும் இவர்களின் செயல்பாடுகளில் ஒன்று. தங்களின் கொள்கைகளை அறிக்கைகளாக வெளியிட்டு அவற்றை சர்வதேச அளவிலான நாடுகளின் கொள்கையாக மாற்றுவது என்பதைத் தாண்டி, அமெரிக்க அரச மற்றும் கார்பரேட் நலன்களுக்கான கொள்கைகளை மற்ற நாடுகளின் கொள்கைகளாக மாற்றச் செய்வதே இவர்களின் வேலை. பல நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களாக(Policy Makers) இவர்கள் செயல்படுகிறார்கள். அதற்காக இவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகள், ஊடகங்களில் தமக்குள்ள செல்வாக்குகள், உள்ளூர் அமைப்புகள், கட்சிகள், கார்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த நிறுவனத்தின் ஆட்களாக இருப்பவர்கள் திறமையான அறிவு ஜீவிகள், ஆராய்ச்சியாளர்கள் என்பதைப் போன்றதொரு பிம்பம் உலக அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் அமெரிக்க, மேற்குலக அதிகாரவர்க்கத்தின் கையாட்கள் என்பதே இவர்களைப் பற்றிய ஆராய்ச்சியின் போது வெளிப்படும் உண்மையாக இருக்கிறது.
உலகின் பல பகுதிகளில் புரட்சியை ஒடுக்கும் வேலைகளையும், பல பகுதிகளில் செயற்கையாக புரட்சியை உள்ளூர் அமைப்புகளின் மூலம் உருவாக்கும் வேலைகளையும் ஏகாதிபத்திய நலனுக்காக இந்த நிறுவனம் செய்திருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றாக அரபு நாடுகளில் அரசுகளுக்கு எதிராக ஏற்பட்ட எழுச்சியை பார்க்க முடியும். குறிப்பாக எகிப்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்ற்த்திற்கான புரட்சியை உள்ளூர் அமைப்புகள், மேற்குலக மீடியாக்கள் மற்றும் சமூக வலை தளங்களின் உதவியுடன் இந்த நிறுவனம் பின்னிருந்து இயக்கியது. எகிப்தின் அதிபராக இருந்த மக்கள் ஆதரவை இழந்த ஹோசினி முபாரக்கிற்கு பதிலாக மொகமது மோர்சியை அதிபராக்க இந்த நிறுவனம் வேலை செய்தது. மொஹமது மோர்சியை அதிபராக்கி எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க மொஹமது எல் பரேடி( Mohamed El Baredi) என்ற நபரின் மூலமாக காய்களை நகர்த்தியது. மக்கள் புரட்சியினூடாக மொஹமது மோர்சியை அதிபராக்குவதற்கான வேலைகளில் எல் பரேடி ஈடுபட்டார். இறுதியில் ஹோசினி முபாரக் பதவியிழந்தபின், மொஹமது மோர்சி அதிபராக பதவியேற்பது நடந்தது. எல் பரேடி துணை அதிபராக பதிவியேற்றார். இந்த எல் பரேடி என்பவர் ICG யின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர். சர்வதேச அணு சக்தி ஏஜென்சியின் இயக்குனராகவும் இருந்தவர். ஈரானுக்கு அணு சக்தி விவகாரம் சார்ந்த விடயங்களில் அமெரிக்க சார்பாக நின்று அழுத்தம் கொடுத்த வேலையையும் செய்தவர் இவர். இவர் 2011 இல் ICG பொறுப்பிலிருந்து விலகி ஆட்சி மாற்ற்த்திற்கான வேலைகளில் ஈடுபட்டு, மேற்குலகின் செல்வாக்கு படைத்த நபரும், ICG உறுப்பினருமான ஜார்ஜ் சோரஸ் என்பவரால் ஸ்பான்சர் செய்யப்பட்ட அரசியல் சாசனத்தை எகிப்திற்கு உருவாக்கினார். ஈராக் போரை திட்டமிட்டது தொடர்பான சர்வதேச கிரிமினல் விசாரணை தொடர்பான விவகாரத்தில் எல்பரேடியின் பெயரும் உண்டு.
இதே போல் தாய்லாந்து நாட்டின் பிரதமாரக இருந்த தாக்சின் என்ற அமெரிக்க சார்பு நபர் பதவி இறக்கப்பட்டதற்கு பின், அவரது ஆதரவாளர்களை மீண்டும் பதவியேற்றி தாய்லாந்தின் வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் பெறுவதற்காக சிவப்பு சட்டை புரட்சி என்பது தாய்லாந்தில் ICG யைச் சேர்ந்த கென்னத் அடெல்மென் மற்றும் தாக்சினால் இணைந்து உருவாக்கப்பட்டது.
இந்த ICG நிறுவனத்தைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
அதற்கும் இலங்கைக்கான மனித உரிமைகள் ஆணைய விசாரணைக் குழுவுக்கும் என்ன சம்மந்தம்?
இந்த விசாரணைக் குழுவின் முடிவில் நடந்தது இனப்படுகொலை என்று நிறுவ முடியாதா?
இப்போதுதான் அந்த விசாரணைக் குழுவின் நிபுணர்களான மூன்று பேரை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. மார்த்தி அத்திஸாரி, சில்வியா காட்ரைட், அஸ்மா ஜஹாங்கீர் ஆகிய மூவரில் மார்த்தி அத்திஸாரி, அஸ்மா ஜஹாங்கீர் ஆகிய இருவரும் ICG நிறுவனத்தில் இருப்பவர்கள். மார்த்தி அத்திஸாரி என்பவர் ஃபின்லாந்தின் அதிபராகவும், ஐரோப்பிய அயலுறவுத் துறை கவுன்சிலின் குழு உறுப்பினராகவும் இருந்தவர். 2000 முதல் 2004 வரையிலான காலக்கட்டத்தில் கரத் ஈவன்ஸ் உடன் ICG இன் தலைவராய் செயல்பட்டவர் மார்த்தி அத்திஸாரி. இன்று வரை ICG ன் emeritus chairman ஆக இருப்பவர். அமெரிக்காவின் அரசு தொடர்புகள் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் 1167 முறை மார்த்தி அத்திசாரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ICG யின் திட்ட இயக்குனராக லண்டனைச் சேர்ந்த ஆலன் கீனன் என்பவர் இருந்து வருகிறார். ஒற்றை இலங்கை என்பதைத் தாண்டி வேறெந்த தீர்வும் இலங்கையில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் ICG தெளிவாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஈழ விடுதலைப் போராட்டம் முடிவுற்ற பிறகு பல்வேறு காலங்களில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்று தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறது. இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்ற அறிக்கையை தொடர்ச்சியாக இந்நிறுவனம் வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் மீது குற்றம் சுமத்தி வருகிறது. குறிப்பாக மேற்குலகில் ஈழ விடுதலை தொடர்பாக நடைபெறும் புலம்பெயர் தமிழர்களின் செயல்பாடுகளை முடக்குவதும், தமிழகத் தமிழர்களை திசை திருப்புவதும் இதன் முக்கியமான செயல்பாடுகளாக இருக்கிறது. இவர்கள் முக்கிய நோக்கம் என்பது தமிழர்களை தமிழீழக் கோரிக்கையை கைவிடச் செய்வது என்பதாகவே இருக்கிறது.
Alan Keenanகடந்த டிசம்பர், 2010 இல், போருக்கு பின்பான இலங்கையில் மனித உரிமை சூழல் என்ற தலைப்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆலன் கீனன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கை அரசின் குற்றங்கள் சார்ந்த வீடியோக்களின் மூலம் இலங்கை அரசை நெருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள், புலிகள் செய்த குற்றங்களை கண்டு கொள்வதில்லை என்று குறிப்பிடுகிறார். டிசம்பர் மாதம் லண்டனில் ராஜபக்சே அரசின் போர் குற்றங்களுக்கு எதிராக ஒன்று கூடிய புலம்பெயர் தமிழர்கள் கையில் விடுதலைப் புலிகளின் கொடியினை வைத்திருந்ததன் மூலம் அவர்கள் தங்கள் மனித உரிமை ஆதரவு தரத்தினை இழக்கிறார்கள் என்றும், இது தமிழர்-சிங்களர் உறவை பாதிக்கும் என்றும், விடுதலைப் புலிகள் கொடியினை இவர்கள் காட்டுவது இலங்கை மக்களை கோபத்திற்குள்ளாக்கும் என்றும் குறிப்பிடுகிறார். இலங்கையின் அனைத்து சமூக மக்களையும் அழிவுக்குள்ளாக்கிய விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த செயல்பாடுகளை வெளிக்கொண்டுவர ஐரோப்பிய உறுப்பினரவை, புலம் பெயர் தமிழர்களுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் விடுதலைப் புலிகளின் கொடிகளை பொது இடங்களில் பயன்படுத்த தடை விதித்திருக்கும் அரசுகள், அதை கட்டாய நடைமுறைப் படுத்தவேண்டும் என்று புலிகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடாது என புலம் பெயர் தமிழர்களை மிரட்டுவதுடன், ஒன்றிய அரசுகளுக்கும் அழுத்தம் கொடுப்பதன் மூலம் புலிகளுக்கு எதிரான அமெரிக்க அரசின் அரசியலை அமல்படுத்த முனைகிறார். இன்று ஐரோப்பிய ஒன்றியம் சட்டவிரோதமாக புலிகள் மீது விதித்திருந்த தடையில் ஒரு பகுதியை தமிழர்கள் சட்டப் பூர்வமாக உடைத்திருக்கிறார்கள். இது ஆலன் கீனனின் பேச்சுக்கு தமிழர்கள் சார்பிலிருந்து விழுந்திருக்கும் முதல் பதிலடியாகும்.. கடைசி வரை தமிழீழ விடுதலைக் கோரிக்கையை சமரசம் செய்யாத புலிகளின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சொல்கிற இவர்களின் நோக்கம் கோரிக்கையை அழிப்பதை நோக்கியே இருக்கிறது,
இந்த ICG அமைப்பினர் தொடர்ச்சியாக வெளியிட்ட அறிக்கைகளில் இருக்கும் சில பகுதிகளைப் பற்றி பார்ப்போம்.
2007 ஜூன் மாதம் ICG வெளியிட்ட அறிக்கையில், புலிகள் சிறுவர் போராளிகளை பயன்படுத்துவதாக திட்டமிட்ட குற்றச்சாட்டினை முன்வைக்கிறது. சிங்கள பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் ஆதாரங்கள் இல்லாத ஆராயப்படாத, ஒரு போலியான குற்றச்சாட்டினை புலிகள் மீது முன்வைக்கிறது. இலங்கை அரசின் கையாளாக மாறிய கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆயுதம் சாராத அரசியல் அமைப்பாக மாற்ற வேண்டுமென்று இலங்கை அரசுக்கு பரிந்துரைக்கிறார்கள். LTTE க்கு புலம் பெயர் அமைப்புகளிடமிருந்து பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை கட்டுப்படுத்த வேண்டுமென்று சர்வதேச சமுகத்திற்கும், புலிகள் சிறுவர் போராளிகளை சேர்ப்பதை நிறுத்தாவிட்டால் அவர்கள் மீது தடைகளை அதிகரிக்க வேண்டுமென ஐநா பாதுகாப்பு சபைக்கும் அறிவுறுத்துகிறார்கள்.
மே 2007 இல் வெளியிட்ட அறிக்கையில், தொடர்ச்சியாக புலிகள் இசுலாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதைப் போன்றதொரு பிம்பத்தினை கட்டமைக்கிறார்கள்.
பிப்ரவரி 2008 அறிக்கையில் (Sri Lanka’s Return to War: Limiting the Damage), புலிகள் தொடர்ச்சியாக அமைதி ஒப்பந்த விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டினை முன்வைக்கிறார்கள். மேலும் 2008 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புலிகளை முற்றிலுமாக வலுவிழக்கச் செய்துவிடுவோம் என இலங்கை அரசு நம்புவதாகவும், அரசு வடக்கை நோக்கி முன்னேறி வருவதால், புலிகள் ராணுவ நடவடிக்கையில் தோற்கடிக்கப்பட்டாலும், இத்தனை ஆண்டுகாலம் புலிகளால் ஏற்பட்ட தாக்கத்தை எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்பது புரியாத புதிராக இருப்பதாக தெரிவிக்கிறது. உடனடியாக கிழக்கு பகுதியில் 13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டுமென இலங்கை அரசுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், நார்வே, தென் கொரியா போன்ற நாடுகளுக்கும் பரிந்துரை செய்கிறது. புலிகள் தொடர்ச்சியாக தற்கொலைத் தாக்குதல், கட்டாய ஆள் சேர்ப்பு, போன்ற சாட்சியமற்ற குற்றச்சாட்டுகளை அடுக்குவதுடன் எல்லாவற்றுக்கும் மேலாக
“புலிகள் உடனடியாக பொதுப்படையாக தனி தமிழீழ கோரிக்கையை கைவிட்டு, ஒன்றுபட்ட இலங்கை விதிமுறைக்குள் சேர்ந்து வாழ பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறுகிறது. (Abandon publicly the demand for an independent Tamil state (Eelam) and announce willingness to negotiate within the framework of a united Sri Lanka.)”
மார்ச் 2009 இல் புலிகள் தமிழ் மக்களை வெளிவிட வேண்டுமென்று மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக அறிக்கை வெளியிடுகிறது.
ஏப்ரல் 2009 (Development Assistance and Conflict in Sri Lanka: Lessons from the Eastern Province) இல் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், ஐ.நா, உலக வங்கி ஆகியவற்றுக்கு 13 வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்கவும், வீடு கட்டுதல், விவசாயம் மற்றும் இதர வளர்ச்சி திட்டங்களுக்கு இலங்கைக்கு நிதி உதவி வழங்க வேண்டுமென்றும், மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டவுடன் வடக்கு மாகாண தேர்தலை நடத்துவதற்கான உத்திரவாதத்தை அளிக்க வேண்டுமென்றும் கூறுகிறது.
இப்படி தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வந்த ICG, மே 2009 வரை போரை நிறுத்த வேண்டுமென்றோ, மக்கள் பேரழிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென்றோ ஒரு அறிக்கை கூட வெளிவிடவில்லை. மக்கள் பேரழிப்பை தடுத்து நிறுத்தக் கோராத ஒரு நிறுவனத்துக்கு, புலிகள் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை கைவிட வேண்டுமென்று கூற எந்த தகுதி இருக்கிறது என்பதே நமது கேள்வியாக இருக்கிறது.
ஜனவரி 2010 இல் Sri Lanka: A Bitter Peace என்ற தலைப்பில் புலிகளின் தோல்விக்கு பிறகு ஜனநாயகத்திற்கான கூறுகள் சற்று முன்னேறியிருப்பதாகவும், அமைதிக்கான சூழல் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது. தமிழர் பகுதியிலிருந்து புலிகளின் நீக்கம் வரவேற்கத்தக்க மாறுதல்களை உருவாக்கியிருப்பதாக குறிப்பிடுகிறது.
பிப்ரவரி 2010(The Sri Lankan Tamil Diaspora after the LTTE) இல் புலிகளின் அழிவிற்குப் பிறகும், மேற்குலக நாடுகளில் புலம் பெயர் தமிழர்கள் வேறு வடிவங்களில் தமிழீழக் கோரிக்கையை நகர்த்துவதை தவிர்க்க இந்தியா,மேற்குலக நாடுகள் தமிழர்களின் நல்லிணக்க தீர்வுக்கு உதவ வேண்டுமென்றும், இலங்கை அரசுக்கு அதற்கு அழுத்தம் தர வேண்டுமென்றும் குறிப்பிடுகிறது. மே2010 இல் மனித உரிமை விதி மீறல்கள் குறித்து இரு தரப்பிலும் விசாரணை நடத்த வேண்டுமென்று என்று முன்வைக்கிறார்கள்.
ஜுன்2011 இல், இந்தியா இலங்கையின் அரசியலில் நீண்ட காலமாக செல்வாக்கு செலுத்தி வந்தாலும், இலங்கை அரசை அமைதியை நோக்கி திருப்புவதில் அதன் கொள்கைகள் வெற்றி பெறவில்லை என்றும், இந்தியாவானது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை விவகாரத்தில் இணைந்து செயல்பட வேண்டுமென்றும், இலங்கையின் ஜனநாயகம், ராஜபக்சே குடும்பத்தின் ஆக்கிரமிப்பால் தடுமாறுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடுகிறார்கள்.
பின்னர் 2012 நவம்பர் மாதத்தில்(Sri Lanka: Tamil Politics and the Quest for a Political Solution) ஒரு அயோக்கியத்தனமான அறிக்கையை ICG வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கை இலங்கையில் நடந்த அனைத்துக்கும் காரணமான சிங்கள் இனவாத அரசு என்பதை மறைத்து, ராஜபக்சே குடும்பத்தின் ஆதிக்கமே என்று சுருக்கியும், புலிகளும் இப்பிரச்சினைக்கு காரணம் என்ற ரீதியில் அமைந்திருந்தது. ஆயுதப் போராட்டத்தின் பின்பும் உயிர்ப்புடனிருக்கும் தமிழீழ விடுதலைக் கோரிக்கையை எப்படியாவது அழிக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை நோக்கமாக இருந்தது. அந்த அறிக்கையில் அவர்கள் பல்வேறு தரப்பினருக்கும் அளித்த சில பரிந்துரைகளைப் பற்றி பார்ப்போம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு…
அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒன்றுபட்ட இலங்கை என்பதை உருவாக்க இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
புலிகள் செய்த குற்றங்களை ஏற்றுக் கொண்டு, குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான செயல்களுக்கு மன்னிப்புகோரி முஸ்லீம்கள் மற்றும் சிங்கள பிரதிநிதிகளுடன் நல்லிணக்க குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.
தமிழர் பிரச்சினைகளை பற்றியும், அதிகாரப் பகிர்வு குறித்தும் விடுதலைக் கோரிக்கையை தவிர்த்து சிங்களர்களுடன் பேச வேண்டும்.
தமிழர் அல்லாத சிங்கள கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி, இலங்கை அரசின் ஊழல், அதிகார துழ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும். LLRC இன் பரிந்துரைகளை அமல்படுத்தவும் அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
தமிழ் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தலைவர்களுக்கு…
புலிகளின் செயல்களால் சிங்களர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். இலங்கை மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிகளை கட்டுப்படுத்த குழுக்களை உருவாக்க வேண்டும்.
புலம் பெயர் தமிழர் மற்றும் தமிழ்நாட்டு அமைப்புகளுக்கு…
ஒன்றுபட்ட இலங்கையினுள் அதிகாரப் பகிர்வினை பெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியை ஆதரிக்க வேண்டும்.
இனப் பிரச்சினையை தீவிரமாக்கியதில் புலிகளின் பங்கினையும், இறுதி கட்டங்களில் நடந்த தமிழர்களின் இழப்புக்கு புலிகளும் காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு, போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து புலிகள் மீது கொண்டு வரப்படும் எந்த சர்வதேச விசாரணைக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும்.
இலங்கை அரசுக்கு…
அதிகாரப் பகிர்வினை அளிப்பதற்கான உறுதியை அளிக்க வேண்டும்.
மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
பாராளுமன்ற தேர்வு குழுவுக்கு நேர பொறிமுறைகளை உருவாக்கி நேரம் கடத்தாமல் வடக்கு மாகாணத் தேர்தலை நடத்த வேண்டும். அதனுடைய தீர்வாக அதிகாரப் பகிர்வு என்பது அமைய வேண்டும்.
13 வது சட்டத் திருத்ததை அமல்படுத்த வேண்டும்.
வடகு கிழக்கு பகுதிகளிலிருந்து ராணுவத்தை வெளியேற்ற தொடங்க வேண்டும்.
அனைத்து மக்களின் கலாச்சார மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
சர்வதேச நாடுகளுக்கு…
13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தவும், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தவும், பாராளுமன்ற தேர்வு குழுவினை விரைவில் செயல்படுத்தவும் இலங்கை அதிபருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
2013 இல் விரைவில் வடக்கு மாகாணத் தேர்தலை நடத்த அழுத்தம் தர வேண்டும்.
ஐ.நா சிறப்பு உறுப்பினர்களை இலங்கைக்குள் அனுமதிக்க கோர வேண்டும்.
2012 மார்ச் UNHRC தீர்மானத்தின் படி, LLRC ன் பரிந்துரைகளை அமல்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
காமன் வெல்த் தலைமை செயலகம் மற்றும் காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கு…
மேலுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றாத பட்சத்தில் காமன் வெல்த் மாநாட்டை இலங்கயிலிருந்து மாற்ற வேண்டும்.
இந்த பரிந்துரைகளின் மூலம் ராஜபக்சே அரசினை குற்றம் சாட்டியும், இனவாத அரசியலை மறுத்தும், புலிகள் மீது சர்வதேச விசாரணை கொண்டு வர வேண்டும், அதை தமிழ்நாட்டு மற்றும் புலம்பெயர் தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். இவர்களின் அறிக்கைகள் இலங்கையின் இனவாதத்தை பேசாமல், இத்தனை ஆண்டுகால இனப்படுகொலையை மறைத்து, ராஜபக்சேவின் சர்வாதிகாரம் என்று மட்டும் கூறி இருதரப்பு போர்க்குற்றம் என்று பேசுகிறது. பாதிக்கப்பட்ட சமூகத்தையே குற்றவாளியாக்குவதில் தெளிவாக செயல்பட்டனர். உடனடியாக வடக்கு மாகாணத் தேர்தலை நடத்தவேண்டும் இல்லாவிட்டால் காமன்வெல்த் மாநாடு மாற்றப்படும் என்றும் ராஜபக்சேவுக்கு இந்த நிறுவனம் அறிவுறுத்துகிறது. வடக்கு மாகாண தேர்தல் என்பது ஏதோ தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தைப் பெற்றுத் தரும் வழிமுறை என்பதில்லை, தமிழர்கள் தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு, இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டு ஒற்றை இலங்கையில் வாழ சம்மதிக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்கு அறிவிப்பதே இவர்களின் அடிப்படை நோக்கம்.
இந்த நிறுவனத்தின் அறிக்கைகள் அடிப்படையிலேயே 2013இல் மீண்டும் LLRC அடிப்படையிலான அமெரிக்க தீர்மானம் வந்தது. அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரம் தமிழகம் முழுவதும் கடுமையாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 2013 மார்ச்சில் நடந்த மாணவர்களின் போராட்டம் அவர்களின் பிரச்சாரத்தை உடைத்தெறிந்து ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே, வேண்டியது இனப்படுகொலைக்கான விசாரணையே, அதைத் தவிர வேறெந்த தீர்மானத்தையும் ஏற்க மாட்டோம், தமிழீழ விடுதலையே ஒரே தீர்வு என்றும் உரக்கப் பேசியது. தமிழீழ விடுதலைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை எரித்துப் போட்டது. தமிழக அரசியலின் தள்ளாடல்களை எட்டித் தள்ளியது.
இதனால் இந்தியாவில் அரசியல் சூழல் தங்களின் அரசியலுக்கு எதிராக மாறுவதைக் கண்ட ICG ன் ஆலன் கீனன், THE HINDU பத்திரிக்கையில் ஐநா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும், என்ற ரீதியில் Why India needs to vote for U.N. resolution on Sri Lanka ஒரு கட்டுரையை வெளியிடுகிறார். அதில் தமிழ் நாட்டு உணர்வாளர்களை வன்முறையாளர்களாக பாவித்தும், தமிழ் நாட்டிலிருந்து முன்வைக்கப் படும் “இனப்படுகொலை” என்ற பதத்தை சுட்டிக் காட்டி, தமிழ்நாட்டின் உணர்ச்சி அரசியல் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுப்பதாகவும், டெல்லியின் கொள்கை வடிவமைப்பாளர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் பிராந்திய விருப்பங்களுக்கு (regional interests) ஏற்றார் போல மாறுவதாக குற்றம் சாட்டுவதாக தெரிவிக்கிறார். மேலும் இந்தியாவானது ஜப்பான், உலக வங்கி, ஏசியன் டெவலப்மண்ட் வங்கி போன்றவற்றுடன் இணைந்து, வடக்கு மாகாணங்களின் திட்டங்களுக்கும், அங்கு தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வடக்கு மாகாண தேர்தல் குறித்து பேசுகிறார். (http://www.thehindu.com/opinion/op-ed/why-india-needs-to-vote-for-un-resolution-on-sri-lanka/article4530401.ece)
ராஜபக்சேவும் வடக்கு மாகாணத் தேர்தலை நடத்தி முடிக்கிறான். தேர்தல் பிரச்சாரத்தில் தமிழீழ கோரிக்கையை கைவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிக்கிறது. இதே நேரத்தில் தான் 13 வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா சார்பில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதையே தமிழகத்திலிருந்து டெசோ போன்ற அமைப்புகள் முன்வைக்கின்றன. பிறகு இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்தும், இந்தியாவும் வெற்றிகரமாக நடத்தி முடிக்கிறது. அதில் இந்திய பிரதமர் பங்கேற்காதது போலவும், இங்கிலாந்து பிரதமர் கலந்து கொண்டு ராஜபக்சே வுக்கு எதிராகப் பேசுவது என்ற நாடக நிகழ்வு நடத்தப்படுகிறது. இதை மேற்கத்திய கார்பரேட் ஊடகங்கள் உரக்கப் பேசுகின்றன. இனப்படுகொலையை மறைத்து துணைபோன சாத்தான்கள் வேதம் ஓதுகிற போது நாம் இன்னும் அதிக கவனத்துடனிருக்க வேண்டும் என்ற உண்மையைத் தான் நாம் அப்போது கவனிக்க வேண்டியிருந்தது.
காமன் வெல்த் மாநாட்டுக்கு முன்பாக ICG ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் வடக்கு மாகாண தேர்தல் என்பது இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அழுத்தத்தின் வெற்றி என்றும், சர்வதேச அளவில் வரவேற்கக் கூடிய ஒன்று என்றும் குறிப்பிடுகிறது. மேலும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடிய நாடுகள் மனித உரிமை மீறல்கள் குறித்த நடவடிக்கைக்கு இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டுமென்றும், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒரு பொதுவான விசாரணை முறையையும் (இனப்படுகொலைக்கு அல்ல), ஒற்றை இலங்கைக்குள்ளான நல்லிணக்கத்திற்கான ஒரு அரசியல் தீர்வையும் அறிவிக்க வேண்டுமென்றும், மனித உரிமை ஆணையம் இலங்கையில் இரண்டு தரப்பின் மீதும் மனித உரிமை மீறல்கள் மீதான ஒரு சர்வதேச விசாரணைக்கான நடைமுறைகளை வடிவமைக்க தொடங்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையத்துக்கு முன் அறிவிப்பைக் கொடுக்கிறார்கள்.. தமிழர்களைப் போலவே சிங்களர்களும், இசுலாமியர்களும் ராஜபக்சே அரசால் பாதிக்கப்படுவதாக ICGயின் அந்த அறிக்கை தெரிவித்தது. இது மேலோட்டமாக பார்த்தால் உண்மைதானே என்று தோன்றினாலும், உண்மையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை மறுக்கும் ரீதியிலேயே இது முன்வைக்கப்பட்டது.
பின்னர் 2014 மார்ச் மாதத்தில் நடைபெற்ற மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கயில் நல்லிணக்கம், நீதி மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்த அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு மற்றும் தமிழர் தரப்பின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது சர்வதேச விசாரணை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க மேற்குலக சார்பு சர்வதேச அரசியல் வியாபாரிகளின் நிறுவனமான ICG யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பல்வேறு கூறுகளை இத்தீர்மானமும் உள்ளடக்கியிருந்தது. இத்தீர்மானம் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதை மறுத்து மத சிறுபான்மையினர் (Religious Minorities) மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டது. 1987 இலேயே தமிழர்கள் கிழித்தெறிந்த, 13 வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியது.
இதற்கு பின்னர்தான், புதிதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் மூவரில் இரண்டு பேர் இந்த ICG எனும் சர்வதேச வியாபார நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை பார்க்க முடிந்தது. இவர்கள் தொடர்ச்சியாக விடுதலை என்பதை மறுத்து Transitional Justice என்ற கோட்பாட்டின் மூலம் ஆட்சி மாற்றத்தையும், நல்லிணக்கத்தையும் மட்டுமே தீர்வாக தமிழீழ மக்கள் மீது திணிக்கப் பார்க்கிறார்கள். ராஜபக்சே வகையறாக்களை நீக்குவதும், அவர்களுக்கு தண்டனை கொடுப்பதும் எந்த அளவுக்கு முக்கியமானதோ அதைவிட முக்கியமானது தமிழர்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான தமிழீழ விடுதலை.
2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிகாரியான ராபர்ட் ப்ளேக் கொழும்பிலிருந்து பேசிய பேச்சு ஒன்றினை விக்கிலீக்ஸ் கேபிள் வெளியிட்டுள்ளது. அதில் நார்வே குழுவினருடன் மார்த்தி அத்திசாரி என்பவரை இணைத்து பேச்சு வார்த்தைக்கு பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார். அவர் சிறந்த பேச்சு வார்த்தையில் ஆளுமை மிக்கவர் என்ற ரீதியிலும் குறிப்பிடுகிறார். (Wikileaks cable: “The Co-Chairs could ask an experienced mediator such as Martti Ahtissari (who is probably busy) to work with the Norwegians to assume a more active mediation role to help the parties narrow their differences. This would of course require the consent of both parties.”). இந்த போரை வடிவமைத்ததில் ராபர்ட் பிளேக்கும் முக்கியமானவர். அவர் 2006 இல் தமிழீழ கோரிக்கையை கைவிட செய்வதற்காக பேச்சு வார்த்தைக்கு அழைத்த மார்த்தி அத்திசாரி தான் இன்று ஐ.நா விசாரணைக்குழுவின் நிபுணராக வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ICG நிறுவனத்தினர் அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் (NGO) அறிவு ஜீவிகள் என்று சொல்லிக் கொண்டாலும், உண்மையில் இவர்கள் அனைவரும் அமெரிக்க, மேற்கத்திய அரசுகளின், கார்பரேட்டுகளின் அதிகாரவர்கத்தை சார்ந்தவர்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. இவர்கள் பிரச்சினைகளை தீர்க்க வேலை செய்பவர்கள் அல்லர். மேற்குலக அரசுகள் மற்றும் கார்பரேட்டுகளின் பொருளாதார நலன்களுக்காக பிரச்சினைகளை உருவாக்கும் பொருளாதார அடியாட்களைப் போன்ற ஒரு குழுவினர். இதைத்தான் அரபு நாடுகளிலும், இவர்கள் தலையிட்ட ஏனைய நாடுகளிலும் பார்க்க நேர்ந்தது. இவர்கள் மேற்குலக நலனுக்காக விடுதலைப் போராட்டங்களை குலைப்பதையும், சில நாடுகளில் செயற்கை புரட்சியை உருவாக்கி பிரிப்பதையும் செய்வார்கள். தமிழீழத்தில் நடந்தது மனித உரிமை மீறலல்ல, போர்க்குற்றமல்ல அது ”இனப்படுகொலை” என்று தமிழர்கள் பேச ஆரம்பித்த 2010 காலக்கட்டத்தில் இந்த ICG அமைப்பினர் புலம் பெயர் அமைப்புகள் மற்றும் தமிழகத்தில் இருக்கக் கூடிய கட்சிகள் அனைவரையும் சந்தித்து பேசினர். இவர்கள் மே 17 இயக்கத்தையும் சந்தித்தனர். தோழர் தியாகு இந்த நிறுவனத்தினரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். நீங்கள் இனப்படுகொலை என்று குறிப்பிடக் கூடாது, போர்க்குற்றம் என்று சொல்லுங்கள் என்றும், தமிழீழ விடுதலை பற்றியெல்லாம் பேசாமல் நல்லிணக்கம் மற்றும் சம உரிமை குறித்து பேசுங்கள் என்றும் அந்த நிறுவனத்தினர் கூறினர். அதை மறுத்து இவர்களுக்கும் மே17 இயக்கத் தோழர்களுக்கும் நடைபெற்ற ஐந்து மணிநேர கடுமையான விவாதத்திற்கு பின் கோபத்துடன் வெளியேறினர்.
தெற்காசிய பிராந்தியத்தில், இந்தியப் பெருங்கடலை நோக்கிய வல்லாதிக்கங்களின் ஆக்கிரமிப்புப் போட்டியின் நடுவே அவர்களையெல்லாம் தடுத்து தலை தூக்கியிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டத்தினையும், போராளிகளையும் அழித்துவிட்டோமென்று கொக்கரித்திருந்தனர், இவர்களால் அழிக்க முடியாத ஒன்றாக தமிழ் மக்கள் மனதில் உயிர் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலை கோரிக்கை என்ற அரசியல் ஆயுதம்தான் இவர்களுக்கு புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. ஆயுதங்களை மவுனிக்கிறோம் என்று மட்டுமே சொல்லி, விடுதலைக் கோரிக்கையை வீரியத்துடன் விட்டு சென்ற விடுதலைப் புலிகளின் பிம்பத்தினை அழிக்கும் தேவையும் இவர்களுக்கு இருக்கிறது. மார்த்தி அத்திசாரி என்பவர் கொசோவா செர்பியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக பணியாற்றியவர் என்று அறியப்பட்டாலும், அதை அவர் செய்தது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நலன்களுக்காக என்பது குறிப்பிடத்தக்கது. கொசோவா விவகாரத்தில் பிரிவதற்கான அனைத்து நகர்வுகளையும் சர்வதேச அளவில் அமெரிக்க மேற்குலக நாடுகளே மேற்கொண்டன. ஆனால் தமிழீழ விவகாரத்தில் அமெரிக்க ஐரோப்பிய வல்லாதிக்கங்கள் ஆரம்பம் முதலே தனி நாடு என்பதை எதிர்த்தே வருகின்றன. இந்த பிராந்தியத்தில் தன்முனைப்புடனும் சுய சார்புடனும் கூடிய ஒரு நாடு, மக்களையும் மண்ணையும் நேசிக்கும் போராளிகளின் தலைமையில் அமைவதை இந்த ஏகாதிபத்தியங்கள் ஒரு போதும் வரவேற்க்காது. ஏனென்றால் அது அவர்களின் சுரண்டலுக்கும், ஆதிக்கத்துக்கும் எப்போதும் சாதகமானதாக இருக்காது.
புலிகளை நோக்கி தமீழீழ விடுதலையை கைவிட வேண்டும் என்று கூறியவர்கள், போர் முடிவதற்கு முன்பே, போர் நிறுத்தம் கோராமல் நல்லிணக்கத்தை பேசியவர்கள், தமிழீழத் தமிழர்கள் புலிக்கொடியை பிடிக்கக்கூடாது, புலிகள் மீதான விசாரணையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியவர்கள் இன்று விசாரணைக் குழு நிபுணர்களாய் வந்திருக்கிறார்கள். இந்த அரச சார்பு தொண்டு நிறுவனங்களையும், அரசுகளையும், அவர்களின் நகர்வுகளையும் தொடர்ந்து கவனிக்க வேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது. நமக்கு ஆதரவாக பேசுவதைப் போலிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக எவனையும் நாம் தூக்கிக் கொண்டாடுகிற சமூகமாக தொடர்ந்து இருக்க முடியாது. அவர்கள் பேச்சின் முழு உள்ளர்த்தத்தையும் கவனிக்கவும், அலசவும் வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.
எண்ணற்ற போராளி மக்களையும், திலீபன்களையும் இழந்து காத்தது 60 ஆண்டு கால விடுதலைக் கோரிக்கை. அந்த கோரிக்கையினை சர்வதேச வியாபாரிகளின் காலடியில் ஒப்படைக்க தமிழ்ச் சமூகம் அனுமதிக்கக் கூடாது. தமிழீழப் போராளிகளின் மீது பயங்கரவாதப் பட்டம் கட்டுவதென்பது 60 ஆண்டு கால கோரிக்கையின் நியாயத்தை சிதைப்பது. அதை ஒருபோதும் நாம் அமைதியாக கடந்து செல்ல முடியாது. நமது கவனமும் போராட்டமும் மட்டுமே தமிழீழ விடுதலைக் கோரிக்கையைக் காப்பாற்றக் கூடிய கருவி. இலங்கையில் நடைபெற்றது 60 ஆண்டு கால இனப்படுகொலையே. தமிழீழ விடுதலை ஒன்றே தமிழர்களின் கோரிக்கை. தமிழீழ விடுதலைக் கோரிக்கையை அழிக்க நினைக்கும் சக்திகளையும், அதற்கு துணைபோகும் சக்திகளையும் தொடர்ந்து அம்பலப்படுத்துவோம்.
– விவேக், மே17 இயக்கம் (vivekvec@gmail.com)

1 Comment

  1. மிக மிக மிக அற்புதமான கட்டுரை! தமிழீழத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை! இவ்வளவு ஆழமான, நுணுக்கமான, ஆராய்ச்சி மிகுந்த கட்டுரையைப் படைத்ததற்காகக் கட்டுரையாளர் விவேக்குக்கும், வெளியிட்ட மே 17 இயக்கத்துக்கும் மிக்க நன்றி!

Leave a Reply