கட்டலோனியா அரசு மே பதினேழு இயக்கத்திற்கு அனுப்பியுள்ள நன்றி கடிதம்.

- in பரப்புரை

ஸ்பெயின் நாட்டிலிருந்து விடுதலை பெற்று பிரிந்து சென்று சுய நிர்ணய உரிமையுடன் தனித்தேசமாக மலர்வதற்காக கட்டலோனியா அரசு தனது மக்களிடத்தில் ஒரு பொதுவாக்கெடுப்பினை அக்டோபர் 1 ம் தேதி நடத்தியது.

கட்டலோனிய அரசின் முடிவிற்கும், கட்டலோனியா தனித்தேசமாக உருவெடுப்பதற்கும் வாழ்த்து தெரிவித்து மே பதினேழு இயக்கம் சார்பில் கட்டலோனிய அதிபருக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தோம். ஏற்கனவே கடந்த ஆண்டு மே பதினேழு இயக்கம், ஈழ விடுதலைக்காக போராடும் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து கட்டோலோனிய பாராளுமன்றத்தில் அந்த பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசியிருக்கிறது.

தமிழ்நாட்டிலிருந்து நமது ஆதரவிற்கு நன்றி தெரிவித்து அந்நாட்டு அதிபரின் சார்பில் நன்றிக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக்கெடுப்பினில் 92 சதவீத மக்கள் கட்டலோனியா பிரிந்து தனி நாடாக உருவாக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். ஸ்பெயின் அரசு இந்த வாக்கெடுப்பினை தடை செய்து, தனது படைகள் மூலம் ஏவிய அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் அஞ்சாமல் கட்டலோனிய மக்கள் பொதுவாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்.

மறுக்கப்பட்ட சுய நிர்ணய உரிமையை, தானே எடுத்துக் கொள்வது என்ற கட்டலோனிய அரசின் இந்த துணிச்சலான முடிவு உலகத்தில் விடுதலைக்காக போராடும் தேசிய இனங்களுக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

கட்டலோனியா சுய நிர்ணய உரிமை மீதான தனது தீர்க்கமான முடிவினை உலகுக்கு சொல்லியிருக்கிற இந்த நேரத்தில் ஸ்பெயின் அரசு, கட்டலோனியாவின் தன்னாட்சி அதிகாரத்தினை பறிக்கப்போவதாகவும், பிரிந்து செல்லும் முடிவை கைவிடா விட்டால் கட்டலோனிய அதிபரை கைது செய்வோம் என்றும் ஜனநாயகமற்ற முறையில் அறிவித்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் வாழ்கிற 8 கோடி தமிழர்களாகிய நாமும், உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழ்கிற தமிழர்களும் கட்டலோனிய மக்களுக்கு துணை நிற்க வேண்டும்.

ஆதிக்கமும், ஆக்கிரமிப்புகளும் வீழ்த்தப்பட வேண்டும். தமிழீழமும், கட்டலோனியாவும் விடுதலை பெற வேண்டும். துணை நிற்போம்.

– மே பதினேழு இயக்கம்

Leave a Reply