தேர்தல் அரசியல் இயக்க அரசியல் ஒரு பார்வை – பாகம் 3

எங்களிடம் மட்டும் ஆட்சியை கொடுத்து பாருங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன், அமெரிக்காவாக மாற்றிக்காட்டுகிறேன் என்ற முழக்கம் 60ஆண்டுகளுக்கு மேலாக நமது காதுகளில் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது. ஆனால் உண்மை நிலைமை என்ன தமிழ்நாட்டை சிங்கபூராகவெல்லாம் மாற்ற வேண்டாம் குறைந்த பட்சம் தமிழ்நாட்டை தமிழ்நாடாகவாவது விட்டு வையுங்கள் என்று கேட்கும் அவல நிலைமைக்கு நம்மை ஆட்சி செய்தவர்கள் கொண்டுவந்து
விட்டுவிட்டார்கள். உண்மையிலேயே ஆட்சியிலிருப்பவகளால் இந்திய அரசின் கீழ் இருந்துகொண்டு தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுவரமுடியுமா? முடியாது முடியவே முடியாது என்பது தான் எதார்த்தம்.

எந்தவொரு மாநிலமும் தங்களது மாநிலத்தை முன்னேற்ற நிதி அவசியம். அந்த நிதியை பல்வேறு வரிகளின் மூலமே திரட்டிக்கொள்கிறது. அதன்படி இந்திய அரசியலமைப்பு முறைக்குள் மாநில அரசுகள் வரிவருமானத்தை பெற்று மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்றால்? அதற்கு வாய்ப்பேயில்லை. ஏனென்றால் அரசியலமைப்பு சட்டம் எழுதிய காலத்திலிருந்தே வரி முறையில் நீண்ட காலத்துக்கு எந்தவித தடங்களுமில்லாமல் வரி வருமானம் வரும் அனைத்தையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டது. மக்களை நசுக்கி பிழியும் வரிகளை வசூல் செய்யும் முறையை மட்டுமே மாநிலங்களுக்கு ஒதுக்கியது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டபோது மத்திய அரசு பட்டியலுக்கு 12வரிகளை வசூல் செய்யவும், மாநிலங்கள் 19வரிகளை வசூல் செய்யவும் சட்டமியற்றப்பட்டது. அடடே மாநிலங்களுக்கு அதிகமான வரி பட்டியல் இருக்கிறதே என்று உடனடியாக மகிழ்ச்சியடைய வேண்டாம். அதில் தான் சூழ்ச்சியே இருக்கிறது. உதாரணமாக மாநில அரசு பட்டியலிலுள்ள வரிகளில் சிலவற்றை பார்த்தாலே இதை புரிந்துகொள்ளமுடியும். ஆதாவது
கால்நடை மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. ஆனால் யாராவது ஆடு, கோழி, மாடு போன்ற ஏழை மக்கள் பயன்படுத்துவதின் மீது அதிக வரி போடமுடியுமா? இது எவ்வளவு நயவஞ்சகமான வேலை.

இதேபோல இன்னொன்று ’தலைவரி’அதாவது தலை இருப்பவர் மேலெல்லாம் வரி போடும் இந்த அபத்தமும் மாநில அரசிடம் ஓப்படைத்திருக்கிறது. அடுத்த கொடுமை ’நிலவரி’ அதாவது நிலமெல்லாம் மொத்தமாக ஜாமின்தாரிகளிடமிருந்த போது போடப்பட்ட வரிகளை தற்போது நிலங்கள் குடியானவர்க்கும் பிரித்துகொடுத்தவிட்டபின்பு அவர்கள் கடினப்பட்டு உழைக்கும் மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் பணத்தை பிடுங்க முடியுமா? 1951இல் நிலவரி மூலம் மாநிலங்களுக்கு கிடைத்தவருமானம் 21% அதுவே 1971-72 காலகட்டத்தில் வெறும் 6%மாக குறைந்துவிட்டது.

அடுத்து மின்சார வரி அதுவும் 1991க்கு பிறகு மன்மோகன் அரசு இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு கொண்டு போய் விட்டார்கள். இப்படி மாநில அரசுக்கு நிலையற்ற வரிமுறைக்கொண்ட பட்டியலை கொடுத்துவிட்டு மத்திய அரசுக்கு என்றுமே குறையாத வருமானம் வருகின்ற வருமானவரி, கார்ப்ரேசன் வரி, எஸ்டேட் வரி, வெல்த் வரி, எக்சைஸ் டூட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு மாநில அரசுகளை சுரண்டி கொழுக்கிறது. இதனால் மாநில அரசுகள் எப்பொழுதும் மத்திய அரசை நம்பித்தான் இருக்க வேண்டும். மாநில அரசுகள் தனித்து ஒரு ஆணியையும் பிடுங்க முடியாது என்பது தான் எதார்த்தம். இதைத்தான் அரசியல் நிர்ணய சபையில் கே.சந்தானம் அன்றே சொன்னார்.

”மாநில அரசுகள் மத்திய அரசிடம் பிச்சைகாரர்களை போல கையெந்தி நிற்கவேண்டுமென்பதற்காகவே இந்த வரிமுறைகள் உள்ளன”

இதெல்லாம் கடந்த காலங்களில் தற்போது அந்த பிரச்சனையே இல்லை இருந்த கொஞ்ச நஞ்ச வரிவசூல் அதிகாரத்தை பிஜேபி மோடி அரசு GST கொண்டுவந்து மொத்தமாக வாரி சுருட்டிக்கொண்டு போய்விட்டது. இனி இந்தியாவில் மாநில அரசுகள் தம் மக்களுக்கு எந்தவித திட்டங்கள் செய்ய வேண்டுமென்றாலும் மத்திய அரசிடம் உண்மையிலேயே பிச்சை தான் எடுக்க வேண்டும். மேலும் மத்திய அரசு சொல்லுகிற அனைத்திற்கும் கட்டுப்பட்டு அடிமையாக இருந்தால் தான் குறைந்தபட்சமாவது நடக்கும்.

இப்படி ஒரு அரசியல் சட்டத்தை வைத்துக்கொண்டு அதன்மூலம் ஆட்சிக்கு வருபவர்கள் நாங்கள் தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவோமென்று சொல்வது ஏமாற்று வேலை தானே?

 

 

Leave a Reply