தமிழீழப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு – தமிழீழ மக்களுக்கும், போராளிகளுக்குமான நினைவேந்தல்

- in பரப்புரை
3 மே 2012

தமிழீழ விடுதலையும்;தமிழீழ இன அழிப்பும்.: 
சர்வதேச அங்கீகாரமும் தமிழகத் தமிழர்களின் முன்னெடுப்பும்.




தமிழீழப் படுகொலையின் மூன்றாமாண்டு நினைவு – தமிழீழ மக்களுக்கும், போராளிகளுக்குமான நினைவேந்தல். 

மூன்று ஆண்டுகள் முடிந்தும் இன அழிப்பு தடுக்கப்படவில்லை தமிழீழத்தில். சர்வ தேசம் தனது சட்டங்களை விடுதலைப் போரில் நின்று தமிழர்களை காத்த போராளிகளுக்கு எதிராக பயன்படுத்தி அந்த மக்கள் கொன்று குவிக்கப்பட மறைமுகமாகவும், நேரடியாகவும் நின்று துணை செய்து தற்போது தனது சுய லாபங்களுக்காக இலங்கையுடனும், இலங்கைக்கு எதிரான அணி என்றும் பிரிந்து நிற்கிறது. இரு அணிகளுமே தமிழர்களின் விடுதலைப் போரினை அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தனது நகர்வுகளில் தமிழர்களுக்கான உரிமையைப் பற்றிய குறிப்புகளை தவிர்த்தே வருகின்றன

தமிழீழத்தமிழர்கள் தங்களது அரசியல் கோரிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கக்கூடிய இந்த காலத்தில் கூட்டு செயல்பாட்டு வழிமுறைகளையும், சர்வதேச அளவில் இத்தகைய இவ்வாறு பாதிக்கப்பட்ட இனங்கள் தாங்கள் முன்னெடுத்த வெற்றிகரமான வழிமுறைகளை பின்பற்றி செயல்படுவதும் அவசியமாகிறது.

குறிக்கோள் ஒன்று என்ற போது பலவேறு அமைப்புகளாக பிரிந்து நிற்பது என்பது உண்மையிலேயே பிளவுகளாக கருதமுடியாது. பல தளங்களின் மூலம் தங்களது குறிக்கோளிற்காக தாங்கள் நம்பும் வழிமுறைகளில் நமது சமூகம் முன்னேறுகிறது என்றே நாங்கள் கருதுகிறோம். ஒற்றைக் குறிக்கோளாகிய ’தமிழீழ விடுதலை”யை நாம் மேலும் கூர்மையான போராட்டங்களின் வழியே முன்னெடுப்போம்.

இவ்வகையில் தமிழீழத்தில் நடைபெற்றது இன அழிப்பும், அதனுடே நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனப்படுகொலையும் சர்வதேச மக்கட்ச்சமூகத்தின் கவனத்தில் பதிய வைத்தல் அவசியம். இது சர்வதேச அரசுகளை மட்டுமே கணக்கில் எடுக்கும் செயல் அல்ல.

2009இல் இந்தியாவில் காங்கிரஸ் அரசு பதவியேற்ற கணத்தில் மன்மோகன் சிங்கும், சோனியாவும் சீக்கியமக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் பகிரங்க மன்னிப்புக் கோரினர். அப்போது சீக்கியச் சமூகத்தின்  குரலாக பதியப் பெற்றது, ‘சீக்கியர்களுக்கு நிகழ்ந்தது, ஒரு இனப்படுகொலையே என்கிற அங்கீகாரமே நாங்கள் எதிர் நோக்கும் கோரிக்கை’ என்றார்கள்.  ஏப் 24, 1915இல்  தங்களுக்கு நிகழ்ந்த படுகொலை என்பது ஒரு இனப்படுகொலை என்று ஆர்மீனியர்கள் இன்றும் அங்கீகரிக்கப்பதற்காக போராடுகிறார்கள். இதன் தொடர்ச்சியாகவே இந்த வருட துவக்கத்தில் பிரான்சு  நாட்டு அரசாங்கத்தில் இதைப்பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. ஆர்மீனியர்கள் கடந்த 95 வருடங்களாக போராடுகிறார்கள். http://www.nytimes.com/2012/01/24/world/europe/french-senate-passes-genocide-bill-angering-turks.html
http://www.nytimes.com/2012/02/29/world/europe/french-bill-on-armenian-genocide-is-struck-down.html

இவை அனைத்தும் தங்களுக்கு நிகழ்ந்த வரலாற்று அநீதியை நிரூபிக்கவும் தங்களது விடுதலை கோரிக்கையை வலுப்படுத்தவும் நடைபெறும் போராட்டங்களாகும்.  தமிழர்களாகிய நாமும் இந்த சூழலில் இன்று சர்வதேச அளவில் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். குறிப்பாக தமிழகத் தமிழர்கள் இந்திய அரசு இந்த இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குதலும் அதன் மூலமாக சிங்களம் தாண்டி இந்த இனப்படுகொலையில் பங்கெடுத்த அனைவரையும் சிறைப்படுத்துதலை வென்றெடுப்பதும் அவசியமும், கட்டாயமும் ஆகிறது. ஒவ்வொரு புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்களும் தாங்கள் சார்ந்து நிற்கிற அரசுகள் இத்தகைய தீர்மானத்தினை நிறைவேற்றும் போராட்ட்த்தினையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுத்தல் அவசியம்.

ஐரோப்பிய நாடுகளில் யூதர்களுக்கு நாசிக்களின் ஆட்சியில் நடைபெற்றது இனப்படுகொலையல்ல எனப்பேசுவது சட்டப்படி குற்றமாக்கப்பட்ட சட்ட இயற்றலை நாம் அறிவோம். இதே போன்றதொரு சட்டமியற்றலுக்காக ஆர்மீனிய மக்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதே வகையில் தமிழர்களும் போராடுதல் அவசியம். தாங்கள் குடியிருக்கும் நாடுகளில் இத்தகைய சட்டங்களை கொண்டு வருவதற்கு நாம் போராட வேண்டும். அந்த வகையில், தமிழீழத்தில் இனப்படுகொலை நடைபெறவில்லை எனப் பேசுவது, எழுதுவது, பதிவு செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய செயலாக மாற்றும் வகையில் சட்டங்களை அந்த நாடுகள் நிறைவேற்ற செயல்புரிய வேண்டும். (http://en.wikipedia.org/wiki/Laws_against_Holocaust_denial ). சட்டங்களை விட விவாத்ததின் மூலம் வென்றெடுத்தல் அவசியம் என்றாலும் தற்போதய நமது பாதுகாப்பிற்கு உத்திரவாதமற்ற நிலையிலும், அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும் இத்தகைய சட்டங்கள் நமக்கு பெரிதும் உதவியாக அமையும்.

இந்தவகையில், இனப்படுகொலை நடந்த மே மாதத்திய நமது போராட்டங்கள் முக்கியமானவையாக மாறுகின்றன. வரும் மூன்றாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சிகள் சம்பிரதாயங்களாக மட்டுமே நிகழ்ந்துவிடாமல் இந்த ”இன அழிப்பு” அங்கீகாரத்தை நோக்கியதாகவும், தமிழீழ வாக்கெடுப்பினை மையப்படுத்தியதாகவும் அமையவேண்டும். ஏனெனில் நமக்கு நடந்த இனப்படுகொலையும்-இன அழிப்பும் என்பது நாம் விடுதலையை வேண்டி போராடியதால் நிகழ்ந்ததே ஆகும். எனவே நமது விடுதலை கோரிக்கையை நினைவு படுத்துவதும் இன அழிப்பினை குறிப்பதுமாக இருக்கும் பட்சத்தில் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள், மொழி உள்ளிட்டவைகள் சிங்கள அரசின் அழிப்பில் இருந்து மீட்க பேருதவியாக அமையும்.

சென்ற வருட்த்தில் ஜூன் 26 ஐ. நாவின் சித்திரவதைக்கு எதிரான தினத்தில்  சென்னையில் ஐ.நாவினதும் ஏனைய நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் சென்னை மெரினா கடற்கரையில் பெரும் நினைவேந்தல் நடத்தப்பட்டது. கிட்டதட்ட 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள், உணர்வாளர்கள், தலைவர்கள், வேற்று மொழி மக்கள் கலந்து கொண்டு தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலை என்பதான கோரிக்கைக்கு வலுசேர்த்தார்கள்.

இதனடிப்படையில் இந்த வருடம் இனப்படுகொலை வாரத்தில் மே மாதம் 20ஆம் நாள் சென்னை மெரினாவில் சென்ற வருடத்தைப் போன்று பொதுமக்கள் பங்கேற்கும் நினைவேந்தலை கீழ்வரும் இரண்டு கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு நடைபெறவேண்டும் என விரும்புகிறோம்.

1. தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை உள்ளிட்ட இன அழிப்பே.
2. தமிழீழ விடுதலைக்கான ஐ. நாவின் பொது வாக்கெடுப்பு உடனடியாக நடைபெற வேண்டும், குற்றவாளிகள் சர்வதேசத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும்.
சர்வதேசம் நேர்மையாக தமிழர்களிட்த்தில் நடந்து கொள்கிறதன் அடிப்படை. ஆகவே உடனடியாக வாக்கெடுப்பை நடத்து.

இந்த கருத்துப் பதிவுகளை மக்களிடத்தில் ஏற்படுத்தவும், மக்கட்ச் சமூகங்களிடயே ஏற்படுத்தவும், அரசுகள் கவனத்தில் எடுக்கவும், அறிவுச்சீவிகள்-கலைஞர்கள் இந்த கோரிக்கைகளை மேலும் கூர்மை படுத்தவும் இந்த நினைவேந்தல் சென்னை மெரினாவில் மே 20 ஆம் தேதி நடைபெறுதல் அவசியமாகிறது. இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கம் மட்டுமே நட்த்துகிற நிகழ்வாக அமையாமல் அனைத்து தோழமை இயக்கங்களும் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் இருந்து மேற்கண்ட கோரிக்கைகள் உள்ளடக்கிய முழக்கங்களை முன்வைத்து இந்த நினைவேந்தலில் பங்களிக்க வேண்டுகிறோம். இந்த நிகழ்வை தங்களுடைய சொந்த நிகழ்வாக மாற்றி, தங்களுடைய இயக்கத்தின் பெயரிலேயே  அதற்கான பரப்புரைகளை மேற்கொள்ளுதலை வரவேற்கிறோம். மே பதினேழு இயக்கம் ஒழுங்கமைவு பணிகளை மேற்கொள்ளக் கூடியதாக செயல்படும், மேலும் விருப்பமுள்ள அமைப்புகள் எங்களது ஒழுங்கமைப்பு பணிகளில் பங்கெடுத்து செழுமை பெறச்செய்ய உதவுமாறும் வேண்டுகிறோம்.

2009 இல் தமிழீழ மக்களின் ரத்தம் கலந்த அதே தமிழர்கடலின் கடற்கரையில் மே 20, 2012 ஆம் நாள் மாலையில் கண்ணகி சிலையின் அருகே ஒன்று கூடி நமது வணக்கங்களை தமிழீழ விடுதலை போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் செலுத்துவோம். நாம் இணைவோம்.

மே பதினேழு இயக்கம்.
9444146806

Leave a Reply