- in பரப்புரை
பணக்கார நிறுவனத்தின் வசதிக்காக வெளியேற்றப்படவுள்ள 40000 மசாய் இன மக்கள்.

தான்சானியாவிலும், கென்யாவிலும் வசித்து வரும் பழமை மாறாத, வேட்டையாடி வாழ்கிற வீரமிக்க இனமக்கள் மசாய் மக்கள். தங்கள் பண்பாட்டின் எச்சம் மாறாமல் இன்றும் வசித்து வருகிறார்கள்.

அவர்கள் வசிக்கிற வனப் பகுதியை துபாய் குடும்பம் ஒன்று விலைக்கு வாங்கியுள்ளதால், 40000 மசாய் இன மக்களை சொந்த நிலத்திலிருந்து வெளியேற்ற தான்சானிய அரசு முடிவெடுத்திருக்கிறது.

தங்களின் நிலத்தைக் காப்பதற்காக அம்மக்கள் கடுமையாக போராடி வருகிறார்கள்.

தொடர்ச்சியாக தங்களை வெளியேற்ற முயன்று வரும் அரசு, இப்போது 1 பில்லியன் ஷில்லிங்ஸ்(£ 369,350) சமூக திட்டங்கள் தருவதாக சொல்லி வெளியேற சொல்வதாக மசாய் மக்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சலுகையை மசாய் மக்கள் மறுத்திருக்கிறார்கள்.

“1பில்லியன் என்பது மிகச் சிறியது. அதை எங்கள் நிலத்துடன் ஒப்பிட முடியாது. எங்கள் மண் மரபுகளை உள்ளடக்கியது. எங்கள் தாய்மார்களும், மூதாதையர்களும் இந்த மண்ணில்தான் எரிக்கப்பட்டார்கள். எனவே எதையும் எங்கள் மண்ணுடன் ஒப்பிட முடியாது.” என்று மசாய் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அந்த மண்ணுக்காக போராடும் பலர் காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆர்டெலோ பிசினஸ்கார்பரேசன் என்ற கம்பெனி இதற்கு தரகு வேலை பார்த்து ஒரு வசதி படைத்த நிறுவனத்துக்கு தங்கள் நிலத்தை விற்க ஒப்பந்தம் செய்திருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். “வசதியான வேட்டைக்காரர்களுக்கு வழி உருவாக்கித்தர,
கடந்த ஆண்டே இந்த நிறுவனம் எங்கள் மக்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது. எங்களின் வீடுகள் எரிக்கப்பட்டன. காவல்துறையால் நாங்கள் கடுமையாக தாக்கப்பட்டோம்”

” நாங்கள் எங்கள் இனத்துக்காக தொடர்ந்து போராடுவோம். முன்பை விட இப்போது நாங்கள் ஆற்றல் பெற்றிருக்கிறோம்”
என்று உறுதியுடன் தெரிவிக்கின்றனர் மசாய் மக்கள்.

எவருக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, இயற்கையோடு ஒன்றி பழமையோடு வாழ்ந்து வரும் பழங்குடி இனங்கள் கார்பரேட் நிறுவனங்களின் பணப்பசிக்காகவும், பொழுதுபோக்கு வசதிகளுக்காகவும் துரத்தித் துரத்தி கொல்லப்படுகிறார்கள். இந்த ரத்தக் கொலைகளையெங்லாம் மறைத்துவிட்டுதான் இந்த உலகம் ஜனநாயகத்தையும், வளர்ச்சியையும் பேசிக் கொண்டிருக்கிறது. இந்த மண்ணும், அதன் வளமும் மக்களுக்கானதே. மசாய் மக்களின் போராட்டம் வெல்லட்டும்.
மசாய் மக்களின் வீரத்திற்கு சான்றான ஒரு காணொளி.
https://www.youtube.com/watch?v=TBpu4DAvwI8

விவேக்-மே 17 இயக்கம்

Leave a Reply